

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இரண்டு மலைக்கோயில்களில் ஒன்று மருந்து மலை, இரண்டாவது திருமலையாகும். இன்றைக்கு திருமலை என்று அழைக்கப்படும் இவ்வூர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் குன்றுத்தூர், கோனேரிப்பட்டி ஆகிய இரண்டு பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. திருமலைக்குன்றின் உச்சியில் பம்பரமலைக்கு மேற்கே உள்ள பெரிய பாறைகளின் இணைவில் வடக்கு நோக்கி இரு குகைகள் அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளப்
பகுதியில் சமணர்களின் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இவை, பாண்டவர் படுக்கை, இராமர் சீதை படுக்கை, சித்தர் படுக்கைகள் என அழைக்கப்படுகின்றன.
இங்குச்சித்தர்கள் வாழ்ந்தனர் என்றும் அவர்கள் இம்மலைக்குகைகளின் உள்ளே சென்று ஜீவசமாதி அடைந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது என்றும் கூறப்படுகிறது. இறப்பை பொய்யாக்கும் மூலிகைகள் இக்குன்றைச் சார்ந்து கிடைத்துள்ளன. குறிப்பாக, பொய்கால்பட்டி, பொய்காலிக் கண்மாய் எனும் பகுதிகளில் அம்மூலிகைகள் நிறைய இருந்துள்ளதாகவும் சொல்கின்றனர். அம்மூலிகைகளைக்கொண்டும் முறையான பயிற்சிகளின் வாயிலாகவும் ஜீவசமாதியடைந்த சித்தர்களின் சக்தியினாலும் இக்கோயிலில் வழிபடும் மக்களின் குறைகள் நிவர்த்தியாகின்றன.
திருமலையில் காணப்படும் சமணப்படுக்கைகளின் அமைப்பு மிகவும் கவனத்துக்குரியதாக உள்ளது. இப்படுக்கைகள் சமதளப்படுக்கையாக இல்லாமல் தலைவைக்கும் பகுதி உயரமாகவும் அங்கிருந்து கால் நீட்டும் பகுதி சீரான இறக்கமாகவும் உள்ளன. சமணர் படுக்கைகள் காணப்படும் இடத்திற்கு மேல் சுவஸ்திக் எனப்படும் முத்திரை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படுவது அரிது.
இங்குள்ள மலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோயில்! இக்கோயிலினுள் வடநோக்கிய குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. குடைவரையின் முன்னே குடைவரையினை உள்ளடக்கி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில்களின் நாற்புறங்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் திகழவேண்டும் என்பது விதியாகும். இக்கோயில் ஓர் ஒட்டுக்கோயில் என்பதால் இதன் நாற்புறங்கள் அதாவது திருச்சுற்றுகள் ஒரு குறிப்பிட்ட அளவாய் அமையாமல் மாறுப்பட்டுள்ளன. சமணப்பள்ளிகள் மற்றும் படுக்கைகள் காணப்படும் இடங்கள் வழிப்பாட்டிற்குரியவையாக இருந்து பிறகு அவ்விடங்களிலேயே திருக்கோயில்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைக் குடவரை கோயில் உள்ள இறைவன். கட்டுமானக்கோயில் உள்ள இறைவன் எனப்பகுத்துக் காணலாம். குடைவரையில் உள்ள இறைவன் இறைவியர் "உமாசகிதமூர்த்தி' ஆவார். மக்கள் தற்போது "மீனாட்சிசுந்தரேஸ்வரர்' என்று அழைக்கின்றனர். கட்டுமானக்கோயில் உள்ள இறைவன் "மலைகொழுந்தீஸ்வரர்' ஆவார். மலைகொழுந்தீஸ்வரராக விளங்கும் லிங்கத் திருமேனி நேராக இல்லாமல் சற்று சாய்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக, ஆவுடையாரில் துளைபோட்டு அதற்குள் லிங்கத்தைச்சொருகி இணைத்திருப்பர். ஆனால் இங்கு ஆவுடையார் இரண்டு பாகங்களாக அடிக்கப்பட்டு லிங்கத்தின் முன் ஒருபகுதியாகவும் பின் ஒருபகுதியாகவும் இணைக்கப்பட்டுள்ளன.
குடைவரைக்கோயிலின் கருவறையில் மேற்கு உட்புறச்சுவரில் கிழக்கு நோக்கியவாறு சிவனும் உமையும் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. இத்தோற்றத்தை மக்கள் "கல்யாணசுந்தர மூர்த்தி' என்றழைக்கின்றனர். இங்குக்காணப்படும் இத்திருவினைப்போன்று பிரான்மலைக்குடைவரை மற்றும் ஆணைமலை லாடன் கோயிலிலும் காணப்பெறுகிறது. மலை
கொழுந்தீஸ்வரர் கருவறையினுள் கிழக்கு நோக்கியவாறு லிங்க விடிவில் காட்சி தருகிறார். பாகம்பிரியாள் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு முகமாக காட்சி தருகிறாள். இருகரங்களுள் வலதுகரம் மலரை ஏந்தியுள்ளது; இடது கரம் கடிய வலம்பிதமாக உள்ளது. தலையில் கரண்ட மகுடம் மற்றும் சிலம்பு போன்ற அணிகலன்கள் அம்மனை அழகு செய்கின்றன.
திருமணம் விரைவில் நடைபெற இக்கோயில் சேங்கையில் நீராடி மலையினை 7முறை வலம் வந்து வழிபட, திருமணம் விரைவில் நடந்தேறும். பெண்கள் கணவருடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ, உமாசகித மூர்த்திக்கு பெரிய மாலை வாங்கி சார்த்தி வழிபடுகின்றனர். தீராத நோய், உடல்வலி, முடக்குவாதம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் மலை
கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். குழந்தைப் பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருமேனி சற்று வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது. இவர், கீழ் ஆடைமட்டுமே அணிந்துள்ளார். இவர் அணிந்துள்ள முப்புரிநூல் வலது கையின் மேலே செல்கிறது. இவ்வமைப்பு முற்காலப்பாண்டியர்க்குறிய சிறப்பமைப்பாகும். முருகப்பெருமானின் இடது புறம் துறவி ஒருவரும் வலப்புறம் பெரிய வயிற்றுடன்கூடிய அடியவர் ஒருவர் குடைப்பிடித்தவாறும் உள்ளனர். இச்சிற்பத் தொகுதியில் முருகனின் வாகனமான மயில், சேவல், ஆடு ஆகியவை அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
ஜப்பசி பெüர்ணமியில் அன்னாபிசேகம், திருக்கார்த்திகை ஆகியவை சிறப்பானவை. திருக்கார்த்திகையன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் செல்கின்றனர்.
வழித்தடம்: சிவகங்கையிலிருந்து கீழப்பூங்குடி, கட்டாணிப்பட்டி வழியாக சுமார் 23 கி.மீ. தொலைவில் திருமலை கோயில் அமைந்துள்ளது. மேலும் மதுரையிலிருந்து உறங்கான்பட்டி வழியாகவும் இக்கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு: 94420 51144/ 97512 39014.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.