இராமபிரான் சீதையைத் திருமணம் செய்துகொள்ள மிதிலை நகருக்குச் செல்கிறான். கம்பர் தாமியற்றிய இராமாயணத்தில் 'உலாவியற் படலத்தில்' இதைப் பலவிதமாக விவரிக்கிறார்.
உலா இலக்கியங்களில் கூறப்படும் பேதைமுதல் பேரிளம்பெண்வரை எழுபருவ மகளிரும் அங்கு அவனைக்காணக் குழுமி நிற்கின்றனர்.
'பேதைமார் முதல்கடைப் பேரிளம்பெண் கள்தாம்
ஏதியார் மாரவேள் ஏவவந்து எய்தினார் .....'
மான்கள் போலும், மயில்கள் போலும், மீனினம் போலவும், மின்னினம் போலவும் பூநனை கூந்தல் மாதர் இராமனைக் காண வீதி எங்கும் மொய்த்தனர். கூந்தல் சரிந்து விழவும், மேகலை அறுந்து விழவும், பூந்துகில்கள் சரியவும், இடை தடுமாறவும், தேனை அருந்தத் துடிக்கும் வண்டுகள் போல மொய்த்தனராம்.
ஈண்டு சில மகளிரின் செயல்களை நயம்பட உரைக்கிறார் கம்பர்.
இராமனைக் கண்ணுற்ற ஒரு தெரிவையானவள் துகில், நலன், சிந்தை, உணர்வு, வயிரப்பூண்கள், நாண், மடன், நிறை, உயிர் என அனைத்தையும் உகுத்து நிற்கிறாள். இன்னொருத்தி காமனின் கணைகளால் வருந்துகிறாள். ஒருபெண் 'என் கண்ணின் வழிபுகுந்து நெஞ்சிடை அமர்ந்து கொண்டான் இவன். வெளியே போகாவண்ணம் என் கண்களை அடைத்தேன், என்னைப் படுக்கைக்கு அழைத்துச் செல்லுங்கள்' எனத் தோழியரை வேண்டினாள்.
(தெரிவை = 26-31 வயதுப் பெண்).
'நெஞ்சிடை வஞ்சன்வந்து
புக்கனன்; போகாவண்ணம்,
கண்ணெனும் புலம்கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்'.
ஒருத்தி, தன்னையன்றி இராமனைக் காணும் மற்றோரை எரித்து விடுபவள் போலப் பார்க்கிறாள். 'பாவை அன்னாள், ஆண்டு அமலன் மேனி நோக்கு உறுவாரை எல்லாம் எரியெழ நோக்குகின்றாள்.'
இராமனின் முழு வடிவின் அழகையும் ஒருவரும் காணவில்லை. அவன் தோளழகைக் கண்டவர்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தனர். கழலணிந்த தாமரைபோலும் தாளழகைக் கண்டோர் அதையே கண்டு வியந்தனர். நீண்ட தடக்கைகளைக் கண்டவர்களும் அதுபோன்றவரே! ஆக, இராமனின் வடிவழகை முழுமையாகக் கண்டவர் எவருமே அங்கில்லை' என்று இராமன் உலாவரும் அழகைப் பாடுகிறார் கம்பர்.
'தோள்கண்டார் தோளேகண்டார்
தொடுகழல் கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார்;
தடக்கைகண் டாருமஃதே
வாள்கொண்ட கண்ணார்யாரே
வடிவினை முடியக்கண்டார்?'
மற்றொருத்தி, 'இராமனை என் உள்ளத்தில் ஒடுக்கிக் கொண்டேன். வையத்தைத் தனது வயிற்றில் முற்றும் அடக்கிய அந்தப் பிரானைப் போல இனி யார் பெரியவர்' என்று கேட்கிறாள். 'அவள் உள்ளத்து ஒடுங்கினான். வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய ஐயனில் பெரியார் இனி யாவரே!'
ஒருத்தி, 'இரும்புவில்லை ஒடித்தனையே, அந்தக் காமனின் கரும்புவில்லை ஒடிக்கலாகாதா?' என ஏங்குகிறாள். ஒருத்தி சீதைசெய்த தவத்தை எண்ணிச் சோர்வடைகிறாள். மண்ணுலக மாதரன்றி விண்ணுலகத்து மகளிரும் இராமனிடம் காதல் கொள்கின்றனராம்.
'வேனல் வேளொடு மேல் உறைவார்கள் ஓடு
ஆனபூசல் அறிந்திலம்; அம்புபோய்
வானநாடியர் மார்பினும் தைத்தவே.'
இவ்வாறு பலப்பலவாகக் கூறி மகிழ்கிறார் கம்பர். இதேபோலப் பெருங்கதை, சீவக சிந்தாமணி ஆகிய காப்பியங்களிலும் உலா எனப்படும் சிற்றிலக்கியங்களின் கூறுகளைக் காணலாம். காப்பிய நூல்களில், ஒரு சிறுபகுதியாக, சுருக்கமாகக் கூறப்பட்ட உலாச்செய்திகளின் அடிப்படையில் அவற்றை விரிவாக அமைத்துச் சுவைபடக் காட்டுவதே 'உலா' எனப்படும் சிற்றிலக்கியமாகும்.
உலாப்பிரபந்தங்களில் தலைவன் அழகுற அலங்கரித்துக்கொண்டு வீதியுலா செல்வதும், அவனுடன் பரிவாரங்களாகப் பலரும் செல்வதும், அவனைக் கண்டு ஏழு பருவத்துப் பெண்களும் அவனிடம் மையல் கொள்வதும், அவர்கள் தம் பருவத்திற்கேற்பச் செய்யும் செயல்களும் சிறப்பாகச் சுவைபடக் கூறப்படும்.
கம்பராமாயணத்தை சிற்றிலக்கியத்தைத் தன்னுள் அடக்கிய காப்பியம் எனக் கொள்ளலாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீ நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம்: சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

