கோடி நலம் தரும் குரு பகவான் குடியிருக்கும் தலங்கள்!
குரு பகவான் - ஆதி குரு, அசுர குரு, நவகிரக குரு என மூன்று குருவாக உள்ளார். ஆதி குரு என்பவர் "ஆலமர் செல்வன்' எனப்படும் தட்சிணாமூர்த்தியாவார். அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார் ஆவார். நவ கிரக குரு என்பது வியாழன் ஆகும்.
"குரு பார்வை கோடி நன்மை' எனப்படுகிறது. ஒருவருடைய ராசியில் குரு உச்சம் பெற்றாலும், ஆட்சி பெற்றாலும் அந்த ஜாதகருக்கு தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. குரு பெயர்ச்சியில் குரு பகவானை வழிபடுவது பரிகார மரபாகும்.
இதையும் படிக்கலாமே.. குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள்
குரு பரிகாரத் தலங்கள் சில...
சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் சிவன் கோயில். இத்தலத்தின் இறைவன் திருவல்லீஸ்வரர் என்றும், திருவலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஜெகதாம்பிகை என்கிற தாயம்மை ஆவார். குரு பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். சாப விமோசனம் வேண்டி இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் அளித்தார். சிவனை வணங்கும் குருவுக்கு, இங்கு மேற்கு நோக்கிய வண்ணம் சந்நிதி அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் தென்திட்டை என்ற இடத்தில் ராஜகுரு கோயில் அமைந்துள்ளது. மங்காளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான், ராஜகுருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள வேதபுரியில் குரு பகவானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பிரக்ஞா தட்சிணாமூர்த்தியாக 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருவாரூர்- நாகை பாதையில் கீவளூருக்கு அருகில் உள்ள திருத்தேவூரில் அருள்புரியும் தேவபுரீஸ்வரரை தேவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். குரு பகவான், இங்கு தவமிருந்து ஈசனை வழிபட்டு "தேவகுரு' என்ற பதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியிலுள்ள சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. குரு பகவான் இத்தலத்தில்தான், தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான்அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சந்நிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். இங்குள்ள அசுர குருவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் தெரியும் என்று புராணம் கூறுகிறது.
குரு, வழக்கமாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் எனநான்கு சீடர்களுடன்தான் காட்சி தருவார். ஆனால், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோயிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், குரு பகவான் நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு.
திருச்சி அருகேயுள்ள திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலில் சப்த குரு சந்நிதி உள்ளது. இங்கு தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குருபிரம்மா, விஷ்ணுகுரு வரதராஜர், சக்திகுரு சௌந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்களையும் தரிசிக்கலாம்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இருக்கும் குரு பகவான், எட்டு முனிவர்களுக்கு அருள்புரியும் கோலத்தில் காட்சியளிக்கிறார். திருச்சி, லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் வீணை ஏந்திய நிலையில் குரு தட்சிணாமூர்த்தியாக நின்றவாறு அருள்கிறார்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருவாரூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலுக்கு வந்த சுந்தரருக்கு சிவன், குருவாக இருந்து ஞான உபதேசம் செய்தார்.
மன்னார்குடி பெருகவாழ்ந்தான் அருகே, செளந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனைசெய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக குரு பகவான், சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பார். கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் சித்த நாதேஸ்வரர் கோயிலில் மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் குரு பகவான் ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் குரு பகவான் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாது.
தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை குரு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயிலில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய குரு தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் பிரகஸ்பதியாகிய குருபகவான், இங்கு அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரிசிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கிபீடத்தின் மீது சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் குரு பகவான், தவக்கோல குருவாக காட்சி தருகிறார். இவருக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர்.
சிதம்பரத்துக்கு தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள குரு பகவான், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக் கல்லால் உருவானவர்.
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு குரு பகவானின் கீழ், சனகாதி முனிவர்களுக்கு பதிலாக பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும் குரு பகவான் வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
சென்னை திருவொற்றியூரில் உத்தர குரு பகவான் வடக்குப் பார்த்து அருள்கிறார் . தேவாரப்பாடல் பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. சுமார் 9 அடி உயரம், 5 அடி அகலமிருக்கும் இவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும், இச்சிலையின்கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவிந்தவாடி கிராமம். இங்குள்ள குரு தட்சிணாமூர்த்தி கோயிலில் பிரதான சந்நிதியில் நெற்றிக்கண்ணுடன் குருவும், பின்புறம் கிழக்கு நோக்கி கைலாசநாதரும் எழுந்தருளியுள்ளனர். ஒரே விமானத்தின்கீழ் சிவனும், குரு தட்சிணாமூர்த்தியும் அமைந்த அபூர்வ திருத் தலம் இது.
விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்த கன்னியருடன் ஒரே சந்நிதியில் காட்சி தருகிறார் குரு தட்சிணாமூர்த்தி.
அரக்கோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த குருவான தட்சிணாமூர்த்தி, வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மேலே வைத்தபடி, உத்குடிகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
திருச்செந்தூர் குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுகிறது. தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தபோது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றி முருகனுக்கு எடுத்துச் சொன்னதால் இது குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி "செந்தூர் மேதா குரு' என்று அழைக்கப்படுகிறார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரேஇடத்தில் அமர்ந்துள்ள மூன்று குரு தட்சிணாமூர்த்திகளையும் வழிபடுவது சிறப்பம்சமாகும்.
கரூர் மாவட்டம், குளித்தலை புஷ்பவனேஸ்வரர் கோயிலில் குரு மண்டபத்தில் சிம்ம பீடத்தில் குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்கிரபுரீஸ்வரர் கோயிலில் சிம்ம பீடத்தில் குரு அருள்கிறார். சிம்ம ராசிக்காரர்கள் இங்கு வந்து வணங்கி, பரிகார பூஜைகளைச் செய்கிறார்கள்.
புதுக்கோட்டை திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி உருவில் மிகப்பெரியவர் என்று கூறப்படுகிறது. திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.
காரைக்கால் யாழ்முரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான குரு பகவான் சிவனின் இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மயங்கிய நிலையில் இங்குள்ள குரு பகவான் பின்புறம் சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். பொதுவாக, மஞ்சள் நிற வஸ்திரம்தான் குரு தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். இங்குள்ள சிவன் யாழ் இசைத்த கோலத்திலேயே காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறம் யாழ்ப்பாண நாயனாரும் வீற்றிருக்கின்றனர்.
மயிலாடுதுறையில் உத்திரமாயூரம் என்று அழைக்கப்படும் மாயூரம் வள்ளலார் கோயில் ஒரு குரு பரிகாரத் தலமாகும். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள மாயூரநாதரை, குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். குரு பகவானை நாம் தரிசிக்க, கோடி நன்மை வந்து சேரும்!