
இக்கலியுகத்தில் பிறந்து பலவித இன்னல்களுக்கு ஆட்பட்டு அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்கு அருளுவதற்கென்றே எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நமது புண்ணிய பூமியில் ஆங்காங்கு அர்ச்சாவதார மூர்த்தியாகக் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். ஸ்ரீ ஸ்ரீநிவாஸர் ஸ்ரீ பத்மாவதித் தாயாரின் தெய்வீகத் திருமணத்தின் போது விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காக சமைக்கப் பட்டிருந்த உணவு ஸ்ரீ அஹோபிலத்தில் தோன்றி அசுரனை அழித்த ஸ்ரீ நரசிம்மப்பெருமாளுக்கு முதலில் நிவேதனம் செய்யப்பட்டு அவரது அருட்பிரசாதமாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதனால் (ஸ்ரீ ஸ்ரீநிவாசருக்கே மூத்தவர் என்ற முறையில்) பெரிய பெருமாள் என்று விசேஷமாகப் போற்றி வணங்கப்படும் ஸ்ரீநரசிம்மர் பல திருத்தலங்களில் ஸ்ரீ யோக நரசிம்மராகவும், வேறு பல திருத்தலங்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மிதாயாருடன் சேர்ந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ மாலோலனாகவும் தரிசனம் தந்தருள்கிறார்.
இத்திருக்கோலங்களன்றி, பதினாறு திருக்கைகளுடன், பல்வேறு திவ்விய ஆயுதங்களை ஏந்தியபடி, ஸ்ரீ ஹிரண்ய சம்ஹாரமூர்த்தியாக ஒருசில திருத்தலங்களில் மட்டுமே காட்சி அருள்கின்றார். அத்தகைய அபூர்வ திருத்தலங்களில் மிக முக்கியமான திருத்தலம், கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் எல்லையில் இருக்கும் அபிஷேகப்பாக்கம் என்னும் சிங்கர்குடித் திருத்தலமாகும். (நர)சிங்கர்கோயில் என்றும் இது அழைக்கப்படுகின்றது.
சோழர்காலத்தைச் சேர்ந்த இந்தப் புராதனத் திருக்கோயிலுக்கு விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல நன்கொடைகளை வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது.
சிங்கர்குடி என்னும் இத்திருத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் மிகப் பெரிய உருவம் கொண்டு பதினாறு கைகளுடன் ஹிரண்ய சம்ஹாரமூர்த்தியாக மேற்கு நோக்கிய திருக்கோலத்தில் ஸ்ரீ உக்கிரநரசிம்மர் அருள்பாலிக்கின்றார். இக்கருவறையில் அசுரன் ஹிரண்யனின் மனைவி நீலாவதி, வசிஷ்டர், பிரகலாதன் மற்றும் மூன்று அசுரர்களின் உருவங்கள் உள்ளன. மேலும் கருவறையில் வடக்கு நோக்கிய திருக்கோலமாக ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ பால நரசிம்மர் ஆகிய பெருமாள்கள் சிறிய மூர்த்திகளாகச் சேவை சாதிக்கின்றனர்.
ஸ்ரீ கனகவல்லித் தாயார் சந்நிதியும், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியும் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. மேலும் ஸ்ரீ தாயார் சந்நிதி விமானத்தில் காணப்படும் நவீன உடையணிந்த பெண்களின் சுதைச் சிற்பங்கள், இப்பிரதேசத்தை அரசாண்ட பிரெஞ்சு நாட்டினரின் கலாசாரம் காரணமாக வந்திருக்கலாம் என்றும் தோன்றுகின்றது. திருக்கோயில் ராஜகோபுரத்திலும் மனதைக் கொள்ளை கொள்ளும் எண்ணற்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ கனகவல்லித் தாயாரை வழிபட்டு வர, திருமணத்தடை நீங்குதல், குழந்தை பேறு கிட்டுதல் ஆகிய நற்பலன்கள்கிடைக்கும்.
வைகானச ஆகமப்படி பூஜைகள் நிகழ்த்தப்படும் இத்திருக்கோயிலில் உக்கிரநரசிம்மருக்கு ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பிரதோஷ பூஜை செய்யப்பட்டுப் பானகம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது. இவரை வழிபட்டால் எதிரி பயம், நோய் நொடி உள்ளிட்ட எல்லாவகை தோஷங்களும் நிவர்த்தியாகின்றது.
சிங்கர்குடி, பூவரசன்குப்பம் மற்றும் பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்ம úக்ஷத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதால், இம்மூன்று திருக்கோயில்களையும் ஒரே நாளில் வழிபடுபவர்களுக்கு ஸ்ரீ நரசிம்மப் பெருமானின் பரிபூரண கடாட்சம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்திருக்கோயிலின் அருகில் ஸ்ரீ அஹோபில மடத்தின் நான்காவது ஜீயரான ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்திர மஹாதேசிகன் ஸ்வாமிகளின் பிருந்தாவனமும் உள்ளதால் இத்திருத்தலத்தில் திருவருளுடன் குருவருளும் நமக்குக் குறைவறக் கிடைக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.