தற்பெருமை' மனித உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு வகை தொற்று நோய். அது அனைத்து நற்செயல்களையும் அழித்துவிடும் வல்லமை பெற்றது. நாம் அதை நீக்கி நற்பண்புடன் நடந்தால், இறையன்பு - இறை மன்னிப்பு இரண்டினையும் பெறலாம்.
இக்காலத்தில் "புகழையும் - புகழ்ச்சியையும்' விரும்பாத மனிதர்களே இல்லை. இதனை அறவே விரும்பலாகாது என இறைவன் அல் குர்ஆன் அத்.31, வசனம் 18இல் கூறுவதைக் காண்போம்.
"(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை''.
கல்வி - கேள்வி, சொத்து - சுகம், பட்டம் - பதவி அனைத்தும் மனிதர்களுக்கு இறைவன் அருளிய அருட்கொடை. மனிதனை சோதிக்கவே இறைவன் அளித்துள்ள சன்மானங்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நமக்கு ஹஜ் - உம்ரா போன்ற ஒரு நற்செயல் புரிய நற்பேறு கிடைத்தால், நாம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அதை மக்களிடம் விளம்பரப்படுத்தவே கூடாது. ""நான் ஹஜ் - உம்ரா கடமைகளைப் புரிந்துள்ளேன். இவ்வளவு தொகை ஜகாத்தும், தர்மமும் செய்துள்ளேன்'' என ஒரு மனிதன் பெருமை பேசினால், அம்மனிதன் இறைவனின் கோபத்திற்கு ஆளாவான்.
தூய்மையான எண்ணத்தோடு நற்காரியம் செய்பவர் தற்பெருமை செய்ய மாட்டார். தாம் செய்யும் நற்காரியங்களை இறைவன் ஏற்பானா அல்லது நிராகரிப்பானா என அஞ்சுவர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் "பணிவு' என்கிற நற்பண்புடன் நடந்துகொள்வார்கள். "புகழ் - புகழ்ச்சி' என்பதெல்லாம் அவர்கள் அறியாதவர்கள், அவர்களிடம் தற்பெருமை என்கிற கர்வம் கிடையவே கிடையாது.
""பணிவாக இருங்கள்; நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கர்வம் கொள்ள வேண்டாம். என அல்லாஹ் எனக்கு "வஹீ' (இறை அறிவிப்பு) அறிவித்துள்ளான்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்).
நான்காம் கலீஃபா (ஜனாதிபதி) அலீ(ரலி) அவர்களிடம் ""நபிகளார் அவர்களுக்குப் பிறகு மக்களில் சிறந்தவர் யார்?'' எனக் கேட்டார் ஒருவர். ""அபூபக்கர்'' என்றார்கள் அலீ (ரலி). மீண்டும் "அவர்களுக்குப் பிறகு?'' என்றதும், ""உதுமான்'' என்று சொல்லிவிடலாம் என அஞ்சி, ""மக்களில் சிறந்தவர் நீங்கள் தானே?'' எனக் கேட்டார் அம்மனிதர். உடனே கலீபா அலீ (ரலி), ""நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என பதிலளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களால் எத்தனையோ உயர்வான போற்றத்தக்க நற்செய்திகள் சொல்லப்பட்டவராக கலீஃபா அலீ(ரலி) அவர்கள் இருந்தும்கூட, தன்னை சாதாரணமானவன் என சொன்னது அவர்களின் பணிவின் அடையாளம். ஆனால், இக்காலத்தில் உயர்பதவி வகிப்பவர்களை சற்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
தன்னை பிறரைவிட உயர்த்திக்காட்டும் நோக்கம் நபித் தோழர்களுக்கு அறவே இருந்தது கிடையாது. எனவே, மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்பாமல், ""எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்ற திருக்குர்ஆன் வசனத்தை நாம் அனைவரும் மனதில் பதிந்தால், "தற்பெருமை' அகன்று "பணிவு' என்ற பண்பானது நமது உள்ளத்தில் இயல்பாகவே வந்து சேரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.