மாநபி பயணத்தில்  மலர்ந்த ஆண்டு

ஆதியில் ஆதம் நபி அவனுக்கு வந்த நாளிலிருந்து ஆண்டு ஆரம்பமானது. நூஹ் நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் வெள்ள பிரளயத்திலிருந்து தப்பித்த நாளை ஒப்புக் கொண்டு ஓர் ஆண்டு உருவானது. 
மாநபி பயணத்தில்  மலர்ந்த ஆண்டு
மாநபி பயணத்தில்  மலர்ந்த ஆண்டு
Published on
Updated on
2 min read


ஆதியில் ஆதம் நபி அவனுக்கு வந்த நாளிலிருந்து ஆண்டு ஆரம்பமானது. நூஹ் நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் வெள்ள பிரளயத்திலிருந்து தப்பித்த நாளை ஒப்புக் கொண்டு ஓர் ஆண்டு உருவானது. 

அடுத்தடுத்து இப்ராஹீம் நபி, யூசுப் நபி வருகை, மூசா நபிக்கு நைல்நதி பிளந்து வழி விட்டது, தாவூது நபி, சுலைமான் நபி அவர்களின் ஆட்சிகளை அடிப்படையாகக் கொண்ட காலங்கள் தோன்றின. ஈசா நபி அவர்களின் பிறப்பிலிருந்து கி.பி. ஆண்டு கணக்கிடப்படுகிறது. 

திட்டமிட்டு காலம் குறித்து பயணங்கள் துவங்குவது உலக வழக்கம். ஆனால் துவங்கிய பயணமே காலத்தைக் கணித்தது ஹிஜ்ரி ஆண்டு. ஹிஜ்ரி 1443 -ஆம் ஆண்டு 11.08.2021 -இல் பிறக்கிறது. 

நபித்துவம் பெற்ற 13 -ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக குறைஷி குலம் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கொலை வெறியன் தேர்வு செய்யப்பட்டு கொலை வாளுடன் வீட்டை முற்றுகையிட்டனர். 
வெளியில் வந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் யாசீன் சூராவின் துவக்க ஒன்பது வசனங்களை ஓதி, நீள் வாளுடன் நின்றவர்களின் தலையின் மீது வீசினார்கள். கூரிய கண்களின் நேர் பார்வை மங்க சிலையாக நின்றனர் சிலை வணங்கிய சீலமற்றோர். 

கோமான் நபி (ஸல்) அவர்கள் வெளியேறுவதை அறியாது வெளிறி நின்றனர் வெறிபிடித்த கொலை வெறியர்கள். இந்தக் கொலை முயற்சியை முறியடித்ததை அல்லாஹ் அருமறை குர்ஆனின் அல் அன்பால் அத்தியாயத்தில் அறிவிக்கிறான். 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டு நபித்துவம் பெற்ற 13-ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கள்கிழமை (16. 09.622 கி.பி.) குபாவை அடைந்தனர். 
அங்கிருந்து நபித்துவம் பெற்ற 13 -ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 16 -இல் (20.09.622 கி.பி.) வெள்ளிக்கிழமை நண்பகல் வாதியுர் ரானூனாவில் ஜும் ஆ தொழுது மதீனாவில் நுழைந்தனர். 

மதினா மாநகரம் இன்றும் சிறப்புற்று சீரோடும் பேரோடும் 
புகழோடும் விளங்குகிறது. 

ஏக இறைக் கொள்கையை ஏற்காத மூர்க்க குறைஷிகள் தீர்க்கமான திரு நபி (ஸல்) அவர்களின் வாக்கை ஏற்க வாய்ப்பு கொடுத்து, வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா வந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதே ஹிஜ்ரி ஆண்டு. 

உமர் (ரலி) ஆட்சியில் நீண்ட ஆலோசனைக்குப் பின், ஹிஜ்ரத் நடந்த நாளை துவக்கமாகக் கொண்ட ஹிஜ்ரி ஆண்டு அலி (ரலி) அவர்களின் ஆலோசனைப்படி அமல்படுத்தப்பட்டது அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் - உம் தத்துல் காரி.

ஹிஜ்ரி 1443 -இல் காலனாய் ஞாலத்தில் சுற்றிச் சுழலும் கரோனா கொள்ளை நோய் முற்றிலும் ஒழிந்து, உலகம் உய்ய உலக மக்கள் நலமாய் வாழ வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக..!
-மு.அ. அபுல் அமீன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com