சகலமும் அருளும் சப்தகுரு தலம்!
"குருவைத் தரிசித்தல், பூசித்தல் நினைவில் கொள்ளுதல், அவருடைய கீர்த்தியைப் பாடிப் பரவுதல் அவரது பாதுகைகளைக் கும்பிடுவது ஆகியன முக்திதரும்' என்கிறார் திருமூலர்.


"குருவைத் தரிசித்தல், பூசித்தல் நினைவில் கொள்ளுதல், அவருடைய கீர்த்தியைப் பாடிப் பரவுதல் அவரது பாதுகைகளைக் கும்பிடுவது ஆகியன முக்திதரும்' என்கிறார் திருமூலர். "எப்போதும் குருசரணம் நினைவாய் நெஞ்சே' என்கிறார் பாரதியார். குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள்.
சப்தகுரு தலம்: ஏழு தெய்வங்கள், ஒரே தலத்தில் ஏழு சந்நிதிகளில் அமைந்தருளும் திருக்கோயில் இது! பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளும் தனிதனி சந்நிதிகளில் தம் தம் தேவிகளுடன் எழுந்தருளியுள்ள தலம். அதுவே, கதம்ப வனம் எனப்பட்ட திருக்கரம்பனூர் என்னும் பிட்சாண்டார் கோயிலில் அமைந்துள்ள உத்தமர் கோயில் ஆகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று! பிரம்மனின் பக்தியை உலகுக்குக் காட்ட விரும்பிய திருமால் இத்தலத்தில் கதம்ப மரமாக மாறி நின்றார். பிரம்மன் இங்கு வந்து திருமாலை கண்டு தரிசித்து கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதுமுதல் பிரம்மனை இத்தலத்திலேயே கொலுவிருந்து படைப்புத்தொழிலைத் தொடரச் செய்தார். கதம்ப மகரிஷிக்கு மகாவிஷ்ணு சயன கோலத்தில் புருஷோத்தமராக காட்சி தந்தார்.
பிரம்மனின் 5 தலைகளில் 4 பணிவுடன் சிவனைப் போற்றி வணங்கிட, ஒருதலை மட்டும் ஈசனை மதியாதிருக்க அத்தலையை கிள்ளினார். சிவனுக்கு அதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடித்ததது. கிள்ளப்பட்ட தலை மட்டும் சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டிருக்க, அந்த பிரம்ம கபாலத்தை பிட்சை பாத்திரமாக ஏந்தி பிட்சாடனராக தலங்கள் தோறும் சென்று பிச்சை ஏந்தி வந்தார். திருமால் கட்டளைப்படி, நிரம்பாத அந்த கபாலத்தில், பூரணவல்லித்தாயாரை பிட்சை இடச் செய்தார். அது நிரம்பி சிவன் கரம் விட்டு நீங்கியது. அதுமுதல் சிவபெருமானும் இங்கு லிங்க வடிவில் காட்சி தர, அன்னை பராசக்தி, செளந்தர்ய பார்வதி என்ற பெயரோடு அருள்புரியத் தொடங்கினாள். பிரகஸ்பதியும் சுக்கிரனும் நவக்கிரகங்களுடன் பரிவார மூர்த்தமாக எழுந்தருளினர். வைகுண்டத்தில் பரமபதநாதனாக எழுந்தருளிய மகாவிஷ்ணு இங்கு தனியாக வரதராஜனாக எழுந்தருளினார்.
சப்த குரு சந்நிதிகள்: உத்தமர் கோயில் சப்தகுரு தலம் எனவும் குருபெயர்ச்சி சிறப்பாக கொண்டாடப்படும் தலமும் ஆகும். பிரம்மா உலகில் உயிர்களைப்படைக்கும் தொழிலைச் செய்தார். சனகர் முதலியோருக்கு படைப்புத்தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் சிருஷ்டியில் அக்கறை காட்டாததால் இறையாணையின்படி மீண்டும் பிரம்ம குருவாகி படைப்புத் தொழிலை தொடர்ந்தார்.
வைணவ ஆசார்ய வரிசை முதலில் ஸ்ரீமந்நாராயணனிடம் இருந்தே துவங்குகிறது. வைணவ சித்தாந்தப் பேரொளி ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பி மூலம் வரதராஜப்பெருமாளுடன் பேசி உபதேசங்களைப் பெற்ரார். உடையவரின் அருளாளன் அவர் விரும்பியபடி இங்கு வரதராஜப் பெருமாளாக எழுந்தருளினார் எனப்படுகிறது. வைணவ சம்பிரதாயம் வளர்ந்ததனால் வரதராஜர் விஷ்ணுகுருவானார்.
தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். ஞானக்கடவுளான ஆதிகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிண திசை நோக்கி அமர்ந்து வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள், பரமகுரு என்றும் குறிப்பர்; இவர் கல்லாலின் கீழ் அமர்ந்து சனகர் முதலான முனிவர்களுக்கு உபதேசம் செய்ததால் சப்த குருக்களில் ஒருவராக வைத்து போற்றுகின்றனர். இவரே சிவகுரு ஆவார்.
இத்தலத்தின் அம்பாள் ஸ்ரீ செளந்தர்ய பார்வதி! பல அசுரர்களுக்கு உபதேசம் செய்தும் ஆணவத்தாலும் மூர்க்கத்தனம் முதிர்வாலும் திருந்தாததால் அவர்களுக்கு ஞானம் புகட்ட வதம் செய்து பராசக்தி அழித்தாள். அவளே இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் சக்தி குரு ஆகும்.
பிரணவத்தை தந்தைக்கு உபதேசித்து தகப்பன்சுவாமியாகக் குடிகொண்டிருப்பதால் சுப்ரமணியர் ஞானகுரு ஆவார்.
தேவ குருவான பிரகஸ்பதி அசுரகுருவான சுக்கிராச்சாரியார் ஆகியோர் ஒன்றாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்செய்கின்றார்கள். இவர்களில் 5 பேர் ஞான திசையான தெற்கு நோக்கியும் இருவர் கிழக்கு நோக்கியும் அருளுகின்றனர். ஒரே வளாகத்திற்குள் எழுவரையும் வணங்குவதால் நமக்கு குரு கடாட்சம் மற்றும் குருவருள் தடையின்றி அபரிமிதமாகக் கிடைக்குமாதலால் வியாழக்கிழமைகளில் இங்கு வந்து நம்பிக்கையோடு வணங்குகிறார்கள்.
குருபெயர்ச்சி விழா: இம்மாதம், (அக்டோபர்) 29 -ஆம் தேதி, அதிகாலை 3.53 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பிரவேசிக்கிறார். அதனையொட்டி, அக்டோபர் 28 -ஆம் தேதி மாலை 6. 00 மணிக்கு மேல் இத்திருக்கோயிலில் குடிகொண்டு அருளும் சப்தகுரு பகவான்களின் அருள்பெற, பக்தர்களுக்கு பரிகார ஹோமமும்; அக்டோபர் 29- ஆம் தேதி அதிகாலை 03.53 மணிக்கு அருள்மிகு குருபகவான் மற்றும் அருள்மிகு பிரம்மா ஆகியோருக்கு மஹாபிஷேகமும் மஹாதீபாராதனையும், தொடர்ந்து தரிசனமும் நடைபெறும்.
உத்தமர் கோயில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும்; ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கி. மீ. தொலைவிலும் உள்ளது.
தொடர்புக்கு: 04312591466/ 80568 82546.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...