தழும்பேறிய தாமோதரனுக்கு செப்.4-ல் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷ்ணம்
விஷ்ணுவிற்கு 1008 திருப்பெயர்கள் இருந்தாலும் முக்கியமானவை பன்னிரு பெயர்கள் ஆகும். கேசவன்,


விஷ்ணுவிற்கு 1008 திருப்பெயர்கள் இருந்தாலும் முக்கியமானவை பன்னிரு பெயர்கள் ஆகும். கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பனவாகும். இவற்றில் "தாமோதரன்' என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்பெயர், விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் இறுதியும் உறுதியுமானதுமாகும். கார்த்திகை மாதம் - தாமோதர மாதம் என அழைக்கப்படுகிறது. பாரதப்போரில் பிதாமகன் பீஷ்மன் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தோத்திரம் செய்தார். அதனில் 367-ஆவது பெயராக வரும் சொல்தான் தாமோதரன் என்பதாகும்.
கிருஷ்ணாவதாரத்துடன் தொடர்புடைய பெயர் தாமோதரன். கண்ணன் ஒருத்தி மகனாய் பிறந்தது சிறையில் ஓரிரவில் பயணப்பட்டு வளர்ந்தது மற்றும் சிறுபருவக் குறும்புகள் செய்தது அனைத்தும் ஆயர்பாடியில் ஆகும். பஞ்ச பாண்டவர்களுக்குத் துணை நின்று தர்மத்துக்காகப் போராடி கீதோபதேசம் செய்தவன் ஸ்ரீ கிருஷ்ணனாகும். அவன் அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையாவான். அதனாலேயே அவன் பெயர் தாமோதரன் எனப்படுகிறது.
மகாபாரத யுத்தம் ஏற்படுவதற்கு முன், பழக்க தோஷத்தில் சகாதேவன், "உன்னைக் கட்டிப்போடுகிறேன் பார்!'' என்று சவால் விட்டான். ஒரு நேரம், அவன் நிஜமாகவே கட்டிப்போடும் படியாகவும் பகவான் நின்றிருக்கிறான். இதுபோன்று பக்தர்களின் வேண்டுகோளுக்குப் பலமுறை கட்டுப்பட்டவன் கண்ணன்.
அத்ரி மஹரிஷி புதல்வன் துர்வாசருக்கும் சூரனின் தங்கை அசுமுகிக்கும் 2 ஆண் மகவுகள் பிறந்தன. வில்வலன், வாதாபி எனப்பெயரிட்டு அவர்களைக் காட்டிலேயே பர்ண சாலையில் வளர்த்தனர். ஞான வழியில் வளர்க்க தந்தை விரும்ப, அசுர குணமுடைய தாயோ வேறு வழியில் பழக்கினாள். மனம் நொந்த துர்வாசர் அவர்களை விட்டகன்றார். கடற்பாங்காய் இருந்த பகுதிக்கு அருகில் இருந்த அந்த வனத்தை வில்வலனும் வாதாபியும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அவர்கள் பெயரால் "வில்லிவாதாபி பாக்கம்' என அப்பகுதியை அழைத்தனர். தன்னைத் தனியாளாக விட்டுச் சென்ற துர்வாசர் பேரில் அசுமுகிக்கு இருந்த வருத்தம் அனைத்து முனிவர் பெயரிலும் திரும்பி, முனிவர்களை அழிக்கத் தன் மக்களுக்குக் கூறினாள். அவர்களில் வாதாபி முனிவர்களின் வயிற்றுக்குள் உணவு வடிவில் செல்ல சற்று நேரம் கழித்து "வாதாபி வெளியே வா!' என வில்வலன் அழைக்க வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்து ரிஷிகள் இறப்புக்குக் காரணமாக இருப்பார்கள் இருவரும். ரிஷிகள் அனைவரும் இதற்கு ஒரு விடிவு வேண்டி திருமாலிடம் சென்றனர். திருமாலும் சேர்ந்து கைலயங்கிரிக்கு செல்ல, "உரிய காலத்தில் அகத்திய மகரிஷி இதற்கு வந்து முடிவு கட்டுவார்!' எனச் சொல்லி திருப்பி அனுப்பினார் சிவன்.
அனைவரும் சிவனின் திருமணம் காணச் சென்றதால் வடநாடு தாழ்ந்தது. சிவபெருமான் அகத்தியரை பொதிகைமலைக்கு அனுப்பினார். அகத்தியர் பொதிகை மலை நோக்கி வர, வழியில் வில்லிவாதாபி பாக்கம் குறுக்கிட்டது. வாதாபி வில்வலன் சகோதரர்கள் அகத்தியரை அழிக்கத் திட்டமிட்டனர். வழக்கப்படி அகத்தியர் வயிற்றுக்குள் உணவாக வாதாபி உள்ளே செல்ல, எப்போதும்போல் வில்வலன் வாதாபியை அழைக்க, ஞானத்தால் இதையறிந்த அகத்தியர், "வாதாபி ஜீரணோத்பவ' எனச் சொல்லி வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகி விட்டான். அதனால் கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் முருகன், சிவன், திருமால் தெய்வங்களை வேண்டினார். அவர்கள் ஒரு தர்ப்பத்தை அஸ்திரமாக அனுப்பக் கூறினர். அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல் எடுத்து கமண்டல நீர் தெளித்து ஏவி அவனையும் சம்ஹாரம் செய்தார்.
அசுரர்களானாலும் அவர்களை கொன்ற செயல் பாவம் நீங்க "அங்காரக தீர்த்தம்' உண்டாக்கி அதில் நீராடி சிவன் திருமால் இருவரையும் வணங்கினார்.
அகத்தியர் சூட்டிய பெயரான "வில்லிவாதாபி பாக்கம்' பின்னர் "வில்லிவாக்கம்' எனவும் அகத்தியர் வில்வலனைக் கொன்ற பகுதி "கொன்ற ஊர்' என வழங்கப்பட்டு "கொன்னூர்' என இன்றும் வழங்கப்படுகிறது. சிவன் அகத்தியருக்கு காட்சி தந்ததால் "அகத்தீஸ்வரர்' எனவும் அன்பாக அகத்தியர் அழைத்ததால் அன்பு என்னும் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு திருமால் வந்து நின்று அருளியதால் "தாமோதரன்' எனவும் அழைக்கப்பட்டார். தாம என்றால் கயிறு என்று பொருள். உதரம் என்றால் வயிறு எனப்படும். கயிற்றால் வயிற்றில் கட்டப் பட்டவன் என்ற பொருளே "தாம உதரன்' - "தாமோதரன்' ஆனார்.
சென்னை, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு செளமிய தாமோதரப் பெருமாள் கோயில். "செளமிய' என்றால் "அழகு' என்பது பொருளாகும். அதற்கு ஏற்றாற் போல் அழகிய மணவாளனாக ஸ்ரீதேவி பூதேவி துணை இருக்க நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்று அருள்புரிகிறார் ஸ்ரீ செளமிய தாமோதரப் பெருமாள்.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இத் திருக்கோயில், இங்கு வந்து வணங்கியோருக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் "ஆனந்த க்ஷத்திரம்' என அழைக்கப்படுகிறது. யசோதையால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு உள்ள வயிறு உள்ளவர் இந்த தாமோதரன்! அதற்கேற்ப வில்லிவாக்கம் செüமிய தாமோதரப் பெருமாள் வயிற்றில் தாம்புக் கயிறு இறுக்கிய வடு இருப்பதும் திருமஞ்சன நேரத்தில் அதனைக் காண முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்ரீ அம்ருதவல்லி என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி சேவை தருகிறாள். ஆண்டாளும் தனி சந்நிதியில் எழுந்தருளி அருளுகிறாள். ஆழ்வார்கள், கருடன், ஆஞ்சநேயர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்து விளங்குகின்றன.
தற்போது திருக்குளம் உட்பட அனைத்து சந்நிதிகளும் செப்பம் செய்யப்பட்டு விமானங்கள் ராஜகோபுரம் ஆகியவை பழுது பார்த்து குறைகள் நீக்கப்பட்டு முழுவதும் புதுப்பிக்கப் பட்டுள்ளன. எதிர்வரும் 2.9.2016 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 4.9.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷ்ணம் நடைபெறுகின்றது. அன்று இரவு பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
தொடர்புக்கு: 044 - 26173306.
- இரா. இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...