

இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரத்திற்கு தட்சிண கைலாசம், மச்சகேஸ்வரம் என்ற பெயர்கள் உண்டு. இந்த பெயர்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை புராணங்கள் விவரிக்கின்றன. ஆதிசேடனும், வாயு பகவானும் தங்கள் வலிமையை காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றைப் பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கரையோரமாக விழுந்து திருகோணமலையாக உருவாகியது என்கிறது புராணம்.
இமயமலையின் ஒரு பகுதியே கோண பர்வதம் என்ற நம்பிக்கை காரணமாக கோணேஸ்வரத்திற்கு "தட்சிண கைலாசம்' என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சாவதாரத்திலே தட்சிண கைலாசத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் "மச்சகேஸ்வரம்' என்ற பெயரும் உண்டு. புராண இதிகாசங்களில் இருந்து பல பெயர்களை அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம் என்ற பெயரே நீண்டகால வழக்கிலுள்ள தலப் பெயராகும். நிலாவெளிப் பிள்ளையார் கோயிலில் கிடைத்த சாசனத்தில் இத்தலம், மச்சகேஸ்வரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுக்கதைகளில் ராவணனுடன் தொடர்பு படுத்தபடும் திருகோணமலையின் மற்றுமொரு புனிதத்தலம் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும், கன்னியா சிவன் ஆலயமும் ஆகும். இவற்றை ராவணன் இறந்த தன் தாயின் ஈமக்கடனை நிறைவேற்ற உருவாக்கியதாக மரபுக்கதைகள் கூறுகின்றன.
ஈழத்தின் மிகப் பழைமையான நூலாகக் கருதப்படும் "மகாவம்சம்' திருகோணமலையில் காணப்பட்ட புராதன சிவாலயத்தை, மகாசேனன் மகாயான பெளத்தத்திற்கு ஆதரவாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அழித்தான் என்கிறது. இந்நூல் "கோகர்ண' எனக் குறிப்பிடப்படுவது திருகோணமலை என்பதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
கலிங்க நாட்டில் மகேந்திர மலைத் தொடரிலே கோகர்ணம் என்றொரு சிவாலயம் இருந்தது. கலிங்கத்தை ஆண்ட கீழ்த்திசைக் கங்கர்கள் தங்கள் குலதெய்வமான கோகர்ண சுவாமிக்கு இந்த ஆலயத்தை எழுப்பினர். இது பற்றி கீழைத் தேசக் கங்கர்களின் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.
கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சிக்காலத்தில் உருவாகிய வாயு புராணம் மலைய தீவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கோகர்ண சிவாலயம் பற்றி குறிப்பிடுகின்றது. வாயு புராணத்தில் குறிப்பிடப்படும் கோகர்ண சிவாலயத்தை திருக்கோணேஸ்வரம் என ஏற்பது சரியானதாகும்.
இத்தலத்தில் உள்ள தீர்த்தம் "பாவநாசம்' எனப்படுகிறது. இத்தீர்த்தம், நம்மீது பட்டால் அனைத்து பாவங்களும் போகும் என்பது ஐதீகம்! கோபம் அதிகம் வருகிறவர்கள் கோணேசர் ஆலயத்திற்கு வந்து மனதை ஒரு நிலைப்படுத்தி வேண்டினால் அதிக கோபம் வருகின்றவர்களுக்கு கோபம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெற தொட்டில் கட்டும் வழக்கமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
பங்குனி மாதத்தில் 18 நாள்கள் திருவிழா போன்ற பெருந்திருவிழாக்களுடன் ஒவ்வொரு வாரமும் மகா சக்தி பீட வழிபாடு, மற்றும் மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி போன்ற அனைத்து விழாக்களும் இங்கு வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.