பசு கண்டெடுத்த பெருமாள்!   

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கன்னம்பள்ளி என்ற கிராமத்தில், மகாலட்சுமி தாயார் தவமிருந்து புனிதப்படுத்திய புண்ணிய பூமியில் காடுகள் மண்டியிருந்தன. 
பசு கண்டெடுத்த பெருமாள்!   
Updated on
1 min read


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கன்னம்பள்ளி என்ற கிராமத்தில், மகாலட்சுமி தாயார் தவமிருந்து புனிதப்படுத்திய புண்ணிய பூமியில் காடுகள் மண்டியிருந்தன. 

இக்காடுகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் சிறுவர்களில் ஒருவனது பசுமாடு மட்டும் தினசரி அடர்ந்த கானகத்தின் ஊடே செல்வதும், பால் வடிந்த மடியுடன் திரும்புவதும் வழக்கமாக இருந்தது.  இதன் காரணம் அறிய ஒரு நாள் பசுமாட்டினைத் தொடர்ந்து சென்ற சிறுவன் கண்ட காட்சி அவனை திகைப்பில் ஆழ்த்தியது. ஓங்கி வளர்ந்த புற்றின் மீது தானாக பால் சுரக்க அவனது மாடு தெய்வீக அமைதியுடன் நின்றிருந்தது. 

இதனைக் கண்ட சிறுவன் ஓடிவந்து ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க, அச்சமயம் ஓர் அசரீரி ஒலித்தது: "புற்றினுள் எழுந்தருளியிருப்பது வேங்கடரமண சுவாமியே..!' 

அதனைக் கேட்டதும் ஊர் மக்கள் அவ்விடத்தில் திருக்கோயில் கட்ட உத்தரவு பெற்று, பணிகளைத் தொடங்கினர். இத்திருத்தலத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், மகாலட்சுமி தாயாரும் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருப்பது ஓர் அரிய காட்சியாகும். 

திருக்கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. ராஜகோபுரத்தின் முன்புறம் தனி மேடையில் ஸ்ரீபாதம் அமைந்துள்ளது.  இதன் மறு பகுதியில் இத்திருக்கோயிலை உலகிற்கு உணர்த்திய இடையர்குல சிறுவனின் உருவம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.  பசு கண்டெடுத்த பெருமாளாக, கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரதாரியாக அருள்மிகு வேங்கடரமணர் அருள்மழை பொழிகிறார். 
திருவிழாக்கள்: ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்களும் அதிக அளிவில் வருகை தருகின்றனர். 

குழந்தை பாக்கியம் வேண்டியவர்கள் துலாபார காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்கின்றனர். பக்தர்கள் தங்கள் தோளில் உற்சவமூர்த்தியை சுமந்து திருக்கோயிலை வலம் வரும் "மெரவணை பிரார்த்தனை' அதிக அளவில் செய்யப்படுகிறது. கருட கம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றியும் வழிபடுகின்றனர்.  

அமைவிடம்: சேலம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சென்னை புறவழிச் சாலைக்கு முன்பாக 3 கி.மீ. தூரத்தில் கன்னம்பள்ளி திருத்தலம் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.  தொடர்புக்கு: 9786973174 - 9788232232.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com