இறை எளிமையை வியந்த வள்ளலார்!

வள்ளலார் தமது உயர்ந்த கருத்துகளை எல்லாம் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இவ்வுலகத்தாருக்கு அருளி இருக்கிறார்.
இறை எளிமையை வியந்த வள்ளலார்!

வள்ளலார் தமது உயர்ந்த கருத்துகளை எல்லாம் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இவ்வுலகத்தாருக்கு அருளி இருக்கிறார். அவர் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் பொருள்கள் பொதிந்திருக்கின்றன. அப்படியொரு பொருள் பொதிந்த பாடலைக் காண்போம்.

""கரும்பின் மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்

கண்ணனையீர் கனசபை கருதியசிற் சபைமுன்

துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்

துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை

விரும்புறஆ யிற்றிதுதான் தருணம் இந்தத் தருணம்

விரைந்தருள வேண்டுமென விளம்பி நின்றேன் அடியேன்

பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்

பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே''

முதல் வரியை மேலோட்டமாகப் பார்த்தால், கரும்பின் சுவையைக் கூறுகிறார் என்றே தோன்றும். ஆனால், அதில் ஒரு நுட்பத்தை வைத்துள்ளார். இறைவனை நோக்கி உண்மை தியானம் பயிலும் மகான்களுக்கு சிரசின் உச்சியில் தேவாமிர்த சுவையோடு ஒரு துளி அமுதம் சுரக்கும். அது வயிற்றுப்பசியை அடக்கி ஞானப்பசியை ஏற்படுத்தும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். "கண்ணனையீர்' என்பது அமுதம் சுரந்தபின் அவர்க்கு மூன்றாவது கண்ணாக சிவனே தோன்றுவான் என்கிறார்.

"உடலென்னும் கனக சபையில் விளங்கும் உள்ளமெனும் ஞான சபையின் முன் பக்குவமில்லா காலத்தே பல தீங்கினைப் புரிந்து துரும்பைவிட சிறியேனாகிவிட்ட நான், பின் உணர்ந்து உன் அருளுக்காக துயரத்தோடு நின்றிருந்தேன். "துயரப்படாதே! என்னிடம் வருவதற்கு கால எல்லையுண்டு' என்று என்னைத் தேற்றிய தலைவா! அவ்வெல்லை நான் விரும்பியது போல் இப்பொழுது வந்துவிட்டது. இத்தருணத்தில் விரைந்து அருள வேண்டும்' என்கிறார். மேலும் அவர், "தன் ஐம்புலன்களை அடக்கி, உலகப் பற்றினை அறுத்து ஏழு ஆதார சக்கரங்களை ஒளிரச்செய்து சகஸ்ராகாரச் சக்கரத்தில் சதாசிவ தரிசனம் காணும் காலம் வந்துவிட்டது. இனி சிறிதும் உன்னைப் பிரியமாட்டேன் என்றும், இறைவனை விரைந்து வந்து அருள வேண்டும்' என்றும் வேண்டுகிறார்.

கருவிலே திருவுற்ற வள்ளல் பெருமான் பிழைகள் செய்திருப்பாரா? ஆனால் அவர் கூறுகிறார். என்னே ஒரு தன்னடக்கம்! அவ்வடக்கமே அவரை அருட்பெருஞ் ஜோதியாக - சிவஜோதியாகப் பிரகாசிக்கச் செய்கிறது. "பெற்றவளில் பெரிதே' என்பதில் தாயைவிட உயர்ந்தவன் என்று இறைவனைப் பாராட்டுகிறார். உலகில் தாயன்பு ஈடு இணையற்றது. அதைவிடப் பெரியது இறையன்பு. தானறியா ஓர் அனுபவத்தை பிற உயிர்களிடத்துக் காட்டும் பெருங்கருணை கொண்டவர்தான் சிவபெருமான் என்பதைத்தான் உளம் நெகிழ்ந்து உலகுக்கு உணர்த்தியுள்ளார் வள்ளலார். எவ்வளவு நுணுக்கமான - நுட்பமான செய்தி! வள்ளலாருக்குக் கிடைத்த இந்த இறையனுபவம் நமக்கும் வாய்க்க வேண்டுமானால், வள்ளலார் காட்டிய வழியில் நடந்து ஞானம்பெற முயற்சி செய்வோம் - தியானப் பயிற்சி செய்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com