2021: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

1.1.2021 ஆங்கிலப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையன்று கடக ராசி பூசம் நட்சத்திரம், நவாம்சத்தில் சிம்ம ராசியிலும் புத்தாண்டு பிறக்கிறது. 
2021: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

1.1.2021 ஆங்கிலப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையன்று கடக ராசி பூசம் நட்சத்திரம், நவாம்சத்தில் சிம்ம ராசியிலும் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு 01.01. 2021 சார்வரி வருடம், தட்சிணாயனம், ஹேமந்த ருது, மார்கழி மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணபட்சம் (தேய்பிறை), துவிதியை திதி, பூசம் நட்சத்திரம் 1-ஆம் பாதம், வைதிருதி நாமயோகம் கரஜை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி 45 நாழிகை அளவில், வியாழக்கிழமை நள்ளிரவு விடிந்தால் வெள்ளிக்கிழமை புத பகவானின் ஹோரையில், கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் ரிஷப லக்னத்திலும், கடக ராசி பூசம் நட்சத்திரம் நவாம்சத்தில் சிம்ம ராசியிலும் புத்தாண்டு பிறக்கிறது.

லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானும், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானும் யோக காரகர்களாகிறார்கள். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். சுக ஸ்தானத்தில் சிறப்பான புத ஆதித்ய யோகம், நிபுணத்துவ யோகம் ஏற்படுகிறது. சூரிய பகவான் கன்னி லக்னத்திற்கு விரயாதிபதியானாலும் அல்லது எந்த இடத்திலிருந்தாலும் நல்ல பலன்களையே தருகிறார்.

மகர ராசியில் சனி பகவான்: மகர ராசியானது சர ராசி மற்றும் பெண் ராசியும் கூட. மகர ராசி சனி பகவானுக்கு ஆட்சி வீடாகவும், செவ்வாய் பகவானுக்கு உச்ச வீடாகவும், குரு பகவானுக்கு நீச்ச வீடாகவும் அமைகிறது.

சனி பகவான் சூரிய பகவானுக்கு ஜென்மப் பகையாவார். சனி பகவானும், சூரிய பகவானும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் குறிப்பாக 45 வயது முதல் 50 வயதிற்குள் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் உண்டாகின்றன. அதன் பின்பு, பிறரின் பணம் இவர்கள் கையில் லட்சக்கணக்கில் புழங்க ஆரம்பிக்கும்.

மகர ராசியில் சனி பகவான் இருக்க குரு பகவான் ராசியையாவது, இரண்டாமிடத்தையாவது அல்லது சனி பகவானுடன் இணைந்தோ அல்லது பார்த்திருந்தாலோ 46 வயதுக்கு மேல் லட்சாதிபதிகளாகி விடுகின்றனர். குரு மஹாதசை இவர்களுக்கு சுகமில்லை. குரு தசையில் எவ்வளவுக்கெவ்வளவு கெடுதல் நடந்ததோ அவ்வளவுக்கு சனிபகவான் கோடீஸ்வரர் ஆக்கி விடுவார்.
சனி பகவானின் நிறம் கருப்பு, காக்கை வாகனம். மேற்கு திசைக்கு அதிபதி, வாதநோய்க்கு காரணமாகிறார். ரத்தினம் நீலக்கல், உலோகத்தில் இரும்பு, அறுசுவையில் கசப்பு, அதிதேவதை எமதர்மன்.

ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் சஞ்சரித்து விட்டு 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனால்தான் "30 ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் இல்லை; 30 ஆண்டுகள் தாழ்ந்தவர்களும் இல்லை' என்கிற வழக்கு ஏற்பட்டது.

புத, சுக்கிர பகவான்கள் தர்மகர்மாதிபதிகளாக ஆகிறார்கள். சனி பகவான் இவர்களுக்கு பிரபல யோகத்தைத் தன் தசையில் கொடுக்கிறார். சனி தசை நடக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு, மற்ற தசைகளில் சனி புக்தியில் யோகத்தைக் கொடுப்பார். ஆனால் புக்திகளில் கிடைக்கும் யோகம், தசையில் கிடைப்பதைவிட பாதி அளவுக்கே கிடைக்கும்.

சந்திர பகவான் (ஏழாமதிபதி), சனி பகவான் (இரண்டாமதிபதியும் கூட) இணைவதால் மாரகாதிபதிகளாகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சூரிய பகவான் அஷ்டமாதிபதியான போதிலும் சிம்ம ராசியில் தனித்து நின்றால் பிரபல ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.

மகர ராசியில் குரு பகவான்: குரு பகவான் மகர ராசியில் நீச்சம் அடைகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நீச்சபங்க ராஜயோகம் பெறுவதற்கு பல விதிகள் உள்ளன. அவைகளை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் மகர ராசியில் குருபகவான் எக்காலத்திலும் நீச்சபங்க ராஜயோகம் பெறுவார் என்கிற விதி ஒன்று உள்ளது.

அது யாதெனில், குரு பகவான் உச்சம் பெறும் ராசிக்கதிபதி சந்திர கேந்திரத்தில் இருப்பதாகும். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவார். அந்த வீட்டுக்கதிபதியான சந்திர பகவான் பன்னிரண்டு ராசிகளில் எங்கிருந்தாலும் சந்திர கேந்திரத்தில்தான் இருப்பாரல்லவா? அவர் இருக்குமிடமே "சந்திர கேந்திரம்' ஆகும்.

அதனால் குருபகவானுக்கு நீச்சம் என்பதே இல்லை; மாறாக நீச்சபங்க ராஜயோகம் என்றே கூறவேண்டும்.

தற்சமயம் குரு பகவான் ஆட்சி பெற்றுள்ள சனி பகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சனேறிய ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்கிற விதியின் அடிப்படையில் "நீச்சபங்க ராஜயோகம்' பெறுகிறார்.

சனி, குரு பகவான்களின் இணைவை ஜோதிடம் சிலாகித்துக் கூறுகிறது. முந்தைய பிறவிகளில் தானதர்மம் செய்தவர்களுக்கும், ஆலய திருப்பணிகள் செய்தவர்களுக்கும், பொது காரியங்களில் தன்னலம் கருதாது பாடுபட்டவர்களுக்கும், குறிப்பாக ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், அனாதைகள், வீடு இல்லாமல் தெருவில் குளிரில் தவித்தவர்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்தல், அனாதை பிணங்களைத் தக்க மரியாதையுடன் தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல், இலவசமாக மருந்துகளை வழங்குதல் போன்ற நற்கருமங்களைச் செய்தவர்களுக்கு சனி, குரு பகவான்களின் இணைவு ஏற்படும்.

இத்தகையோர் இப்பிறவியில் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் ஏதோ ஒரு கருமம் செய்து பல லட்சங்களுக்கு அதிபதிகளாக ஆகி விடுகிறார்கள் என்பதும் அனுபவ உண்மை. இந்த ஆண்டு 01.01.2021 முதல் 06.04.2021 வரையிலும், 14. 09. 2021 முதல் 20. 11. 2021 வரையிலும் குரு, சனி பகவான்களின் பார்வை கடக ராசியின் மீது படிவதால், கடக லக்னம், கடக ராசி அன்பர்கள் மேற்கூறிய காலகட்டத்தில் குறிப்பிடும்படியான நன்மைகளை அடைவார்கள் என்று கூறவேண்டும்.

இந்த புத்தாண்டில் லக்னத்தையும், ராசியையும், ராசி அதிபதியையும் பார்வை செய்வதால் இந்த ஆண்டில் சுபிட்சத்திற்குக் குறைவு ஏற்படாது. "முழு சுபரான குரு பகவானின் பார்வை மூன்று லட்சம் தோஷங்களைத் தீர்த்து விடும்' என்பதால் "குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி' என்பார்கள்.

குருபகவான் ஆண் கிரகமாவார். நாட்டை ஆள்பவர்களுக்கு குருபகவான் வலுத்திருப்பார். பொன், மூளை, வடகிழக்கு திசை, மஞ்சள் நிறம், உடலில் வயிறு, தசைக்கு அதிபதி, முல்லைப்பூ, அரசு சமித்து, யானை வாகனம், கடலை, புஷ்பராகக் கல், இனிப்பு சுவை, அதிதேவதை இந்திரன், கிரக ஷேத்திரம்திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடித்திட்டை. நல்ல புத்தி, ஞாபக சக்தி, மந்திரம், ராஜதந்திரம், நியம நிஷ்டை, வேத மந்திர சாஸ்திர அறிவு, யானை குதிரை போன்ற வாகனங்கள், யாகங்கள், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, செல்வம், செல்வாக்கு, உயர்ந்த பதவி, ராஜ முத்திராதிகாரி ஆகியவைகளுக்கு குரு பகவானே காரணமாகிறார்.

புத்தாண்டு ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் வீட்டில் தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் ஒரே நட்சத்திர பாதத்தில் (கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம்) இணைந்திருக்கிறார்கள்.

இதனால் புத பகவானின் காரகத்துவங்கள் இந்தப் புத்தாண்டில் நல்ல முறையில் வேலை செய்யும் என்றும் கூற வேண்டும். அதேபோல் ""சனிவத் ராகு, குஜவத் கேது'' என்கிற வழக்கு உள்ளது. அதாவது ராகு பகவான் சனி பகவானைப் போலவும், கேது பகவான் செவ்வாய் பகவானைப் போலவும் பலன் தருவார்கள்.

ராகு பகவான் ரிஷப ராசியில் செவ்வாய் பகவானின் சாரத்தில் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெறுவதால், பூமேடைதனில் புரளும் ராஜயோகம், "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அதுபோலவும் நற்பலன் உண்டாகும்.

இதனால் "போகம், யோகம்' என்கிற இரண்டு காரகத்துவங்களும் நன்றாக வேலை செய்யும். கேது பகவான் சுக்கிர, புத பகவான்களின் காரகத்துவங்களைத் தனதாக்கிக் கொண்டு பலன் தருவார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சனிபகவான் திருக்கணிதப்படி கடந்த 24. 01. 2020 இல் மகர ராசிக்குப் பெயர்ச்சியானார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 27. 12. 2020 இல் மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த 2021 ஆங்கிலப் புத்தாண்டு முழுவதும் இரண்டு பஞ்சாங்கங்களின் படியும் சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com