தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புண்ணியம் தரும் கும்பமேளா - மகாமகப் பெருவிழா!

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகமும் ஒன்று! குருபகவான் சிம்மராசியில் இருக்கும்போது மாசி மாதம் மக நட்சத்திரம், பெüர்ணமி திதியில் வருவது மகாமகம் ஆகும்.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 10:11 am

கைலாசம் சுப்ரமணியம்

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகமும் ஒன்று! குருபகவான் சிம்மராசியில் இருக்கும்போது மாசி மாதம் மக நட்சத்திரம், பெüர்ணமி திதியில் வருவது மகாமகம் ஆகும்.

ஊழி காலத்தில் சிவபெருமானின் ஆணைப்படி பிரம்மா அமுதம் நிறைந்த கும்பத்தில் வேதங்கள், புராணங்கள் இதிகாச ஏடுகளைக் கட்டிக் குடத்தின்மீது தேங்காய், மாவிலை வைத்து நூலால் சுற்றி அதை ஓர் உறியில் வைத்து வெள்ளத்தில் மிதக்க விட்டார்.

வெள்ளத்தால் உலகம் அழியும் காலத்தில் அந்த கும்பம் மிதந்து வந்து கும்பகோணத்தில் தங்கியது. அதை வேடன் வடிவமெடுத்து வந்த சிவன், அம்பால் அடிக்க அமுதம் சிதறிக் குளமாய் பெருகியது. அந்த இடம் "குடமூக்கு' எனப்பெற்று பின்னர் கும்பகோணம் ஆனது. சிவன் அம்பு எய்த இடம், "பாணத்துறை' என அழைக்கப்படுகிறது. அமுதத்தில் நனைந்த மணலை சிவன் அள்ளி லிங்கமாக்கி அதற்குள்ளேயே ஐக்கியமானார். இதனால் "கும்பேஸ்வரர்' என்றும் "அமுதேஸ்வரர்' எனவும் அழைக்கப்பட்டார். வேடனாக வந்த சிவன் வில், அம்புடன் கும்பேஸ்வரர் கோயிலினுள் கிராதமூர்த்தி உருவில் தெற்கு நோக்கி காட்சி தருகின்றார்.

ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள மூலவர் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தி. இறைவி ஸ்ரீ மங்களாம்பிகை என்றும் மங்கள பீடேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சிவலிங்கத்தைத் தாமே பூஜித்ததாக வரலாறு. குடத்தை உடைத்த மூர்த்தி கிராத மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். முருகப் பெருமான் ஸ்ரீ கார்த்திகேயன் என்ற பெயருடன் ஆறு திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியோர் போற்றிப் பாடியுள்ளனர்.

கும்பத்திலுள்ள பகுதிகளான அமிர்த கலசம், வில்வம், உறி, தேங்காய், பூணூல், கூர்ச்சம், தர்ப்பை, சந்தனம், வஸ்திரம் மிதந்து வந்து தங்கிய இடங்களில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில், ஸ்ரீ சோமேசம் ஸ்ரீ அபிமுகேஸ்வரர் ஆலயம், கெüதமீசம், கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் கோயில், சாக்கோட்டை ஸ்ரீ அமிர்தகலாநாதர் கோயில், ஸ்ரீ வராகப் பெருமாள் கோயில்கள் உள்ளன.

மாவிலை விழுந்த இடத்தில் ஸ்ரீ இராமசுவாமி கோயிலும் பூமாலை விழுந்த இடத்தில் ஸ்ரீ சக்கரபாணி கோயிலும் குடத்தின் வாயில் விழுந்த இடத்தில் குடவாசல் கோயிலும் அமைந்துள்ளன. அமிர்த கலசத்திலிருந்த நீர்த்திவலைகள் சிதறிய இடத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. அமிர்த கலசத்திலிருந்து மற்ற பாகங்கள் விழுந்த இடத்தில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். குடவாசல் தவிர அனைத்து கோயில்களும் கும்பகோணம் நகரிலும் அருகிலும் உள்ளன.

குடத்திலிருந்து பெருகிய அமுதம் வழிந்து ஐந்து குரோசம் அளவு (குரோசம் - கூப்பிடுதூரம்) சென்று ஐந்து இடத்தை நனைத்தது. திருவிடைமருதூர், சுவாமிமலை, தாராசுரம், திருநாகேச்சுரம், கருப்பூர் ஆகியவை "பஞ்ச குரோசத் தலங்கள்' என அழைக்கப்படுகின்றன. இவை கும்பகோணத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

குடத்திலுள்ள அமுதம் சிதறி பல இடங்களில் பரவி குளங்கள் போல் காட்சியளித்தன. அமுதம் விழுந்த இடம்தான் மகாமகக் குளம். இக்குளம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்காக நீள் சதுரத்திலும் வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்து, கிழக்கில் குறுகியும் மேற்கில் அகன்றும் வானிலிருந்து பார்க்க ஏறத்தாழ ஒரு குடம் போலவே காட்சியளிக்கிறது. மகாமகக் குளத்தில் 19 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. ஓவ்வொரு குளத்திலும் குளிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்குமெனக் கூறப்படுகிறது. இக்குளம் 16 படித்துறைகள் கொண்டது.

குளத்தைச் சுற்றி 16 சிவாலயங்கள் தனித்தனி மண்டபங்களில் உள்ளன. குளக்கரையில் உள்ளபதினாறு கோயில்களில் உள்ள ஷோடச லிங்கங்களைத் தரிசிக்கலாம். இக் கோயில்களை அய்யன் கோவிந்த தீட்சிதர் கட்டியதாகக் கூறுவர்.

குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா மற்றும் சரயு ஆகிய ஒன்பது நதிகளும் நவ கன்னியர்களாக சிலைகளாக அமைந்துள்ளனர். கும்பகோணத்தில் மகாமகக்குளம் தவிர, சாரங்கபாணிக் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்திலும் காவிரியிலும் நீராட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அருள்மிகு ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மகாமகத் திருவிழா மன்மத வருஷம் மாசி 1 (பிப்ரவரி 13) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாசி 10 (பிப்ரவரி 22) மகாமகக் குளத்தில் மதியம் 12 மணிக்குமேல் 1 மணிக்குள் ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

சிவன் கோயில்களிலுள்ள மூர்த்திகளின் தீர்த்தவாரி மகாமகக் குளத்திலும் பெருமாள் கோயில்கள் மூர்த்திகளின் தீர்த்தவாரி காவிரியிலும் நடைபெறும். 17 கோயில்களிலிருந்தும் சிவபெருமானும், பெருமாளும் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளுவர்.

மனிதர்கள் செய்யும் பாவங்களைப் போக்கிக்கொள்ள தீர்த்த யாத்திரை சென்று அங்குள்ள நதிகளில் நீராடி தெய்வங்களை வழிபட்டு வருவது வழக்கம். புனிதத் தலங்களில் செய்யும் பாவங்கள் காசிக்குச் செல்வதால் விலகுகின்றன. காசியில் புரியும் பாவங்கள் கும்பகோணத்தில் நிவர்த்தியாகின்றன. ஆனால் கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள் அங்கேயே நீங்கி விடுகின்றன என்று கும்பகோண மகாத்மியம் கூறுகின்றது. இதன் மூலம் இத்தலத்தின் பெருமையை உணர முடிகிறது.

கும்பகோணம் நகரிலும் நகரைச் சுற்றிலும் பாடல் பெற்ற சிவத்தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவத் தலங்கள் பலவும் உள்ளன. இது அழைக்க முத்தி தரும் தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.