முனைவர் ஜெ. தேவி
தமிழ் சமூகத்தில் கல்வி என்பது அறிவைப் பெறும் செயலாக மட்டுமல்லாமல், ஆசிரியர்- மாணவர் உறவின் வழியாக பண்பாடு, ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் நெறிகளைப் பெறும் செயலாகவும் கருதப்படுகிறது. ஆசிரியர் அறிவை வழங்குபவராகவும், மாணவர் அதை ஏற்று வாழ்க்கையில் நடைமுறைப்படுத்து
பவராகவும் விளங்குகின்றனர். எனவே, கல்வியின் வெற்றி என்பது பாட அறிவில் மட்டும் அளவிடப்படுவதில்லை; ஆசிரியரும் மாணவரும் உருவாக்கும் உறவின் தரத்தாலும் அளவிடப்படுகிறது.
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் மொழி இலக்கணத்தை மட்டுமல்லாது, தமிழர் சமூகத்தின் பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகளையும் பதிவு செய்கிறது. தமிழர் சமூகத்தில் அறிவும் ஒழுக்கமும் இணைந்த வாழ்வியல் மரபு நிலவியதை அது உணர்த்துகிறது. கல்வி என்பது வெறும் அறிவைப் பெறுவதற்கான கருவியாக அல்லாமல், பண்புடனும் பொறுப்புடனும் வாழ்வதற்கான வழிகாட்டியாகக் கருதப்பட்டது.
தொல்காப்பியத்தில் இடம்பெறும்,
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
என்ற நூற்பா அன்பு, ஒழுக்கம், பொறுமை, பிறரைப் போற்றுதல் போன்ற உயரிய பண்புகளை எடுத்துரைக்கிறது. இந்தப் பண்புகள் குடும்ப வாழ்வுக்கு மட்டுமன்றி கல்விச் சூழலிலும் அவசியமானவையாகும். ஆசிரியர்- மாணவர் உறவின் நிலைத்தன்மைக்கும் இந்தப் பண்புகளே அடித்தளமாக அமைகின்றன.
திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை உயர்த்திப் பேசுகிறார்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)
என்ற குறள் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்துகிறது. மேலும்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (குறள் 391)
எனக் கூறி, கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்
படுத்த வேண்டியதன் அவசியத்தை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். கல்வி என்பது தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்ல; மனிதனை முழுமைப்படுத்துவதற்காகவும் என்பதை இந்தக் குறள்கள் எடுத்துரைக்கின்றன.
ஆசிரியர்களையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்,
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் 892)
எனத் திருவள்ளுவர் கூறுகிறார். அறிவை வழங்கும் ஆசிரியரை மதிப்பதும், அவர்களின் அனுபவத்தைப் போற்றுவதும் மாணவரின் அடிப்படைக் கடமையாகும் என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது.
நாலடியாரும் கல்வியின் உண்மையான பயன் அறிவைப் பெறுவதில் மட்டும் இல்லை; அதை உணர்ந்து வாழ்வதில் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.
ஓதியும் ஓதார் உணர்விலார்; ஓதாதும்
ஓதி அனையார் உணர்வு உடையார்.
என்ற பாடல், வெறும் மனப்பாடம் கல்வியாகாது; கற்றவற்றை உணர்ந்து செயல்படுத்துவதே உண்மையான கல்வி என வலியுறுத்துகிறது.
ஆசிரியர் அறிவை வழங்குபவராக இருந்தாலும், அதைப் புரிந்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மாணவரின் பொறுப்பாகும்.
இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி கல்வி முறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையவழிக் கல்வி, செயற்கை நுண்ணறிவு, மின்னணு கற்றல் போன்றவை மாணவர்களுக்கு அறிவைப் பெறும் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. இருப்பினும், மனிதநேயம், ஒழுக்கம், பொறுப்புணர்வு, சமூகப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது. கல்வி என்பது தகவல்களைப் பெறும் செயலாக மட்டுமல்ல; மனிதனை உருவாக்கும் செயலாகவும் இருக்கிறது.
எனவே, கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்-மாணவர் கலந்துரையாடல்களை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவையும் அனுபவத்தையும் மதித்து நடக்க வேண்டும். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, அன்பு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும் ஆசிரியர்- மாணவர் உறவே சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும்.
தமிழ் இலக்கியங்கள் ஆசிரியர்-மாணவர் உறவை கல்வியின் அடிப்படைக் கூறாகக் கருதுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்ற நூல்கள் கல்வி, ஒழுக்கம், பணிவு,
நன்றியுணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் காட்டும் நெறிகளை இன்றைய கல்விச் சூழலில் பின்பற்றினால், கல்வி நிறுவனங்கள் அறிவை வழங்கும் இடங்களாக மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களை உருவாக்கும் பண்பாட்டுக் கூடங்களாகவும் விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது; மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!

பொறியியல் கல்வியை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் விஸ்வநாதன்

கல்விக்கு அழிவில்லை!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



