கடல் மல்லையில் அருளும் ஞானப்பிரான்!

தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்று வராஹ அவதாரம்! பெருமைகள் பல கொண்டது இந்த அவதாரம்!
கடல் மல்லையில் அருளும் ஞானப்பிரான்!
Updated on
2 min read

தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்று வராஹ அவதாரம்! பெருமைகள் பல கொண்டது இந்த அவதாரம்!

வராஹப் பெருமானுக்கு நாடெங்கும் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வராஹ வழிபாடே தொன்மையானது என்றும் அதனால் பல திருத்தலங்கள் ஸ்ரீமுஷ்ணம், தஞ்சை மாமணிக்கோயில், திருவிடந்தை, திருக்

கடல்மல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், திருவேங்கடம், மற்றும் திருக்குறுங்குடி போன்ற தலங்கள் வராஹ அவதாரத்தின் அம்சத்தைப் பெற்றத் தலங்களாக இன்றும் விளங்கி வருகின்றதை அனைவரும் அறிவர்.

காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில் காட்சியளிக்கும் திருமாலையும் ஆதிவராஹப் பெருமான் என்றே திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். த்ரிவிக்கிரம அவதாரத்தை விடப் பெரியது என்று சொல்ல வந்த பொய்கையாழ்வார், ""த்ரிவிக்கிரம அவதாரத்தில் நீ உலகை அளக்கும்போது பூவுலகமானது உன்னுடைய திருவடியளவு ஒத்திருந்தது. ஆனால் அதே பூவுலகம் நீ வராஹப் பெருமானாய் வந்தபோது உன் இரண்டு கோரைப்பற்களுக்கிடையில் சிக்குமளவிற்கு சிறியதாய் அமைந்திருந்தது. என்னே உன் திருமேனி என்னே உன் பெருமை'' எனப் போற்றுகிறார்.

இவ்வாறாக, வராஹப் பெருமான் பல தலங்களில் லக்ஷ்மி வராஹப் பெருமானாகவும் ஸ்ரீமுஷ்ணத்தில் சிறு உருவாய் இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சியளிக்கிறார். வராஹப் பெருமானின் திருவுருவம் வராஹநரசிம்மமாக ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் அமைந்துள்ளது. பஞ்சமுக ஹனுமானின் ஐந்து முகங்களில் ஒன்று வராஹம்! வராஹப் பெருமானே திருவிடந்தையில் அகிலவல்லி சமேத ஆதி வராஹனாய் இடப்பக்கத்திலே லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளித்துக் கொண்டிருக்க, திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) என்ற திவ்ய தேசத்தில் பல்லவர் கால குடவரைக் கோயிலில் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமான் தன் வலப்பக்கத்திலே லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளிப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அமைப்பு.

இப்பெருமான் திருக்கோயில் வலவெந்தை என அழைக்கப்படுகிறது. முதலாழ்வார்களில் இரண்டாவதான பூதத்தாழ்வாரின் அவதாரத்தலமான இத்தலத்தில் அருள்மிகு தல சயனத்துறைவார் நிலமங்கைத் தாயாருடன் பிரதானக் கோயிலில் காட்சியளிக்க, வலவெந்தைப் பெருமானின் சந்நிதி பழைய கலங்கரை விளக்கம் அருகே குடவரைக் கோயிலாக தலசயனப்பெருமாள் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.

இங்கு பெருமான் இவ்வாறு காட்சியளிப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. பல்லவ அரசனான ஹரிசேகர மகாராஜா தம் குல தெய்வமான திருவிடந்தை ஆதிவராஹப் பெருமான்மீது அபரிதமான பக்தி கொண்டு தினமும் கடல் மல்லையிலிருந்து திருவிடந்தை வந்து பெருமாளை தரிசித்து கடல்மல்லை திரும்பி தம் அரண்மனையில் நான்காயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து பிறகே தாம் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஓர் நாள் திருக்கடல்மல்லைக்குக் கிளம்பும்முன் அரசன் முன் ஒரு வயோதிக அந்தணர் ஒரு சிறுமியுடன் தோன்றி தமக்குப் பசியாக உள்ளது என்று கூற, அரசன் தன் குலதெய்வமான திருவிடந்தைப் பெருமானை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து அம்முதியவரையே வராஹப் பெருமானாகவும் சிறுமியைப் பூமிபிராட்டியாகவும் நினைத்து உணவளித்தான். அதனால் மகிழ்ந்த பெருமான் அரசனுக்கு அங்கேயே காட்சியளித்தான் என்கிறது வரலாறு.

இந்தச் சந்நிதி 1200 வருடங்களுக்கு மேல் பழமையானது. பல்லவர்களால் அமைக்கப்பட்ட இக்குடவரைக் கோயிலில் பெருமான் திருவடிக்கீழ் ஆதிசேஷன் தன் பத்தினியுடன் காட்சியளிக்கிறார். எம்பெருமானுக்கு வலப்புறத்தில் ஸ்ரீகாமம் என்ற கஜலக்ஷ்மியும், கங்காதரன் என்ற ஈச்வரனும் இடப்புறத்தில் பிரம்ம காமம் என்ற விஷ்ணு துர்க்கையும், சதுர்முக பிரம்மாவும் உள்ளனர். பல்லவ மன்னர்களில் ஒருவரான ஹரிசேகர மகாராஜா தெற்கு நோக்கியும், எதிரில் வடக்கு நோக்கிய மகேந்திர பல்லவனும் காட்சியளிக்கிறார்கள். தவிரவும் உத்ஸவ மூர்த்தியும், சக்கரத்தாழ்வாரும் காட்சியளிக்கிறார்கள். திருமங்கையாழ்வார் இப்பெருமானை ஞானப்பிரான் என்று தனது பாசுரத்தில்,

"ஏனத்தினுருவாகி நிலமங்கை

எழில் கொண்டான்

வானத்திலவர் முறையால்

மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள

கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத்துறைகின்ற

ஞானத்தி னொளியுருவை

நினைவார் என்னாயகரே''

என்று போற்றுகிறார்.

இந்த ஆதிவராஹப் பெருமானை தரிசித்தால் கல்வி வளரும்; ஞானம் பெருகும்; பூமி சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியடையலாம். சர்ப்ப தோஷங்கள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நன்மக்கட்பேறு அமையும். ஆன்மிக அன்பர்கள் அவசியம் இந்த வலவெந்தைப் பெருமானைத் தரிசித்து பயன்பெறவேண்டும்.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) இத்திருத்தலத்தில் வராஹ ஜயந்தி சிறப்புத்திருமஞ்சனம், வழிபாடுகளுடன் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com