ஸுதாதா ராஸாரைஸ் - சரணயுகலாந்தர் - விகலிகை
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹாஸ...
-சௌந்தர்ய லஹரி
உலகில் மக்கள் உணவின்றி பஞ்சம் பசி, பட்டினி என்று அவதியுறும் போதெல்லாம் அன்னை மகா கருணை ஸ்வரூபமாய் தன் குழந்தைகளைக் காக்க பூமிக்கு வருகிறாள்.
அவளிடம் கேட்கலாமா என்று யோசிக்காமல் "அம்மா' என்றாலே ஓடி வருவாள். குளிர்ந்த நிலவொளி, மாளிகை முற்றத்தில் மட்டுமல்ல; காட்டில் இருக்கின்ற கள்ளிப்புதர் மேலேயும் விழுகிறது. அதுபோல்தான் அம்பிகையும், துன்பம் எனத் துயருறும் தன் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடி ஓடி வருகிறாள்.
"உன் கடாக்ஷ வெள்ளமானது தகுதி வாய்ந்த உத்தமர்கள் மேல் மட்டுமல்லாமல், என் போன்ற சாதாரணமானவன் மீதும் விழ வேண்டும்' என்று அம்பிகையை வேண்டுகிறார் ஆதிசங்கரர்.
"மனிதராகப் பிறந்தவர்கள் முப்பத்தாறு அறங்களைச் செய்ய வேண்டும்' என்கிறது சாஸ்திரம். அதில் மிகச் சிறப்பாகச் சொல்லப்படுவது அன்னதானம். அந்த அறத்தைச் செய்யவே அன்னை காந்திமதியம்மன் "வேணுவனம்', "தாருகாவனம்', "சதுர்வேதி மங்கலம்' என்று சொல்லப்படும் திருநெல்வேலியில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.
கைலாயத்தில் ஒருமுறை அம்பிகை ஈசனிடம் ""உலகில் அறங்கள் செழிக்க வேண்டும். மக்களுக்கு தங்கள் சிறப்பு தெரிய வேண்டும். மீண்டும் உலக மக்களின் நலம் பொருட்டு, நான் தவம் செய்ய விரும்புகிறேன்'' என்று வேண்டும்போது, அய்யன் அவளை வேணு வனத்திற்குச் செல்லச் சொல்லி பணிக்கிறார்.
உமாதேவி ஈசனிடம் இருநாழி நெல் பெற்று, இங்கு வந்து முப்பத்தாறு அறங்களையும் வளர்த்து, கம்பா நதியின் கரையில் ஈசனை நினைத்து தவம் இயற்றுகிறாள். ஈசன் அம்பிகைக்கு தன் திருக்கோலக் காட்சியைக் காட்டி அம்பிகையை மணம் செய்து கொள்கிறார்.
இறைவன் அம்மையும், அப்பனுமாய் மாறி, உயிர்களுக்கு யோக வாழ்வின் பெருமையை உணர்த்தி, தவம் இயற்றும் முறையை அறிவுறுத்துகின்றனர்.
இங்கு அம்பிகை கமலபீட நாயகியாய்க் காட்சி அளிக்கிறாள். அவளின் ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் இது கமலபீடம்.
வேத சர்மா என்ற அந்தணர் இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக பிச்சை எடுத்து வந்த நெல்மணிகளை அலசி உலர்த்தியிருந்தார். திடீரென்று மழை வந்து நெல் நனைந்து விடுமோ என்று அந்தணர் பயந்தார். அப்பொழுது, ஈசன் வேலியிட்டு மழைநீரில் நெல் அடித்துக் கொண்டு போகாமல் காப்பாற்றியதால் "திருநெல்வேலி' என்றும், ஈசனுக்கு "நெல்லையப்பர்' என்றும் பெயர் வழங்கப்பட்டது.
நெல்லையை ஆளும் அரசி காந்திமதி, "வடிவுடை நாயகி', "திருக்காமக் கோட்டமுள நாச்சியார்', "நெல்லை நாயகி' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறாள்.
பஞ்ச சபைகளில் இது தாமிர சபை. அம்பிகையின் அழகு பொருந்திய அருள் வதனம் ஒளி வீசி, சந்திரன் தன் குளுமையான தண்ணொளியால் உலகுக்கு மகிழ்ச்சி தருவதுபோல் அன்னையும் திகழ்கிறாள். 36 அறங்களையும் செய்யும் அந்தத் தாயுள்ளம் கருணையால் நிரம்பி வழிகிறது.
காந்தம் போல் கண்கள் பக்தர்களைக் கவர்கிறது. "அம்மா' என்று ஓடிவரும் அடியார்களைக் காந்தமாய்த் தன்னிடம் ஈர்த்து, ஒளி பொருந்திய வாழ்வை அளிப்பதாலேயே "காந்திமதி' என்று அழைக்கப்படுகிறாள்.
மதியைப் பார்த்தால் மனம் மகிழ்வது போல், அன்னையைப் பார்த்தாலே மனம் குளிர்ந்து, நம் கவலைகள் அனைத்தும் பறந்து விடுகிறது.
அவளைத் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே நினைக்கிறார்கள் இங்குள்ள மக்கள். அன்னையின் அலங்காரப் பொருள்கள், நகைகள் அனைத்தும் இம்மக்களாலேயே அளிக்கப்பட்டது.
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நடப்பது போலவே அன்னையின் திருமண விழா, அதையடுத்து வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
அன்னை அறம் வளர்த்த நாயகியாய் இங்கு அமர்ந்து ஈசனைத் திருமணம் செய்து கொண்டதால், திருக்கடையூரை விட இங்கு திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி போன்றவற்றை நடத்துவது மிகச் சிறந்தது.
இங்கு இறைவன் சக்தியும் சிவனுமாய்க் காட்சி அளிக்கிறார். இதற்கு உதாரணமாக, நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்படும்பொழுது, லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிவது ஓர் அற்புதக் காட்சியாகும்.
இந்த ஆலயம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கோயிலின் மூன்றாவது பிராகாரம் மிகப் பிரம்மாண்டமானது. இதன் வழியாக அம்பிகையின் சந்நிதிக்குச் செல்ல வழி உள்ளது.
வேண்டும் வரங்களை அளிக்கும் அன்னையை சொக்கநாதப் புலவர் "காந்திமதியம்மை' என்ற பதிகத்தில் போற்றிப் பாடியுள்ளார்.
"வாழ்வில் குறையில்லை, கண்ணேறும் இல்லை,
வறுமை இல்லை
தாழ்வில்லை, நோயில்லை, அஞ்சுதல் இல்லை
பஞ்சங்கள் இல்லை....'
"....வரம் என்று நீட அருளினள் காந்திமதி
அம்மையைப்
பரம் என்று நம்பின பேருக்கு ஒரு நாளும்
பழுதில்லையே!'
என்று பாடுகிறார் புலவர்.
சிற்பக் கலைக்குச் சிறப்பு பெற்ற ஸ்தலம் இது. இங்குள்ள இசைத் தூண்களை தட்டிப்பார்த்தால் ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். கலை அழகு மிகுந்த சிற்பங்கள், ஆயிரங்கால் மண்டபம், வஸந்த மண்டபம் முழுவதும் நிறைந்து சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நந்திதேவரின் பிரம்மாண்ட தோற்றம், இறைவனின் திருநடனத்தை தேவர்கள் ரசிக்கும் காட்சி, ஒரேகல்லில் வடித்த மயில்மீது முருகன் அமைந்த தோற்றம், தாளச் சக்கரம் எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டியவை.
இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் இறைவனே நீர் வடிவாகக் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர் இங்குள்ள தேர்தான். அம்பிகை சந்நிதியில் கங்கையும், யமுனையும் துவார
பாலகிகளாகக் காட்சி அளிக்கின்றனர்.
ஐப்பசியில் பத்து நாள்கள் அம்பாள் சிவனை மணக்கத் தவம் இருப்பாள். உச்சிக்காலத்தில் அம்பிகை ஈசனுக்கு அன்னம் பரிமாறுவதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது. இதன்படி மேளதாளம் முழங்க, அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர்கள், சித்திரான்னங்களுடன் சிவன் சந்நிதிக்குச் சென்று, அவற்றை இறைவனுக்குப் படைத்து விட்டுத் திரும்புகின்றனர்.
கல்வி, திருமணத்தடை விலக, தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்க, குழந்தைப்பேறு அடைய... என்று சகல தடைகளையும் நீக்கும் சக்தியாக காந்திமதியம்மை இருக்கிறாள். ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் இங்கு வழங்கப்படும் வளையல்களை அணிந்து கொண்டால் திருமணம் கை கூடும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை காங்கிரஸ்: பிரதமர் மோடி

கல்வியில் சிறப்பு தரும் காமாட்சி அம்மன்!

எம்ஜிஆர் பற்றிய அவதூறு: மன்னிப்புக் கேட்ட ராஜேந்திர பிரசாத்!

சிலிண்டர் தட்டுப்பாடு; நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

