ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு!

பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பெரும் சிவபக்தன். வனவாசத்தின்போது ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு ஓர் உபதேசம் அருளினார்.

News image
Updated On :7 நவம்பர் 2014, 3:04 pm IST

பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பெரும் சிவபக்தன். வனவாசத்தின்போது ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு ஓர் உபதேசம் அருளினார். ஸ்ரீ வேணுபுரம் என்று பெயர் பெற்ற ஸ்தலத்தில் அவனைத் தவம் செய்யச் சொல்லி அனுப்பினார். அந்த இடம் அடர்த்தியான மூங்கில் மரங்கள் நிறையப் பெற்ற ஒரு புனிதமான இடம். அதனால் ஸ்ரீ வேணுபுரம் என்ற பெயரே ஏற்பட்டதாம். அத்துடன் அந்த மூங்கில் வனத்தில் வேடர்கள் கூட்டம் கூட்டமாக நிறைய பேர் வசித்ததால் திருவேட்களம் என்ற பெயரும் அதற்கு உண்டு.

இந்த மூங்கில் வனத்தில் ஒரு மூங்கில் மரத்தடியில் அக்னி வளர்த்து அதன் நடுவே ஒரு காலில் நின்று தன் இஷ்ட தெய்வமான சிவனை நினைத்துப் பெரும் தவம் செய்தான். இந்தச் செய்தி துரியோதனனுக்கு எட்டிற்று. அவன் சும்மா இருப்பானா? ஏற்கெனவே பெரும் வில் வீரனான அர்ச்சுனன் தவம்புரிந்து சிவனிடமிருந்து கூடுதல் வரங்களைப் பெற்று விட்டால் அவனை வெல்ல யாராலும் முடியாதே... அதனால் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க மூசாசுரன் என்ற அரக்கனை ஏவினான். அந்த அரக்கன் பன்றி உருவெடுத்து உறுமியபடி அர்ச்சுனன்மீது பாய்ந்து அவன் தவத்தைக் கலைக்க முயன்றான்.

சினமுற்ற அர்ச்சுனன் பன்றியை நோக்கி தன் வில்லில் நாண் பூட்டி அம்பு ஒன்றை எய்தினான். அவன் எய்த அம்பு பன்றியின் ஒரு பக்க விலாவில் பாய்ந்தது. அதேநேரத்தில் இன்னொரு அம்பும் படுவேகமாகப் பாய்ந்து பன்றியின் இன்னொரு விலாபக்கத்தில் குத்தி நின்றது! இரண்டு அம்புகளும் முன்பின் என்றில்லாமல் ஒரேநேரத்தில் பன்றியை குத்தி நின்றன! அந்த இன்னொரு அம்பை எய்தவர்... அர்ச்சுனனின் தவத்தை மெச்சி அவனைக் காக்கும் பொருட்டு வேடர் உருத்தாங்கி வந்த சிவபெருமானே!

அம்புகளால் அடிபட்ட பன்றி அப்போதே கீழே விழுந்து உயிரை விட்டு விட்டது. ஆனால் அந்தப் பன்றியை அம்பெய்திக் கொன்ற பெருமை யாருக்கு என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு விட்டது! இருவருமே, "தான் எய்த அம்பால்தான் பன்றி செத்தது' என்று வாதிட்டனர். தன் எதிரே வேடர் வடிவில் இருப்பது தான் அருந்தவம் செய்து காணமுயன்ற சிவபெருமான் என்பது அர்ச்சுனனுக்குத் தெரியாது. "கேவலம் இந்தக் காட்டு வேடனுக்கு இவ்வளவு திமிரா!' என்று அர்ச்சுனனுக்கு கடுங்கோபம்! அதனால் உனக்காச்சு, எனக்காச்சு என்ற ரீதியில் வேடனுடன் போரிட்டான். அந்த வேடன் ஒன்றும் அர்ச்சுனன் நினைத்தது போல லேசுப்பட்ட வேடன் இல்லை! அதை வெகு விரைவில் அர்ச்சுனனே அவன் போர் செய்த முறையை கண்டு தெரிந்து கொண்டான். ஒரு கட்டத்தில் அர்ச்சுனனிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் வென்று வீழ்த்தி விட்டான் அந்த அசகாய சூரனான வேடன். ஏன்... அக்னி பகவானைப் பிரார்த்தித்து அவரிடமிருந்து பெற்ற இணையற்ற காண்டீபம் என்றும் மகா சக்தி வாய்ந்த வில்லின் நாணையே அறுத்து விட்டான் அந்த வேடன்! அதுகண்டு வெகுண்ட அர்ச்சுனன் அந்த வில்லால் வேடனின் தலையில் ஓங்கி அடித்தான்! (அதனால் ஏற்பட்ட காயத்தை இந்தத் தலத்தில் சிவலிங்கத் திருமேனியில் இன்றைக்கும் காணலாம்.)

இதையடுத்து ஆயுதம் ஏதுமின்றி கைச்சண்டையாக வேடனிடம் மோதினான் அர்ச்சுனன். இந்த மற்போரின்போது, அர்ச்சுனன்தான் வேடன்மீது சரமாரியாக அடிகளைப் பிரயோகித்தானே தவிர, அந்த வேடன் அந்த அடிகளை மிக லாவண்யமாகத் தடுத்து அர்ச்சுனனை இறுகத் தழுவி அவனை அதிகம் அடிக்க விடாமல் தடுத்தான்.

அதேநேரம் இனம் புரியாத பேராற்றல் தன் உடலில் புகுந்து உற்சாகம் ஏற்படுத்துவதையும் அர்ச்சுனன் உணர்ந்தான்! எல்லாம் சிவபெருமானின் அருள். தன்னையே அடிக்கும் அளவிற்கு அர்ச்சுனனுக்கு உறுதியான மனத்தையும் ஆற்றலையும் தன் தழுவலால் அவனுக்கு வழங்கினார். இறுதியில் சிரித்தபடி சிவன் தன் சுய உருவைக் காட்ட அர்ச்சுனன் மனம் நெகிழ்ந்து அவர் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினான். சிவன் அர்ச்சுனனுக்கு இப்பொழுது பாசுபதம் என்னும் மகாசக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பரிசாக அளிக்கிறார். அத்துடன் அவருடன் போட்ட சண்டையில் உடைந்த காண்டீபம் மற்றும் அனைத்து ஆயுதங்களையும் அவனுக்கே திரும்பத் தந்து விடுகிறார் சிவபெருமான்!

(இந்த நிகழ்ச்சியைத்தான் அருணகிரி நாதர் அருளிய தொண்டை மண்டலத் திருப்புகழ் 47 வது பாடலில், "சிலைதனைக் கொடு மிக அடித்திட மனம் தந்த' என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.