அழகிய குணங்கள்

புறம் பேசுவது, கோள் சொல்வது இரண்டுமே ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிசுக்கள் போன்றவை. இது போன்ற குணங்கள் கீழ்த்தரமானவை.
Published on
Updated on
1 min read

புறம் பேசுவது, கோள் சொல்வது இரண்டுமே ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிசுக்கள் போன்றவை. இது போன்ற குணங்கள் கீழ்த்தரமானவை.

"'உங்களில் ஒருவர் மற்றொருவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரியின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே... (புறம்பேசுவதும் அவ்வாறே). அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கிறான்(அல்குர் ஆன் 49:12)''.

புறம்பேசுவது - கோள் சொல்வது இரட்டை நாவுடைய இழி மக்களின் பண்பு. இரட்டை நாவுடையவர்கள் தனது சகோதரனைப் பற்றியும்,தனது நண்பர்களைப் பற்றியும் புறம் - கோள் இரண்டினையும் கூறுவர். ஆனால் நேரில் சந்திக்கும்போது முக மலர்ச்சியுடனும், நேசத்துடனும் அன்பைப் பொழிந்து உரையாடுவர். ஆனால், உண்மை முஸ்லிம்கள் இரண்டு செயல்களிலிருந்தும், இரட்டை வேடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி மற்றவரிடம் இழிவாகப் பேசி அவர் இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என குற்றம் குறை சொல்வது "புறம்' பேசுவது போன்றது.

"தனக்கு தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமிய நற்பண்பில் ஒன்று'' என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் குணங்கள் மூன்று.

"1. அவர் சொன்னார் (இவ்வாறு) சொல்லப்பட்டது என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது.

2. அனாவசியமாகக் கேள்வி கேட்பது.

3. செல்வத்தை வீணடிப்பது'' (நூல்: முஸ்லிம்)

கோள் சொல்லும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வெற்றி காண அனைத்து வாயில்களும் மூடப்படும்.

"கோள் சொல்லித் திரிபவன் சுவனம் புக மாட்டான்'' (நூல்: புகாரி, முஸ்லிம்).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒருநாள் இரண்டு கபர்களுக்கிடையே கடந்து சென்றபோது, அவர்கள் கண்ட காட்சியினை கீழ்காணும் ஹதீஸ் நமக்குத்

தெளிவுபடுத்துகிறது.

"அறிந்துகொள்ளுங்கள். இந்த இருவரும் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள். இவர்கள் வேதனை செய்யப்படுவது வெளித்தோற்றத்தில் கடுமையாகத் தெரியும் ஒன்றுக்காக அல்ல. அறிந்துகொள்ளுங்கள்! அந்த இருவரில் ஒருவர், "கோள்' சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவர், சிறுநீர் கழித்தபின் தூய்மைப்படுத்திக்கொள்ளவில்லை'' (நூல்: புகாரி, முஸ்லிம்).எனவே, "கோள் - புறம்" ஆகிய இழிகுணங்களிலிருந்து விலகி, நபி(ஸல்) அவர்கள் மொழிந்துள்ள அழகிய இஸ்லாமிய குணங்களை ஏற்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com