வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

களத்திர தோஷம் போக்கும் எட்டியத்தளி சிவாலயம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள

Updated On :21 ஆகஸ்ட் 2015, 11:04 am

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம் எட்டியத்தளி! இங்கு தொண்டை மண்டலத்தை ஆண்ட காளியங்கராய மன்னரால் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்றுள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீ அகத்தீஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி.

ஒரு சமயம் அகத்திய முனிவர் ராமேஸ்வரம் செல்வதற்காக இந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தை அடைந்தார். மாலை நேரமாகிவிட்டதால் நித்திய கர்மானுஷ்டங்களை முடிக்க எண்ணினார். அப்போது இந்த இடத்தில் ஒரு குளமும் சுயம்பு லிங்கம் ஒன்றும் இருப்பதைக் கண்டார். அந்த குளத்தில் குளித்து பூக்களால் சுயம்பு லிங்கத்தை அர்ச்சித்து பூஜைகளை முடித்து இரவு அங்கேயே தங்கிவிட்டார்.

அச்சமயம், அஷ்டமத்து சனியினால் பீடிக்கப்பட்டிருந்த தொண்டைமண்டல மன்னன் காளிங்கராயன், சனி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடவும் பின்னர் ஜோதிடர் சொன்னபடி திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடவும் இப்பகுதிக்குத் தம் பரிவாரங்கள் சூழ வந்தடைந்தார். எதிர்பாராத விதமாக மன்னனும் மாமுனியும் சந்தித்து மகிழ்ந்தனர். மன்னன் வருகை விபரமறிந்த மாமுனிவர் அஷ்டமத்து சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த சுயம்பு லிங்கத்தை மூலஸ்தானமாக வைத்து இந்த இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்றும் அம்பிக்கைக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் சூட்டினார். அதன்பின் இங்கு சிவாலயம் அமைக்கும் படியாகச் சொன்னார்.

இவ்வாலயத்தில் சனி பகவான் சிறப்பான சக்தியுடன் இருக்க, நவக்கிரக சந்நிதிகள் அமைத்து அதில் கருவறையில் உள்ள இறைவனின் திருப்பார்வை ஈசான்யத்தைச் சற்றே பார்க்கும்படியாக அமைத்துள்ளது சிறப்பாகும். அதனால் இத்தலத்து சனி பகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். மற்ற ஆலயங்களில் சனி பகவானுக்கு இடதுபுறம் ராகு பகவானும் வலதுபுறம் கேது பகவானும் அமைந்திருப்பர். ஆனால் இங்கு, வலப்பக்கதில் ராகு பகவானும் இடப்பக்கத்தில் கேது பகவானும் அமைந்து அருள்கின்றனர். மேலும் ராகு பகவானின் பார்வை சனி பகவான் மீது படுவது சிறப்பாகும்.

மற்றுமொரு சிறப்பாக, இங்கு இரண்டு அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கு களத்திர தோஷம் இருந்ததாகவும் எட்டியத்தளியில் அகத்திய முனிவர் சிவனை பூஜித்து வணங்கியதால் அந்த களத்திர தோஷம் நீங்கிவிட்டதால் அதற்கு பரிகாரமாக மூலவருக்கு அருகில் அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் ஓர் அம்மனும் எழுந்தருளி அருள்கிறார்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் உடையவர்கள் இங்கு வந்து சுவாமியையும் இரண்டு அம்மன்களையும் வணங்கினால் களத்திர தோஷம் விலகும். அகிலா அம்மனின் பார்வை எப்போதும் நவக்கிரகங்களின் மீது விழுவதால் நவக்கிரகங்கள் மேலும் ஆற்றலுடன் விளங்குவதாக ஐதீகம். அகத்திய முனிவர் சொல்லியவண்ணமே, மன்னன் காளிங்கராயனும் ஆலயத்தை உருவாக்கி குடமுழுக்கு செய்து சிறப்பித்தான். இவ்வாலயம் இந்துசமய அற நிலையத்துறையின் கீழ் இயங்குகிறது.

- எஸ்.ஆர். ரெங்கராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.