'இஸ்லாம்' என்னும் அரபி சொல்லுக்கு கீழ்படிதல், இறைவனிட்ட கட்டளைகளை நிறைவேற்றுதல், முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து அவனுடைய ஆணைகளை நிறைவேற்றுதல் என்னும் பொருள்.
இஸ்லாம் மார்க்கம் எல்லா காலத்திற்கும், அனைத்து தேசத்திற்கும், முழு சமுதாயத்திற்கும் ஏற்ற சன்மார்க்கம். இறைவன் தனது அடியாரை அனைத்து (அமல்) செயல்களை செய்யும்படி ஏவுகின்றான். ஆனால் மனிதர்களில் ஒரு சிலர் செய்வதில்லை.
இறைவன் தனது (ஹபீபாகிய) நண்பராகிய முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது (ஸலவாத்து) புகழ்பாடுதலை எந்த நேரமும் இறைவன் சொல்லிக்கொண்டிருப்பதாக இஸ்லாமிய நூல்களில் காணப்படுகிறது.
இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி புரிந்து வரும் வல்லமை கொண்ட இறைவன் கூறுகிறான். "நம்பிக்கை கொண்டே நானும், (மலக்குகளும்) வானவர்களும், எந்த நேரமும் எனது (ஹபீபு) நண்பராகிய முஹம்மது நபியின் மீது "ஸலாமும் - ஸலவாத்தும்' (புகழ்தலும்) கூறிக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்களும் கூறுங்கள்''.
"நான் (கலிமா) இஸ்லாத்தின் கடமைகளை சொல்கிறேன்; நீங்களும் சொல்லுங்கள். நான் தொழுகிறேன். நீங்களும் தொழுங்கள். நான் நோன்பு, ஜகாத், ஹஸ் ஆகிய அமல்களை எல்லாம் செய்கிறேன், நீங்களும் செய்யுங்கள்'' என இறைவன் நம்மைப் பார்த்துக் கூறிடவில்லை.
மாறாக, "நானும் மலக்குகளும், எனது ஹபீபாகிய நபியின் மீது, "ஸலாமும் ஸலவாத்தும்' கூறிக்கொண்டிருக்கிறோம். நீங்களும் கூறுங்கள்'' என்று இறைவன் நம்மைப் பார்த்துக் கூறுகின்றான்.
எனவே நாம் மட்டும் செய்யும் இந்த (அமல்களை) செயல்களை விட, இறைவனே இயம்பும் ஸலவாத்தினுடைய மகத்துவத்தை - மகிமையை நாம் உணர வேண்டும்.
இதில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, மற்ற அனைத்து கடமைகளும் ஒருகால நேர சூழ்நிலைகளுக்கு மட்டுமே செய்யும்படி சொன்ன இறைவன், அவனது ஹபீபாகிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது சொல்லக்கூடிய ஸலவாத்தை மட்டும் 24 மணி நேரமும் சொல்லும்படி நம்மைப் பணித்துள்ளான்.
மனிதர்களாகிய நாம் "ஸலாம்' சொல்வது என்றால், நமக்கு எதிரே உள்ளவர்களிடம், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) என சொல்வதாகும். நமக்கு பதில் ஸலாம் சொல்லும் மக்களுக்கு மட்டுமே நாம் ஸலாம் கூறி வருகின்றோம்.
இறைவன், "எனது ஹபீபாகிய நபிகள் நாயஸம் (ஸல்) அவர்களுக்கு "ஸலாமும் - ஸலவாத்தும்' எந்த நேரமும் சொல்லி வருகின்றேன். நீங்களும் சொல்லுங்கள்'' என்று தனது திருமறையில் கூறுகின்றான்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நேரமும் நம்மை சூழ்ந்த வண்ணமாக இருக்கிறார்கள் என்கிற திருமறை கூற்றுப்படியும், இறைவனின் கட்டளைப்படியும், இறுதி நாளன்று உம்மத்துகளாகிய (நபிகளாரின் இனம்) நமக்காக இறைவனிடம் பரிந்து பேசக்கூடிய முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் மீது, எந்த நேரமும் "ஸலாமும் - ஸலவாத்தும்' கூறி, இறைவனின் நல்லாசியை இம்மையிலும் மறுமையிலும் பெறுவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.