பொறுமையின் சிகரம்

ஒரு மனிதன், உடலில் நோய்கள், துன்பங்கள், இறை சோதனைகள் எதுவுமின்றி நலமுடன் இருந்தால் மட்டுமே இறைவனை வணங்கி வழிபட இயலும் என எண்ணுகின்றான்.
Updated on
2 min read

ஒரு மனிதன், உடலில் நோய்கள், துன்பங்கள், இறை சோதனைகள் எதுவுமின்றி நலமுடன் இருந்தால் மட்டுமே இறைவனை வணங்கி வழிபட இயலும் என எண்ணுகின்றான்.

இதற்கான பதிலை இறைவன் தனது திருமறையில் அத்.3 - இல், வசனம் 186-இல் இப்படி கூறுகின்றான். "(முஃமின்களே) இறை நம்பிக்கைக் கொண்டோர்களே! உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக  நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்''.

ஒரு மனிதனுக்கு அனைத்து சோதனைகளும் வந்த பின்தான் இறைவனுடைய நினைவே வரும். உடனே அவனை வணங்க முற்படுவான். ஆனால், அம்மனிதன் உலக இன்ப வாழ்வில்  திளைத்திருக்கும்போது இறைவனை மறந்து கர்வமும், இறுமாப்பும் கொண்டலைவான். ஆனால், ஈமானின் (இறை நம்பிக்கை) அடையாளம், எந்நிலையிலும் இறைவனை வணங்கி வழிபடுதலே  சிறப்பாகும்.

துன்ப துயரங்களைக் காட்டி கடமையான வணக்க வழிபாடுகளை செயல்படுத்தாதவனிடம், இறைவன் மறுமையில் நபி ஐயூப் (அலை) அவர்களையே எடுத்துக் காட்டாகக் கூறி, ""இவரை விடவா நீ  பிணியாளனாக, துன்பத்தில் துயரப்படுபவனாக, சோதனைக்கு உட்பட்டவனாக இருந்தாய்?'' எனக் கேட்பான் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

ஐயூப் நபி இறைவனின் நல்லடியாராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் இப்லீஸ் (சாத்தான்) இறைவனிடம் ""நான் உனது நல்லடியார்களை எனது வழி கேட்டில் ஆக்கி விட்டேன்''  எனப் பெருமை கொண்டான்.

உடனே, ஐயூப் நபியைக் காட்டி, "இவரை உனது வழிக்கேட்டில் ஆழ்த்த முடிந்தால் செய்'' என்றான் இறைவன்.

முதலில் ஐயூப் நபியின் செல்வம் அனைத்தையும் அழித்தான். அடுத்து அவரது மக்களை மரணிக்கச் செய்தான். இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நபியவர்கள் அணுவளவும் "பொறுமையை  இழக்கவில்லை. இறுதியாக, நபியின் உடல் முழுவதும் கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. ஆனால், நபியின் உடலில் ஏற்பட்ட அரிப்போ, இவர்களைக் கொன்றுக்  கொண்டிருந்தது.

இக்கொடுமையினைக் கண்ட நபியின் மனைவி ரஹ்மா அவர்கள், ""இத்துன்பத்திலிருந்து மீள இறைவனிடம் இறைஞ்சக் கூடாதா?'' என்றனர்.

"நலமாகவும் - வளமாகவும் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இறை சோதனையிலிருந்து மீள அல்லாஹ்விடம் இறைஞ்ச நாணமுறுகிறேன்'' என்றனர் ஐயூப் நபி.

மேலும், "இறைவனை பரிபூரணமாக வணங்கவும், அவனை எண்ணி துதிக்கவும் இயலவில்லையே...?'' என வருந்தி கண்ணீர் விட்டு அழுதார்கள் ஐயூப் நபி.

இறுதியாக, ஐயூப் நபியின் பொறுமையையும், துன்பத்தில்கூட தன்னை நினைத்து வருந்தியும், தன்னால் முடிந்த வரை வணங்கி வழிபட்டதையும் ஏற்றுக்கொண்டு, இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரயீல்  (அலை) அவர்களை அனுப்பி, நபி ஐயூப் (அலை)அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நோயை குணப்படுத்தும்படி ஏவினான் என்பது வரலாறு.

பிறக்கும்போதே சோதனையின் முழு உருவினைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்க மறுத்தவர்களால் ஏற்பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. இருப்பினும்  பொறுமையின் சிகரமாக வாழ்ந்து வாகை சூடினார்கள் கண்மணி ரசூல் (ஸல்) அவர்கள்.

எனவே, நாமும் நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளையும் பொறுமையோடு ஏற்று இறைவனைத் தொழுது, இறுதி நபி(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் (பரிந்துரை) பெறுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com