ஏழைப் பெண் எஸ்தர் அரசியான கதை!
அகஸ்வேர் என்னும் பாரசீக அரசரின் மனைவி அரசி வஸ்தி. ஒரு சமயம் அரசரும், அரசியும் உயர்குடி ஆடவர் மற்றும் பெண்டிருக்கு விருந்தளிக்கின்றனர்.


அகஸ்வேர் என்னும் பாரசீக அரசரின் மனைவி அரசி வஸ்தி. ஒரு சமயம் அரசரும், அரசியும் உயர்குடி ஆடவர் மற்றும் பெண்டிருக்கு விருந்தளிக்கின்றனர். ஏழு நாள்கள் தொடர்ந்த விருந்தின் இறுதி நாளில் அரசர் அதிகமாகக் குடித்துவிட்டு, அரசியை விருந்தினர்முன் வரச்சொல்லி நடனமாட அழைக்கிறார். ஆனால் அரசியோ அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து, ""வரமுடியாது'' என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபமடைந்த அரசரிடம், "அரச உத்தரவை மீறிய அரசி வஸ்தியை தண்டிக்காமல் விட்டால், நாடு முழுவதிலுமுள்ள மனைவியர் தம் கணவர் சொல் கேட்க மறுப்பார்கள். அரசிக்குத் தண்டனை கொடுத்தால் நாடு முழுவதற்கும் அது ஒரு பாடமாக இருக்கும்'' என்றும் அரச சபையினர் ஆலோசனை கூறுகிறார்கள். அதனை ஏற்று அரசர் அவரை விலக்கி விடுகிறார்.
புதிய அரசியைத் தேடும் படலம் தொடங்குகிறது. நாடெங்கிலுமிருந்து அழகிய இளம் பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். அப்போது சூசா நகரைச் சார்ந்த யூத குலத்தவரான மொர்தக்காய் என்பவரின் வளர்ப்பு மகளாகிய எஸ்தர் என்னும் அழகிய பெண்ணும் வருகிறார். மொர்தக்காய் அரண்மனை வாயிற்காவலனாகப் பணி செய்து வருபவர். மொர்தக்காயும், எஸ்தரும் யூதர்கள் என்பது யாருக்கும் தெரியாது.
அழகு மிகுந்த எஸ்தரை அரசன் தன் நாட்டுக்கு அரசியாக முடிசூட்டுகிறார். ஒருசிலர் அரசனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த மொர்தக்காய் அதை எஸ்தர் வழியாக அரசனுக்குத் தெரிவித்து, அரசனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார். அரசனும் மொர்தக்காயைப் பாராட்டுகிறார்.
ஆனால் அரசவையில் உயர்பதவி வகித்த ஆமான் என்பவன் மொர்தக்காய் தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று சினம் கொண்டு அவரைக் கொல்ல வழிதேடுகிறான். அவர் ஒரு யூதர் என்றறிந்து, நாட்டில் உள்ள எல்ல யூதர்களையும் அடியோடு ஒழித்திட மன்னன் ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அவரிடம் ஆமான் கேட்கிறான்.
அரசன் ஒப்புதல் தரவே, நாட்டிலுள்ள யூதர்களைக் கொல்லவும் அவர்களுடைய சொத்துக்களைச் சூறையாடவும் ஆமான் நாள் குறிக்
கிறான்.
இதை அறிந்த மொர்தக்காய் தம் இன மக்களுக்கு நேரவிருக்கின்ற கொடுமையை எஸ்தரிடம் கூறி, அரசனின் மனத்தை மாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்.
ஒருநாள் அரசி எஸ்தர் அரசனுக்கும், அரசவை அதிகாரி ஆமானுக்கும் விருந்தளிக்கிறார். ஆமான் ஒரு தூக்குமரத்தை ஏற்பாடு செய்து, அதில் மொர்தக்காயை ஏற்றிக் கொல்வதற்குத் திட்டமிடுகிறான்.
அப்பொழுது அரசர் தம் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காயைப் பெருமைப்படுத்த எண்ணுகிறார். விருந்துக்கு வந்த ஆமானிடம் அவர், "நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?' என்று ஆலோசனை கேட்கிறார்.
தன்னைப் பெருமைப்படுத்த மன்னர் கேட்கிறார் என்று தப்புக் கணக்குப் போட்ட ஆமான், மிக்க மகிழ்ச்சியோடு, "மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து, அவரைக் குதிரையில் ஏற்றி எல்லாரும் பாராட்டும் விதத்தில் நகரின் தெருக்களில் பவனி வரச் செய்யலாம்' என்று ஆலோசனை கூறுகிறான்.
""நான் பெருமைப்படுத்த விரும்பிய மனிதர் வேறு யாருமல்ல, மொர்தக்காய்தான்..!'' என்று அரசர் கூறியதும் ஆமான் அதிர்ச்சியடைகிறான்.
மொர்தக்காய் பெருமைப்படுத்தப்படுகிறார். ஆமான் துயரத்தோடு வீடு சென்று, தன் மனையிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறான்.
அரசி எஸ்தர் அளித்த விருந்தில் கலந்துகொண்ட அரசர் அகஸ்வேர் அரசியிடம், "உனக்கு என்ன வேண்டும், கேள்' என்று கூற அரசி, ""என் உயிரையும், என் மக்களின் உயிரையும் காப்பாற்றுங்கள். அதுவே போதும். ஆமான் எங்களைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறான்'' என்கிறாள்.
ஆமான் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்கிறான். அரசியின் படுக்கை அறைக்கு வந்து, காலடியில் விழுந்து தன் உயிரைக் காப்பாற்றும்படி மன்றாடுகிறான்.
இதைக் கண்ட அரசர், ""ஆமான் என் மனைவியிடமே தவறாக நடக்கப் பார்த்தான்'' என்று கருதி, மொர்தக்காயைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்காக ஆமான் ஏற்பாடு செய்திருந்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தூக்கிலிடும்படி ஆணையிடுகிறார்.
ஆமான் தூக்கிலிப்பட்டு இறக்கிறான். அரசன் அகஸ்வேர் புதிதாக ஓர் ஆணை பிறப்பித்து, ""யூதர்கள் தங்கள் சமயத்திற்கேற்ப சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு'' என்றும் அறிவிக்கிறார். யூதர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்ட அதார் மாதம் பதினான்காம் நாளை திருவிழாவாகக் கொண்டாட வழி பிறந்தது. அதுவே "பூரிம்' திருவிழாவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...