

இறைவனது படைப்பில் ஈடு இணையில்லாத சிறந்த படைப்பாக மனித இனத்தை அல்லாஹ் படைத்துள்ளான் என்றால் அது மிகையாகாது.
இஸ்லாத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் தனிப்பட்ட ஒரு சிறப்பினை இறைவன் வழங்கியுள்ளான். மனிதர்கள் அனைவரும் ஆதம் - ஹவ்வாவின் சந்ததிகள். ஆணும் - பெண்ணும் இணைவதால் குடும்பம் உண்டாகின்றது. பல குடும்பங்கள் இணைந்து ஒரு சமுதாயம் உருவாகின்றது.
அல்லாஹ் தனது திருமறையில் அத்யாயம் 4, வசனம் 1இல் மனித இனம் படைக்கப்பட்டதை விளக்குவதைக் காண்போம்.
""உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவன் துணையையும் படைத்தான். பின்னர், இந்த இருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அவனைக் கொண்டே ஒருவருக்கொருவர் உங்களது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்''.
அன்று அரபு மண்ணில் பெண் பிறந்தால் ஈனப்பிறவி என உயிரோடு புதைத்தனர். எவ்வளவு பெரிய இழிநிலை, கொடூரம், கொடுமை அல்லவா இச்செயல்?
இறையளித்த மறையின் மூலம், மதி கெட்ட மக்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நற்போதனைகளைச் செய்தனர். காருண்ய நபி செய்த சாதனையால், அனைத்துப் பெண்களும் நற்பேறு பெற்றார்கள்.
சாதனையின் சிகரத்தில் இன்று பெண்கள் உயர்ந்திருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. இதற்குக் காரணம் அன்று இவ்வுலக மக்களுக்கு வழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட, இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வித்திட்டு தொடங்கி வைத்துள்ள பெண்ணுரிமை அல்லவா!
பெண் இனத்திற்கே பெருமையளிக்கும் பெரும் பேறாக "தாய்மை' என்னும் உயர்ந்த பிடிப்பினை ஆண்களின் மூலமாக இறைவன் வழங்கியுள்ளான். பெண் இனத்தை நபிகளார் மிக உயர்வாக எடுத்துரைக்கிறார்கள்.
"பெண்கள் ஆண்களின் மறு பாதியாவார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
திருக்குர்ஆனில் "அன்னிசா'(பெண்கள்) என்ற அத்யாயம் 4-இல் பெண்களைப் பற்றியும், பெண் கல்வி, மணமகளைத் தேர்ந்தெடுத்தல், சொத்துரிமை, வாரிசுரிமை போன்ற பல உரிமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ""கல்வியைத் தேடிப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீது கடமையாகும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் ஆண்களைவிட பலவீனமாகப் படைக்கப்பட்டவர்கள். இருப்பினும் இஸ்லாமிய வரலாற்றினை திரும்பிப் பார்த்தால், இஸ்லாமியப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.
போர்க்காலங்களில் நபித் தோழர்களுடன் பெண்களும் கலந்துகொண்டு போர் வீரர்களுக்குத் தண்ணீர் புகட்டுதல், இறந்தவர்களையும், காயமுற்றவர்களையும் போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து ஆணுக்கு நிகராக பற்பல சேவைகளை ஆற்றி அழியாப் புகழ் பெற்றுள்ளனர் என்பதையும் காணலாம்.
தலையில் முக்காடிட்டு பர்தா அணிந்தால் மட்டும் இஸ்லாமியப் பெண்ணாக ஆகிவிட முடியாது. எல்லாம் வல்ல இறைவனை வணங்கி, இறைவேதம் - நபிமொழி ஆகியன கூறும் கருத்துக்களை அறிந்து ஒழுகி தனது மக்களையும் அதன்படி வழி நடத்தக்கூடியவளே உண்மையான முஸ்லிம் பெண்மணியாவாள்.
இஸ்லாமியப் பெண்கள் முறையாக ஹிஜாபை (புருகா) அணிந்து சென்று பாதுகாத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
""அந்நிய ஆணும்- பெண்ணும் தனித்திருக்கலாகாது. அவ்வாறு தனித்திருக்கும்போது "ஷைத்தான்(சாத்தான்)' மூன்றாவதாக இருப்பான்'' என இஸ்லாம் பகர்கிறது.
இளைய தலைமுறையினரின் நிலைமை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. வெள்ளம் வரும் முன்னே அணைக்கட்ட வேண்டும். அவர்களைத் திருத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கைகளில்தான் இருக்கின்றது.
வாழ்க்கை என்பது விலை மதிக்க முடியாத பொக்கிஷம். எனவே, இப்படிப்பட்ட வாழ்நாளை வீணடிக்காது இருளில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை, ஷரீஅத்தின் (இஸ்லாமிய மார்க்க சட்டம்) ஒளியில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரக்கூடியவர்களாக மாறி, இறை பொருத்தத்தைப் பெற்ற சிறந்த பெண்மணிகளாகத் திகழ இறைவன் அருள்வானாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.