இறை நம்பிக்கை எங்கே போயிற்று?

ஒரு நாள் மாலை இயேசு தம் சீடர்களுடன் இருந்தார். பெரும் கூட்டத்தார் யாவரையும் இயேசு அனுப்பிவிட்டார்.
இறை நம்பிக்கை எங்கே போயிற்று?

ஒரு நாள் மாலை இயேசு தம் சீடர்களுடன் இருந்தார். பெரும் கூட்டத்தார் யாவரையும் இயேசு அனுப்பிவிட்டார். அவரும் அவர் சீடர்கள் பன்னிரண்டு பேரும் மட்டும் ஒரு படகில் ஏறி அக்கரையிலுள்ள கலிலேயா கடற்கரைக்குச் சென்றார்கள். 
படகு காற்றின் விசையில் அக்கரைக்கு போய்க் கொண்டு இருந்தது. சீடர்கள், துடுப்புப் போட்டு படகைச் செலுத்தினார்கள். கடல் அமைதியாக இருந்தது. இயேசுவோ ஜெபத்திலும், போதனையிலும் ஈடுபட்டு,  பிசாசுகளைத் துரத்தியும், நோயுற்றவரை குணமாக்கியும், எல்லாரையும் ஆசீர்வதித்தும் நாள் முழுவதும் ஓய்வின்றி இருந்தார்.
படகில் ஏறின உடனே தம் கையை மடக்கித் தலைக்கு வைத்து, படகின் முனையில் தலை வைத்து உறங்கினார். தெய்வமேயானாலும் களைப்பு உறங்க வைத்தது. இயேசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். படகு மிக அமைதியாக சென்று கொண்டு இருந்தது. 
திடீரென்று கடல் கொந்தளிக்கவும், பெரும் சுழல் காற்று புயலாக மாறி படகை அலைக்கழித்தது. இப்படியும் அப்படியும் அசைந்து படகு மூழ்கி விடுவதுபோல் இருந்தது. பால்ய பருவம் முதலே மீனவர்களாக இருந்த பேதுருவும், யோவானும் மற்ற சீடர்களும் உயிருக்கு அஞ்சி நடுங்கினார்கள். கடல் கொந்தளிப்பு மிகவும் பயங்கரமாக இருந்தது. 
புயல் காற்று படகைக் கவிழ்க்க முயன்றது. மிகவும் பயந்த சீடர்கள், தூங்கி கொண்டிருந்த இயேசுவை எழுப்பினார்கள். ""கடல் கொந்தளிக்கிறது; புயல் சுற்றிச் சுற்றி வீசுகிறது. நாங்கள் மடிந்து போகும் நிலையில் உள்ளோம். நீரோ தூங்கிக் கொண்டு உள்ளீர். எழுந்திரும்!'' என்று இயேசுவை எழுப்பினர்.
இயேசு எழுந்தார். அவர் தம் சீடர்களை முதலில் பார்த்தார். அவர்களோ மரண பயத்துடன் இருந்தனர். 
உடனே இயேசு, கடலையும் காற்றையும் அதட்டினார் ""அமைதலாக இரும்!'' என்றார். என்ன ஆச்சரியம்..? கடல் கொந்தளிப்பு குறைந்து, அமைதியாயிற்று. புயல் காற்றும் மிக அடங்கி, மென் காற்றாய் வீசியது. 
இயேசு தம் சீடர்களைக் கண்டு ""உங்கள் விசுவாசம் என்னவாயிற்று? ஏன் இப்படி பயந்தீர்கள்..? உங்களுக்கு பக்தி இல்லையா?'' என்று கடிந்து கொண்டார். சீடர்கள், கடலும் காற்றும் இயேசுவுக்கு (அவர் வார்த்தைக்கு) கீழ்படிகிறதைக் கண்டு வியந்தார்கள். 
இயேசு எப்பேர்ப்பட்டவர் என வியப்புடன் போற்றி, இயேசுவின் பேரில் பற்று வைத்தனர். இக்கொடிய தொற்று காலத்திலும், மரண பயம் சூழ்ந்த நிலையிலும் இயேசு நம்மோடு உள்ளார். இறைவனிடம் பற்றுறுதியுள்ளவர் ஆவோம். இறையருள் நம்மோடு..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com