நடாதுரம்மாளுக்கு ஓர் திருக்கோயில்!

திருமாலடியார்களான ஆழ்வார் ஆசார்யர்களில் " பொங்கும் பரிவு' என்ற நிலையில் போற்றப்பட்டவர்களில் விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் நடாதூர் அம்மாளும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 
நடாதுரம்மாளுக்கு ஓர் திருக்கோயில்!

திருமாலடியார்களான ஆழ்வார் ஆசார்யர்களில் " பொங்கும் பரிவு' என்ற நிலையில் போற்றப்பட்டவர்களில் விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் நடாதூர் அம்மாளும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தர்மகர்த்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடந்தது ஒரு சம்பவம். காஞ்சிப் பேரருளாளனுக்கு தினமும் அர்த்தஜாம வேளையில் பால் நிவேதனம் செய்யும் வழக்கம் உண்டு. ஒருநாள், வரதகுரு சந்நிதியில் இருக்கும்போது பரிசாரகர் (தளிகை செய்பவர்- சமையல்காரர்) சூடாக ஆவி பறக்கும் பாலை பெருமாளின் நிவேதனத்திற்காக சந்நிதியில் வைத்து விட்டுச் சென்றுவிட்டார். 

அர்ச்சகரும் அந்தப் பாலை அப்படியே பெருமானுக்கு நிவேதனம் செய்ய முற்பட்டார். இதைக் கண்ட வரதகுரு பதைபதைத்து அர்ச்சகரைப் பார்த்து, "இவ்வளவு உஷ்ணமான பாலை பெருமானுக்கு நிவேதனம் செய்தால் பெருமாளின் செங்கமலத் திருவாய் சிவந்துவிடாதா?' என்று அஞ்சி அர்ச்சகரிடமிருந்து பாலை வாங்கி அதை ஆற்றி உஷ்ணம் தணிந்ததும் அர்ச்சரிடம் கொடுத்து பெருமானுக்கு நிவேதனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அர்ச்சகரும் அவ்வாறு செய்தபோது சந்நிதியில் தேவாதிராஜன் மிக பெருத்த குரலில் வரதகுருவைப் பார்த்து "தேவரின் பரிவிலிருந்து ஒரு தாயின் பரிவைக் கண்டேன் என் அம்மாவே!' என்றுஅசரீரியாக மொழிந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு நடாதுôர் வரதகுரு "நடாதூர் அம்மாள்' என்றே எல்லோராலும் அழைக்கப்படலாயினர். 

இப்பேர்பட்ட ஆசானுக்கு சுவாமி தேசிகனே அடி எடுத்துக் கொடுத்த சம்பவமும் உண்டு. ஸ்ரீ நடாதூர் அம்மாள் தினமும் காஞ்சிப் பேரருளாளன் சந்தியில் உபன்யாசம் செய்வது வழக்கம். ஒருநாள் ஐந்து வயதே ஆன ஒரு குழந்தை உபன்யாசத்துக்கு வந்திருந்தது. (பிற்காலத்தில் அவரே சுவாமி தேசிகன் என்று புகழ் பெற்றார்) குழந்தையின் தோற்றப் பொலிவில் மெய்மறந்த நடாதூர் அம்மாள் தன் உபன்யாசத்தை தொடர நினைத்த போது, எந்த கட்டத்தில் தாம் உபன்யாசம் செய்து கொண்டிருந்தோம் என்பது மறந்து திகைத்தார். இதைக் கண்ட குழந்தை அவர் விட்ட கட்டத்தை ஞாபகப்படுத்தும் படியாக அடி எடுத்து கொடுத்தது. உடனே நடாதூர் அம்மாள்அக்குழந்தையை அள்ளி
எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தார். இதே நடாதூர் அம்மாளுக்கு திருவேங்கடமுடையானே நேரில் வந்து பசி தீர்த்த சம்பவமும் உண்டு. 

ஒருசமயம் நடாதூர் அம்மாள் மார்கழி மாதத்தில் தன் சிஷ்ய கோஷ்டிகளுடன் திருமலை யாத்திரை மேற்கொண்டார். நடை பயணம் களைப்பு. இதனால் அனைவருக்கும் பசி ஏற்பட்டு, மேலும் மலை ஏறி மாலவனைத் தரிசிக்க முடியுமா? என்ற நிலையில் தள்ளாடி சோர்வடைந்து விட்டனர். அப்போது பிரம்மச்சாரி பையன் ஒருவன் வந்து நடாதூர் அம்மாளிடம் தயிர் சாதம் அடங்கிய மூட்டை ஒன்றைக் கொடுத்து விட்டுச் சென்றான். அனைவரும் வியப்பில் ஆழ்ந்து பசியாறி, மலை ஏறி, திருவேங்கடமுடையானை தரிசித்தபோது தான் நடாதூர் அம்மாளுக்கு அந்த பிரம்மச்சாரியின் நினைவு வந்தது. பிரம்மச்சாரி பையனாக வந்தவன் திருவேங்கடத்தானே
என்று எண்ணி புளகாங்கிதம் அடைந்தார்.

இப்பேர்பட்ட பெருமைகளுடைய நடாதூர் ஆசானின் வம்சா வழிவந்தவர்களில் ஒருவரான, கிருஷ்ணசாமி ஐயங்கார், 227, பிராட்வேயில் வரதராஜப் பெருமானுக்கும் ஆஞ்சநேயருக்கும் ஒரு சந்நிதி 100 ஆண்டுகளுக்குள் முன்னதாக நிர்மாணித்தார். அந்த சந்நிதியில் வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள் இவர்களுடன் அனுமான், நடாதூர் அம்மாள் ஆகியோருக்கு வெள்ளியில் திவ்யமங்கள உற்சவ விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து 
வைத்தார். 

ஸ்ரீ நடாதூர் அம்மாள் என்ற ஆச்சார்யனுக்கு அவதாரத் தலத்திலேயே திவ்யமங்கள விக்ரகம் கிடையாது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீரங்கத்தின் அருகில் அமைந்துள்ள திருவெள்ளரை திவ்யதேசத்தில் எங்களாழ்வான் திவ்யமங்கள விக்ரகத்தின் திருவடியில் மட்டும் நடாதூர் அம்மாளின் திருஉருவத்தைக் காணலாம். நடாதூர் அம்மாளின் அவதார நன்னாள் இவ்வருடம், 29.04.2018 -இல் அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com