மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிந்தை உறைபவன்!

உலகத்தைப் படைத்ததும், இயற்கையைப் படைத்ததும், உயிர்களைப் படைத்ததும் கடவுள் என்று கடவுள் நம்பிக்கையாளர்களும், இல்லை, அவை தானாக ஒன்று மற்றொன்றாக மாறி வருகிறது என்று கடவுள் மறுப்பாளர்களும் கூறி வருகின்றனர்.

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 3:08 pm

முனைவர் பா.சக்திவேல்

உலகத்தைப் படைத்ததும், இயற்கையைப் படைத்ததும், உயிர்களைப் படைத்ததும் கடவுள் என்று கடவுள் நம்பிக்கையாளர்களும், இல்லை, அவை தானாக ஒன்று மற்றொன்றாக மாறி வருகிறது என்று கடவுள் மறுப்பாளர்களும் கூறி வருகின்றனர். கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? இருக்கின்றாரெனில் எங்கிருக்கிறார் என்ற கேள்வியை தொன்றுதொட்டு எழுப்பி வருகின்றனர்.

பக்திப் பனுவல்கள் மூலமும், இறை போற்றும் பாடல்கள் மூலமும் தமிழையும், சமத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் செறிவுற வளரச் செய்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும் என்பது கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால உண்மை.

கடவுளை புறக்கூறுகளில் மட்டும் காண முற்படாமல் அகத்தே நினைந்து ஆனந்தம் அடைதலைத்தான் சைவ சாதனையாளர்களும், வைணவப் பெரியார்களும் உணர்ந்து ஏனையோருக்கும் தங்களது பாடல்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். சிந்தையில் தங்கி விந்தைகள் புரியும் இறைவனின் அருள் விளையாட்டுகளை இறையருளாளர்களின் வரிகள் வாயிலாகச் சிந்திப்போம்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து, திருப்பாட்டை தமிழில் இசைத்து இறைபதம் அடைந்த சுந்தரர், சுந்தரத் தமிழுக்குச் சொந்தக்காரர். அவரின் தலமுறை பதிகங்களில், சிந்திக்கின்றவர்களின் சிந்தனை என்னும் சிங்க ஆசனத்தில் இறைவன் உறைந்து நிற்கின்றான் என்பதாக வெளிப்படுத்துகிறார்.

'வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்

வளவயல் நாவலாரூரன் பேசின' என்றும்,

'சிந்திப்பராவர் சிந்தையுளானை' என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருஞான சம்பந்தர், இறைவனைப் பணிந்துப் புகழ்ந்து ஏத்திச் சிந்தனை செய்பவர்களுக்கு அன்றி அவர் அருட்திருப்பார்வை மற்றவர்களுக்குக் கைகூடாது என்று திருக்கடைக்காப்பில் மொழிந்துள்ளார்.

'எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர்

கடவுள் என்று ஏத்திச்

சிந்தை செய்பவர்க்கு அல்லால்

கைகூடுவது அன்றால்'

திருநாவுக்கரசு நாயனார், இறைவன் தன் சிந்தையினுள் வாசம் செய்கின்றார் என்று 'சிந்தை வாய்தலுளான்' என்றும், 'மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி' என்றும் பாடுகிறார்.

ஞானத்தில் ஞானத்தை தேடிய பழவடியார்களில் மெய்யடியவராகப் பிறப்புகண்ட மணிவாசகப்பெருமான் தான் படைத்த திருவாசகத்தில்

'என் சிந்தனையில் ஊற்றான உண்ணாரமுதே'

'சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்'

'சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும்

திருப்பெருந்துறையுரை சிவனே'

என்றும் சிந்தித்துள்ளார்.

பேரருளும் பேராற்றலும் பெற்ற இறைவன் உறைந்திருக்கும் உயர்ந்த ஆலயம் அவரவர் உள்ளம் என்று திருமூல சித்தரும் பறைசாற்றியுள்ளார். ('உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்')

ஆண்டாள் நாச்சியார், தான்இயற்றிய திருப்பாவையில் தூய்மையான மனம் கொண்டவர்களாக வந்து புனிதமான மலர்களை இறை திருவடிகளில் தூவித் தொழுது, இறைவனின் திருநாமத்தை உச்சரித்து புகழ்ந்துபாடி மனதால் இறையருளை சிந்திப்பவர்களுக்கு முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அனைத்தும் தழலில் இட்ட துரும்பு போல தொலைந்து விடும் என்று உவமையுடன் எடுத்தியம்புகிறார். ('வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க')

பூதத்தாழ்வார், சிந்தையை திரியாகக் கொண்டும் அன்பை அகல்விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் கொண்டு இறைச் சுடரை ஏற்றி வணங்குகிறார்.

'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா'

பொய்கையாழ்வார், இறைவனின் பெருமைகளை என்றும் சிந்தித்திரு என்று கட்டளையிடுகிறார்.

'புறன் உரையே ஆயினும் பொன்னாழிக்

கையான் திறன் உரையே சிந்தித்திரு'

 நம்மாழ்வார், தந்தை என்றும் பெருமானாகிய

கடவுளென்றும் என்றும் சிந்தையில் வைத்துப் போற்றுவேன் என்று மனம் உருகுகிறார்.

'எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்

சிந்தையுள் வைப்பன் சொல்லுவான் பாவியேன்'.

சான்றுக்காக சில பதிகங்கள், பாசுரங்களில் உள்ள குறிப்புகள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சிந்தனையை முன்னிறுத்தி பலநூறு பாக்கள் பல்வேறு ஆன்மிகச் செம்மல்களால் பலகாலகட்டங்களில் உணர்த்தப்பட்டுள்ளது.

இறைவனை தன்னுள் தேடி இறைவனின் தன்மையை சிந்தித்தல் சித்தர்களின் முக்தி வழி. ஏன், இந்த நூற்றாண்டில் வாழும் கவிஞர்கள் வரை இதையே பிரதிபலிக்கின்றனர். இறைச்சிந்தனை இறைப்பேராற்றலை இயற்கை கூறுகளான மனிதனின் மனதிலும் உடலுக்குள்ளும் உள்வாங்கிக்கொள்ளும் உந்துசக்தியாக உணரப்படுகிறது என்று முன்னோர்கள் உரைத்ததை இந்தப் பதிவுகள் மூலம் சிந்திக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.