சான்றோர் வீழார்...
வீழ்தல் என்பது இரண்டு பொருள்களை உடைய ஒருசொல்.

வீழ்தல் என்பது இரண்டு பொருள்களை உடைய ஒருசொல். மேலிருந்து கீழே இறங்குதலை வீழ்தல் என்று கூறுவது ஒரு பொருளாகும். மலையிலிருந்து வீழ்ந்த அருவி, மழைத்துளி வீழ்தல் கண்டேன் என்று இருபொருளில் அச்சொல் வழங்கும்.
பழந்தமிழில் வீழ்தல் என்பது விரும்புதல் என்னும் பொருளும் உடையது. மனம் தன்னிலையிலிருந்து தாழ்தல் வீழ்தல் எனப்பட்டது. இவ்விரண்டு பொருளும் அமையத் திருக்குறளில்,
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று. (குறள்-955)
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. (குறள்-1191)
எனப் பயின்றுவரக் காணலாம். இங்குக் கீழே விழுதல், இறங்குதல் என்னும் பொருளில் இச்சொல் இடம்பெறுவதை மட்டும் காணலாம்.
வாழ்க, ஒழிக என்ற முழக்கங்கள் அடிக்கடிக் கேட்கப்பெறுவன. ஒழிக என்பது நற்பொருளிலும் பயில்வதாகும். வறுமை ஒழிக, நோய் ஒழிக என்பன அவ்வகையின. இவ்வழக்குப் போலவே வீழ்க என்னும் சொல்லும் நற்பொருளில் வழங்கக் காணலாம். வீழ்க தண்புனல் என்று பாடுவர் திருஞானசம்பந்தர். தலையிலிருந்து மெல்லிய மயிர்க்கொத்துகள் கீழே இறங்கின என்று கீரந்தையார் குறுந்தொகையில் (337: 2) குறிப்பிடுகிறார்.
வீழ்தல் என்பதன் முதனிலை வீழ் என்பதாகும். இது பெயராக இருக்கும்போது விழுது எனப்பொருள் தரும். ஆலமரமும் தாழை மரமும் விழுது உடையன. தாழையை வீழ்த்தாழை என்று பட்டினப்பாலை குறிக்கும். தென்னைக்கும் தாழை என்னும் பெயர் உண்டு. அதனை வீழில் தாழை என்று குறிக்கும் மரபைக் காண்கிறோம். விழுது, வீழ் என்பன கீழே இறங்குவதைக் குறிக்கும் சொற்கள்.
மழையின் வீழ்வும், அருவியின் வீழ்ச்சியும், மரக்கிளைகளின் கீழ்நோக்கிய படர்வும், தலைமயிரின் இறக்கமும், படரும் கொடியின் கீழ்நோக்கிய வரவும், ஒளிக்கதிரின் நிலம் நோக்கிய செலவும் வீழ்ச்சி எனப்படும். இவை வீழ்ச்சிக்குரிய வீழ்ச்சிகள்.
மழை விழுதல் இல்லையேல் வாழ்வேது? நிலவுக்கதிர் விழுதல் இல்லையேல் அல்லி புன்முறுவல் பூப்பதேது? பகற்கதிர் விழுதல் இல்லையேல் நெற்கதிர் மணி பொலிதல் ஏது? இவையெல்லாம் இயற்கையின் வீழ்ச்சிகள். இவற்றை வீழ்தல் என்று கூறுவதை விடவும் விமானம் தரை இறங்குவது போன்றது எனலாம்.
இயற்கையின் வீழ்ச்சி ஆக்கமெனில் மனிதனின் வீழ்ச்சி போற்றத்தக்கதாகக் கொள்ள இயலாது. மாந்தர் தம் நிலையிலிருந்து நழுவுதலும் இறங்குதலும் பண்பாகா. மலைபோல உயர்ந்தவரும் வீழ்தற்குரிய குற்றத்தைக் குன்றிமணி அளவு செய்யினும் தம்நிலையில் குன்றுவர் என்பர் திருவள்ளுவர்.
உடம்பு வீழ்ந்தது, உயிர் பறந்தது என்பன இயற்கை நிகழ்வுகள். கிளை ஒடிந்தது, மரம் வீழ்ந்தது என்பன அவற்றின் குற்றமல்ல. ஆனால், மனம் குன்றியது, செயல் தாழ்ந்தது, பண்பு வீழ்ந்தது என்பன மாந்தன் தன்னால் எய்தும் வீழ்ச்சிகள். அவ்வீழ்ச்சிகளுக்கு அவனே காரணமாவான். வள்ளன்மை மிக்க குமணன் நாடிழந்து காடுறைந்த காலத்திலும் தன் கொடைப்பண்பிலிருந்து வீழவில்லை. நாடாண்ட நிலையிலிருந்து சுடுகாடு காக்கும் நிலைக்கு வீழ்ச்சியுற்ற அரிச்சந்திரன் தன் வாய்மை நெறியினின்றும் வழுவவில்லை.
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து. (குறள்-220)
என்பதற்கு இவர்களே தக்க எடுத்துக்காட்டாவர். யானை படுத்தால் குதிரைமட்டம் என்பது போன்றதன்று இவர்கள் வீழ்ச்சி; இவர்தம் வீழ்ச்சி, குன்றுவதும் குறைவதுமற்ற பெருமிதப்பேறுகளேயாகும். மலை தலைவணங்காதது போலவே இவர்களும் தம் நிலையிலிருந்து வீழ்ந்தவர்கள் அல்லர்.
கல்வியாளர்கள் புலமைச் செல்வத்தால் நிமிர்ந்து நிற்பவர்கள். அவர்கள் 'இரவலர்' என்று குறிக்கப்படினும், தன்மானத்திலிருந்து சிறிதும் வீழாதவர் ஆவர். இளந்தத்தன் என்னும் புலவரை ஒற்றுவந்தவன் என்று கருதிக் கொல்ல முயன்ற சோழன் நெடுங்கிள்ளியை நோக்கிக் கோவூர்கிழார்,
'அரசே! புலவர் வாழ்க்கை தீதற்ற செம்மையுடையது. வள்ளல்களை நாடிச் சென்று பாடிப் பரிசில் கொள்ளும் இந்த வாழ்க்கையில் தீமைக்கு இடமில்லை. இவர்கள் பெற்றது கொண்டு மகிழ்வர். தாம் பெற்றவற்றைப் பிறர்க்கும் வழங்குவர். புலமையால் பிறரை வென்று நிமிர்ந்து நடப்பர். அரசர்க்குரிய பெருமையெல்லாம் அவர்க்கும் உண்டு' என்று கூறிக் கொலைச் செயலைத் தடுக்கின்றார்.
எச்செயல் புரியினும் ஆள்வோரைப் பாராட்டி வாழும் நிலைக்குக் கோவூர்கிழார் இறங்கிவிடவில்லை. துணிவு மிக்க செந்நாப்புலமை பிறர் அடி வீழ்தல் இல்லை. 'செய்யாதவற்றைப் புனைந்து கூறிப் பாராட்டும் செயலை எனது செம்மை பொருந்திய சிறிய நாக்குச் செய்யாது' எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் வன்பரணர்.
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம்சிறு செந்நாவே (புறம்: 148:5-7)
இத்தகைய பெருமையும் தன் மதிப்பும் உடைய சான்றோர் உடம்பு வீழினும், தமக்குரிய பண்பாட்டு நிலையினின்றும் வீழ்தல் இல்லை. ஞாயிறு எழுந்திசை மாறாது; இமயம் தன்னிடம் விட்டு அசையாது; குயில் குரல் மாற்றிக் கொள்ளாது; புலிதன் வரிகளை மாற்றிக்கொள்ளாது. சான்றோரும் தாம் வாழும் உயர்நெறியினின்றும் வீழார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

