அருள்மழை பொழியும் அகோரமூர்த்தீஸ்வரர்!
திருவெண்காடு திருத்தலம் காவிரிக்கு வடகரையில் அமைந்த பாடல் பெற்ற 63 தலங்களில் பதினோறாவது தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில்


திருவெண்காடு திருத்தலம் காவிரிக்கு வடகரையில் அமைந்த பாடல் பெற்ற 63 தலங்களில் பதினோறாவது தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம், 108 சக்தி பீடங்களுள் ஒன்று. இங்கு சிவபெருமானின் 64 மூர்த்தங்களையும், அதில் 43 ஆவது வடிவான அகோரமூர்த்தி வடிவத்தையும் காணலாம். இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்
படுகிறது.
திருவெண்காடு என்றதுமே நவ கிரகங்களில் நடுநாயகமாய் விளங்கும் புதனுக்குரிய தலம் என்பதே நம் நினைவிற்கு வரும். சந்திர தீர்த்தம், சூரியதீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்களையும் சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோர
மூர்த்தி என்ற மூன்று மூர்த்திகளையும், பிரம்மவித்யாம்பிகை, காளி, துர்க்கை என மூன்று சக்திகளையும், ஆல், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களையும் கொண்ட இத்திருத்தலம் நால்வரால் பாடப்பெற்ற பெருமை பெற்றது. சுவேதருக்கு காமிகாகமம், நடராஜருக்கு மகுடாகமம், அகோரருக்கு காரணாகமம் ஆகிய முறையில் வழிபாடுகள் நடத்தப்
படுகின்றன.
திருவெண்காட்டுக்கு வட எல்லையில் அமைந்து இருக்கும் மணிகர்ணிகா நதிக்கரையில் ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி சுவாமிகளின் சமாதி உள்ளது. புதன் தனது அலி தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டு நவக்கிரக பதவி அடைந்தார். இங்கு தனி சந்நிதியில் புதன் வீற்றிருந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சைவசித்தாந்த முதல்நூலை எழுதிய மெய்கண்டார் அவதரித்த திருத்தலம். மகாவிஷ்ணு பூஜை செய்து சுதர்சன சக்கரம் பெற்றார். புலிப்பாணி சித்தர், இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்பட்ட திருத்தலம்.
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்றாய் போற்றப்படும் இத்தலம், "ஆதிசிதம்பரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலப்பெருமானை சுவேதாரண்யர் (திருவெண் காடுடையார்),
அம்பிகையை பிரம்ம வித்யாம்பிகை (பெரிய நாயகி) என்றும் போற்று
கின்றனர்.
சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் மிகுந்த கலை அழகுடன் உள்ள துர்க்கை சந்நிதியும், மற்றும் காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது.
இத் திருக்கோயிலின் தலவரலாற்றின்படி, மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவிடம் பெற்ற வரங்களால் இறுமாந்து, தேவர்களையும் முனிவர்களையும் பலவாறாக துன்புறுத்தி வர, சிவபெருமான், அவர்களைத் திருவெண்காட்டுக்குச் சென்று மறைந்திருக்க அறிவுறுத்திவிட்டு, நந்திகேஸ்வரரை அவ்வசுரனை அழிக்க அனுப்பினார். நந்திகேஸ்வரரும், அவ்வசுரனைப் பிடித்து கடலுக்குள் தூக்கி எறிந்தார். ஆனாலும் மீண்டுவந்த அவ்வசுரன், சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அவரது சூலாயுதத்தை வரமாகப் பெற்றுக்கொண்டு, மீண்டும் அட்டகாசம் செய்தான். இம்முறை, சிவன் நந்தியை அனுப்பிய போது, அவன் சிவபிரானின் சூலாயுதத்தால் நந்தியைத் தாக்கி, படுகாயமுறச் செய்தான். இவ்வாறு விழுப்புண்களை இக்கோயிலில் உள்ள நந்தி சிலையில் இன்றும் காணலாம்.
நந்தி காயமுற்று தோற்று வந்ததைக் கண்ட சிவபிரான், பெருங்கோபம் கொள்ள, அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் என்னும் தெற்கு நோக்கிய முகத்திலிருந்து "அகோர மூர்த்தி' தோன்றினார். அவர் தானே போருக்குச் சென்று அவனை அடக்கினார். இத் திருக்கோயிலில் உள்ள அகோர மூர்த்தியின் சிலை அவரின் பெருங்கோபத்தினை நன்கு வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அச்சிலையின் அடியில் மருத்துவாசுரனைக் காணலாம்.
இத்திருத்தலத்தின் சிறப்பே இவ்வாலயத்தின் வடக்கு உட்பிராகாரத்தில் தனிச்சந்நிதியில் அருள்புரியும் இந்த அகோரமூர்த்தியே ஆவார். இவர், செவ்வாடைஉடுத்தி, ஆயுதங்கள் தாங்கிய எட்டு கரங்களுடன், மீசை மற்றும் கோரைப்பற்களோடு வீரக்கோலத்
துடன் நின்ற நிலையில், சூலத்தை இடக்கையில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு, தலையை சற்று சாய்த்து, இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி தன் பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்ற வரும் கோலத்தில் அற்புதமாய் காட்சி தருகிறார்.
கலைநயம் மிக்க உற்சவ மூர்த்தியும் மூலவர் சந்நிதி அருகிலேயே காணப்படுகிறார். அகோரமூர்த்தி சந்நிதியில் 8 பைரவர்கள் இருப்பதும் மிகவும் விசேஷமானதாக உள்ளது. அகோரமூர்த்தி சுவாமி சந்நிதிக்கு எதிர் சந்நிதியில், எட்டு கரங்களுடன் சுவேத மகாகாளி அருள்புரிகிறாள்.
இத்திருத்தலத்தில் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. மாசி மாத, ஞாயிறு, பூர நட்சத்திரத்தில், மருத்துவாசுரனை அடக்க, அகோரமூர்த்தி தோன்றினார் என்ற புராண வரலாற்றின்படி, ஒவ்வொரு ஆண்டும் அதே நேரத்தில் மருத்துவாசுரனை அடக்கும் திருவிழா நடை
பெறுகிறது. அதனால் ஒவ்வொரு மாத பூர நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அதேபோல் ஒவ்வோர் ஞாயிறன்றும் நள்ளிரவில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மகாருத்ர அபிஷேகமும் சிறப்புப் பூஜைகளும் பொதுமக்களின் மண்டகப்படிகளும் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. இவ்வருடம் இத்திருநாள் 4.12.2016 ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.
தடைகளைப் போக்கி நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோரமூர்த்தி. கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்க
மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பொழியும் அருள் மழைக்கு எல்லையே இல்லை எனலாம். இத்
திருக்கோயிலில் உள்ள மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபட, நினைத்த செயல் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...