3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பெரிய புராணம் - தமிழ்க்கருவூலம்

சங்க காலம் தொட்டு இடையீடில்லாமல் வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரர் வருகையால் தடைப்பட்டன.

பெரிய கோயில் சிற்பங்கள்

Published On :11 வினாடிகள் முன்பு

சங்க காலம் தொட்டு இடையீடில்லாமல் வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரர் வருகையால் தடைப்பட்டன. மறுபடியும் தமிழர் வாழ்வில் மலர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியும் தோன்றிய காலத்தைப் பக்தி இலக்கியக் காலம் என்று கூறலாம்.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையுள்ள பக்தி இலக்கியக் காலத்தில் தோன்றிய தமிழ்ப் பாடல்கள்போல் வேறு எந்த மொழியிலும் தோன்றவில்லை என்றே கூறலாம். இத்தகைய பக்தி இலக்கியங்களுள் முடிமணியாய்க் கருதப்பெறும் பெரிய புராணம் எனப் பெறும் 'திருத்தொண்டர் புராணம்' குறிப்பிடத்தக்க சிறப்புடையது. சேக்கிழாரால் இயற்றப்பெற்ற இப்புராணம் இம் மண்ணின் காப்பியம்.

காப்பிய நிகழ்விடங்களும், காப்பியத் தலைவர்களும் தமிழ் வழங்கும் இம் மண்ணிற்குட்பட்டவர்கள். வரலாற்றுக் காப்பியம் போல் தம் படைப்பை வழங்கிய சேக்கிழார், எதிர்

காலத் தமிழ்ச் சமுதாயம் எப்படியிருக்க வேண்டும்? தமிழன் எப்படி வாழ வேண்டும்? என்ற கருத்துகளையெல்லாம் உள்ளடக்கிய தமிழ்க் கருவூலமாகத் தம் காப்பியத்தைப் படைத்துள்ளார் எனலாம்.

பெரிய புராண காலத்தில் நால்வகை வருணத்திற்குப் பதிலாக நாற்பது வகை ஜாதிகள் இருந்தனவாகத் தெரிகிறது. பல்வேறு காலங்களில், பல்வேறு பகுதிகளில், பல்வேறு ஜாதியினராகப் பிளவுபட்டுக் கிடந்த மக்களை ஒன்றுபடுத்த எண்ணிய சேக்கிழார், மக்களைப் 'பக்தி' என்ற கயிறால் கட்டி, 'அடியார்' என்ற வலைக்குள் போடுகிறார்.

அந்தணர் குலத்து அப்பூதியடிகளைத் திருநாவுக்கரசர் என்ற வேளாளரின் அணுக்கத் தொண்டராகக் காட்டுகிறார். கீழ்க் குலத்தில் பிறந்த நந்தனார் முதலில் கோயிலுக்கு வெளியே வழிபடுகிறார். பின்னர், திருப்புன்கூரில் இவர் பொருட்டு நந்தி விலகுகிறது. இருப்பினும், தில்லைக்குச் செல்லத் தன் குலம் தடையாய் இருப்பதாக 'நந்தனார்' எண்ணுகிறார். எனவே, நந்தனாரை இறையருளால் தில்லைவாழ் அந்தணர்கள் வரவேற்கிறார்கள். நந்தனை அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்துத் தில்லைத் திருக்கோயிலுக்குள் அனுப்பும் வகையில் பெரிய புராண நிகழ்வுகள் உள்ளன.

பாணர் குலத்தவரையும் அந்தணர் குலத்தவரையும் இணைக்கிறார். வேட்டுவரை ஐயர் என்ற அடைமொழியால் அழைக்கிறார்.

பதியிலார் குலத்தைச் சேர்ந்த பரவையாரைச் சுந்தரர் மணக்கிறார். மயிலாப்பூர் சிவநேசச் செட்டியார் தம் மகள் பூம்பாவையை அந்தணராம் ஞானசம்பந்தருக்கு மணம் செய்து கொடுக்கவே வளர்க்கிறார். மேற்காண் நிகழ்வுகளால் ஜாதியற்ற சமுதாயத்தைப் பக்தி நெறியால் அமைக்க முடியும் என்ற சேக்கிழாரின் நம்பிக்கையான சிந்தனையை நாம் நன்குணரலாம்.

சோதனைகளை வென்று சாதனைகள் படைக்க வேண்டும். தடைக்கற்கள் வாழ்வை உயர்த்தவல்ல படிக்கற்களாக மாற வேண்டும். இளையான்குடி மாறனார், குங்குலியக் கலியர், மூர்த்தி நாயனார், சிறுத் தொண்டர், மெய்ப்பொருள் நாயனார் போன்றோர் புராணங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

மனித மனங்கள் செம்மைப்பட வேண்டும். மனமாசுகள் அகல வேண்டும். மனிதன் மனிதனாக வாழ்வதைவிட மனிதன் புனிதனாக மாற வேண்டும். மானுடத்தின் சிறப்பைப் பாடிய கம்பனைப் போல மனிதத்தின் புனிதத்தைப் பாடியவர் சேக்கிழார். மனித மனம் 'கைத் திருத்தொண்டால்' செம்மைப்படும். தன்னலம் ஒழியும். பொது நலம் வளரும். தொண்டு ஒன்றே உலகை நன்மயமாக்க வல்லதாய்த் திகழும் என்ற சேக்கிழாரின் எண்ணமே திருத்தொண்டர் புராணமாயிற்று. இருப்போர்-இல்லாதோர்க்கும், வலிமையாளர் - மெலியோர்க்கும், செல்வர் - வறியோர்க்கும். இளைஞர் - முதியோர்க்கும் உதவிடத் தொண்டு மனப்பான்மை வேண்டும்.

வந்தவர் யாவராயினும் அன்னம் பாலிக்கும் இளையான்குடி மாறனாரும், திருவீழிமிழலையில் பஞ்ச காலத்தில் இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களுக்கு வழங்கிய ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் தொண்டு என்பன பிறர் துன்பம் போக்கும் நிலைக்குச் சான்று பகர்பவராவார்கள்.

மகேசன் புகழ்பாடுவதினும் - மக்கட் தொண்டே மிக உயர்ந்தது என்பதைச் சேக்கிழார் தம் பாடல்களில் உணர்த்தத் தவறவில்லை. பெரிய புராணம் 'ஆண்டவனைப் பாடிய நூல்' என்பதைவிட ஆண்டவனை வணங்கும் அடியவரைப் பாடிய நூல் என்பதே பொருத்தமாகும்.

பெண்களின் சக்தியை மிக நன்கறிந்தவர் சேக்கிழார். பெண்களை உரிய மரியாதையுடன் மங்கையர்க்கரசியார், சந்தனமாம் தையலார், புனிதவதியார். திலகவதியார் என்று 'ஆர்' விகுதி கொடுத்துப் பாடல் புனைந்த திறம் போற்றற்குரியது. திருநாவுக்கரசரின் தமக்கையாராகிய திலகவதியார் தம்பிக்காக வாழ்ந்தமையும், சைவசமயம் பரவப் பெருந்துணையாக மங்கையர்க்கரசியார் வாழ்வு திகழ்ந்ததையும் காட்டும் (தமிழுக்கு 'கதி' இருவர் என்பதிலுள்ள 'க' என்பது கம்பரையும் 'தி' என்பது திருவள்ளுவரையும் குறிக்கும். அது போல சைவத்துக்கு 'மதி' இருவர் என்பதிலுள்ள 'ம' என்பது மங்கையர்க்கரசியையும் 'தி' என்பது திலகதியாரையும் குறிக்கும்.)

சேக்கிழார் மனித வாழ்வையும், நாட்டு நிலையையும் தக்கவாறு திருப்பவல்ல சக்தி பெண்களிடம் உண்டு என்பதை வலியுறுத்துகின்றார். 'மனையறத்தின் வேராகி' என்று திருவெண்காட்டு நங்கையைக் குறிப்பது உற்றுநோக்கத் தக்கது!. மனையறம் என்னும் இல்லறத்தை வெளியில் தெரியாத வேராக நின்று தாங்குபவர் பெண்களே என்பதைத் தெளிவுறுத்தும் சேக்கிழார் பெண்மையைப் போற்றியவர் என்பதைவிடப் பெண்களின் சக்தியை உலகுக்குக் காட்டியவர் எனலாம்.

தெய்வச் சேக்கிழார் காண விரும்பிய சமுதாய மாற்றங்களைச் செயற்படுத்துதல் இன்றைய தமிழரின் இணையற்ற கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.