திருக்கண்ணபுரத்தில் அர்த்தசாமப் பொங்கல்!
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருக்கண்ணபுரம் என்ற திருத்தலம் உள்ளது.


நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருக்கண்ணபுரம் என்ற திருத்தலம் உள்ளது. கிருஷ்ணாரண்ய úக்ஷத்ரம், ஸப்த புண்ணிய úக்ஷத்ரம் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. இத்திருத்தலம் வடக்கே திருமலைராஜனாறு தெற்கே வெட்டாறு இந்த இரண்டுக்குமிடையே பெரிய நிலப்பரப்பில் ஏழு நிலை கொண்ட ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம் நாகமல்லு ஜகந்நாத நாயக்கரால் 1658 - இல் கட்டப்பட்டது.
மூலவர் நீலமேகப் பெருமாள் கிழக்கே திருமுகமண்டலம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். தாயார் கண்ணபுர நாயகி. ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி, தனிக்கோயில் நாச்சியார் என்று பல திருநாமங்கள் கொண்டவர். இங்கு வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும் சயனத்திருக்கோலத்தில் அரங்கநாதனுக்கும் தனித்தனியாக இரு சந்நிதிகள் உள்ளன. அரங்கன் சந்நிதியில் அபூர்வமான நரசிம்மரின் வெண்கலச் சிலை
உள்ளது.
திருக்கோயிலுக்கு எதிரே பெரிய திருக்குளம் உள்ளது. நித்ய புஷ்கரணி என்று பெயர். உற்ஸவர் சௌரிராஜப் பெருமாள். திருவரங்கம் தலம், மேலை வீடு என்றால் இந்தத் தலம் கீழை வீடு என்று உயர்வாகப் போற்றப்படுகிறது. சுவாமி வரத ஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார். அருகே ப்ரயோக சக்கரம். உபய நாச்சியாருக்கு அப்பால், இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும் வலதுபுறம் பத்மாவதி தாயாரும் உள்ளனர். உற்ஸவப் பெருமாள் கன்யகா தானம் வாங்க கையேந்திய நிலையில் சேவையளிக்கிறார்.
விபீஷணனுக்கு ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி ஓர் அமாவாசைத் தினத்தன்று இறைவன் நடை அழகை சேவை சாதித்த தலம். விஷடாஷன் எனும் அரக்கனைத் தனது சக்கராயுதத்தால் வீழ்த்தியதால் பெருமாள் இங்கு, சக்கராயுதத்தைப் பிரயோகிக்கும் நிலையில் காட்சியளிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட தலமும் இதுவே.
சோழ மன்னன் ஒருவன், ஒருநாள் இந்த பெருமாளுக்குச் சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பதைக் கண்டு கோபமுற்று கோயில் அர்ச்சகரான ரங்கபட்டரிடம் கேட்டார். " இது பெருமாளின் தலைமுடி தான்' என்று அர்ச்சகர் உறுதியாகச் சொல்ல, இதை நம்ப மறுத்த அரசன் கருவறைக்குச் சென்று பெருமாளைப் பார்த்தான் பெருமாள் தலையில் முடி இருந்தது. அது உண்மையான முடிதானா என்று சந்தேகப்பட்டு அரசன் அந்த தலைமுடியைப் பற்றி இழுக்க பெருமாள் தலையிலிருந்து குருதி வந்தது. அரசன் இதைக் கண்டு அதிர்ந்து பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டான். பெருமாளும் தன் தலைமுடியை வளர்த்து அரசனுக்குக் காண்பித்து அவனது சந்தேகத்தைப் போக்கி மன்னித்தருளினார். இதனால் உற்ஸவப் பெருமாளுக்கு " சௌரி ராஜன்' என்ற திருநாமம் உண்டு.
பெருமாளின் மகா பக்தரான முனையத்தரையன் என்பவர் ஓரிரவு தனது மனைவி சமைத்த பொங்கலை அர்த்த சாமத்திற்குப்பின்பு கோயிலுக்கு எடுத்துச் சென்று பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய நினைத்தார். பொங்கல் சமைத்துப் படைக்க முற்பட்டபோது அர்த்தசமாத்திற்கும் மேலாகிவிட்டது. அர்த்தசாம பூஜை முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டு விட்டதால் கோயிலின் உள்ளே போக முடியாமற் போகவே, வருத்தத்தோடு பக்தர் மானசீகமாக சுவாமிக்கு நிவேதனம் செய்தபோது, பகவானும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று மூடிய கோயில் கதவைத் திறந்து மணியோசை அடித்து பக்தரின் வெண் பொங்கலை நைவேத்தியமாக ஏற்றுக்கொண்டார்.
கோயிலில் மணியோசை கேட்டு மக்கள் அங்கே கூடினர். கருவறையில் பொங்கல் மணம் வீசுவதைக் கண்டு பெருமாளின் திருவிளையாடலை எண்ணி வியந்தார்கள். அதுமுதல் அர்த்தசாமப் பொங்கல், "முனியோதரம் பொங்கல்' என்றானது. இப்பெருமாளுக்கு வெண்ணெய் உருக்கி பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது மிகவும் விசேஷமாகும். ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் ஆகியோர் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இத்தலத்து நித்யபுஷ்கரணியில் நீராடி, பெருமாளைச் சேவித்து அர்த்த சாமத்தில் நைவேத்தியம் செய்து உண்டால் இடர்பாடுகள் நீங்கி வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...