நானே நல்ல ஆயன்!
சொர்க்கத்தின் சுகத்தையும் நரகத்தின் கொடுமையையும் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் விளக்கிய பின்பு, ""உங்களில் சொர்க்கம் செல்ல விரும்புவோர் கை தூக்குங்கள்'' என்றார் ஒரு ஞானி. ஒருவனைத் தவிர அங்கிருந்த அனைவ


சொர்க்கத்தின் சுகத்தையும் நரகத்தின் கொடுமையையும் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் விளக்கிய பின்பு, ""உங்களில் சொர்க்கம் செல்ல விரும்புவோர் கை தூக்குங்கள்'' என்றார் ஒரு ஞானி.
ஒருவனைத் தவிர அங்கிருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கைகளை உயரத் தூக்கினர்.
கையைத் தூக்காமல் அமைதியாகத் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்த அந்த வாலிபனை ஞானி உற்றுப் பார்த்தார்.
பின்னர், ""இங்கிருக்கும் அனைவரும் சொர்க்கம் போவதற்காக ஆசைப்படுகிறார்கள். ஆனால் நீ ஒருவன் மட்டும் துன்பமும் கொடுமையும் நிறைந்த நரகத்துக்குப் போகவா ஆசைப்படுகிறாய்?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
""நரகத்துக்குப் போக ஆசைப்படுவதாக நான் உங்களிடம் எப்போது சொன்னேன்?'' என்று அந்த வாலிபன் திருப்பி அவரைக் கேட்டான்.
ஞானியின் மனதில் குழப்பம் ஏற்பட்டது.
""நீ கைகளை உயர்த்தவில்லையே... அப்படியென்றால் நீ எங்கு செல்ல நினைப்பதாக அர்த்தம்?'' என்று கனிவுடன் அவனைக் கேட்டார்.
அதற்கு அந்த வாலிபன் சொன்னான்: ""நான் இருக்கும் இந்த உலகமே எனக்கு சொர்க்கம்!''
ஆம்! நாம் எங்கிருந்தாலும் நல்ல ஆயன் இயேசு நம்மோடு இருந்தால் அந்த இடமே நமக்கு சொர்க்கம்.
தெளிந்த நீரோடையும் பசுமையான மேய்ச்சல் நிலமும் அமைதியான வாழ்க்கை வாழ குளிர்ச்சியான மரநிழலுடன் கூடிய இடமும் அங்கு இருக்குமல்லவா?
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு வரும் நான்காம் ஞாயிறு "நல்லாயன் ஞாயிறு' என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் நல்லாயன் இயேசுவைப் பற்றி சிந்திப்பதால் நமக்கும் பிறருக்கும் நல்வாழ்வை அமைத்துத் தருவதற்கு வேண்டிய நல்ல மனநிலை நமக்குக் கிடைக்கும்.
வேதாகமத்தில் இயேசு தம்மை நல்ல ஆயனாக முன்வைக்கின்றார். நல்ல ஆயனுக்குரிய வரைமுறைகளை எடுத்துரைக்கிறார்.
நல்ல ஆயன் தன் ஆடுகளின் (மக்களின்) பெயர் அறிந்தவராக, அவர்களை வழிநடத்த பாதை தெரிந்தவராக, ஆபத்துக்காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிரிகளை எதிர்த்துப் போராடுகின்றவராக, தக்க வேளையில் உணவளிக்கின்றவராக தம்மை அடையாளப்படுத்துகின்றார்.
எனவேதான் திருப்பாடல்களில், ""ஆண்டவரே என் ஆயர்! எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்'' (திருப்பாடல்கள் 23: 1-2) என்று கூறப்பட்டுள்ளது.
இயேசுவுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவே நல்ல ஆயன் உவமையின் மையச் செய்தியாகும்.
ஒரு நல்ல ஆயனுக்கு ஆடுகளை நன்கு தெரியும். ஆடுகளும் ஆயனின் குரலை நன்கு தெரிந்து வைத்திருக்கும். பொழுது சாயத் தொடங்கியதும் ஆயன் குரல் கொடுத்து அழைக்கவும் பல திசைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் ஆயனைப் பின்பற்றத் தொடங்கும். பின்னர் அவர் பின்னே சென்று தங்கள் கொட்டில்களை அடையும். அங்கும் மிகுந்த பாதுகாப்பு இருக்கும். அந்த அளவுக்கு ஆயன்-மந்தை உறவு நெருக்கமாக இருக்கும்.
பழைய ஏற்பாடு, யாவே இறைவனை எல்லோருக்கும் தந்தையாக விளக்கிக் கூறுகின்றது.
அத்தகைய தந்தையாம் கடவுள் தம் மக்களாகிய நம்மீது தந்தைக்குரிய வாஞ்சையோடும் ஆயனுக்குரிய அக்கறையோடும் பரிவோடும் கண்டிப்போடும் இருக்கின்றார். அதனால்தான் தனது மகனாக இயேசுவை இந்த உலகுக்கு ஆயனாக அனுப்பினார்.
இயேசு நமக்காகப் பாடுபட்டு, சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயர்த்தெழுந்து நம்மைப் பாவத் தளைகளிலிருந்து மீட்டு இன்றும் நமக்கு நல்வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரே நல்ல ஆயன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...