வாணி, நீ பாடுக!

வாக்கு என்பது ஒலி. அந்த ஒலியையே தெய்வமாகப் பாவித்து இவள் வழிபடப்படுவதால் "வாணி' என்றும் அழைக்கப்படுகிறாள். 
வாணி, நீ பாடுக!
வாணி, நீ பாடுக!

சக்தி உபாசனையில் சரஸ்வதி வழிபாடு முக்கிய இடம் வகிக்கிறது. இந்த அம்பிகையைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று வாக்தேவி. வாக்கு என்பது ஒலி. அந்த ஒலியையே தெய்வமாகப் பாவித்து இவள் வழிபடப்படுவதால் "வாணி' என்றும் அழைக்கப்படுகிறாள். 

பிரம்மன் தன் நாவில் கொலுவீற்றிருக்கும் வேதஸ்வரூபமான சரஸ்வதியின் துணை கொண்டுதான் உலகை சிருஷ்டிப்பதாகக் கூறப்படுகிறது. வேதங்களைச் சரியாகச் சொல்லப் பயன்படுவது நாக்கு. நாக்கு சரியாக ஒத்துழைக்கவில்லையென்றால், வேதங்களைச் சரியாக உச்சரிக்க முடியாது. ஒரு சமயம் நான்முகனுக்கும் அந்நிலை ஏற்பட்டது. நான்முகனின் நாமகளான வாணிக்கும் குரல் வளத்தில் தொய்வு ஏற்பட்டது. 

வரலாறு: சத்தியலோகத்தில் ஒரு நாள் தன் சகதர்மினி சரஸ்வதி தேவியிடம் அளவளாவிக் கொண்டிருந்த பிரம்மா, முப்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தலில் "தான் வகிக்கும் தொழிலே பிரதானம்', மும்மூர்த்திகளின் வரிசையில் தன் பெயரே முதலில் கூறப்படுவதாகவும் சற்று பெருமிதம் மேலோங்கக் கூறினார். 

அடக்கமே உருவான கலைவாணி தன் நாயகனின் எண்ணம் தவறு என்று மனதளவில் நினைத்து, அவர் கூற்றை ஆமோதிக்காமல் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாள். ஆனால் பிரம்மனோ அப்புன்னகையை ஏளனமாகக் கருதி, அவளை ஊமையாகக் கடவாய் என சாபமிட்டார். 

சரஸ்வதி, தன் சாப நிவர்த்திக்காக பூலோகத்திலுள்ள சிருங்கேரிக்குச் சென்று தவக்கோலம் பூண்டாள். பிரம்மனின் நாவிலிருந்து சரஸ்வதி அகன்றதால் படைப்பின் மூலகாரணமான பிரம்ம தத்துவ வேதம் அவருக்கு மறந்து விட்டது. 

"நா' ஒத்துழைக்காததால் படைப்புத் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரம்மா பூலோகத்தில் வேள்வி செய்ய முற்பட்ட போது தவ முனிவர்கள், "உங்கள் மனைவியுடன் வேள்வி செய்தால் மட்டுமே வேள்வி பூர்த்தியாகும்!' என்றனர். தன் தவறை உணர்ந்த பிரம்மன் திருமாலையும், சிவனையும் அணுகினார். அவர்கள் கூறியபடி சிருங்கேரி தலத்திற்குச் சென்று வாணியை சந்தித்து, தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, தனது யாகம் பூர்த்தி செய்ய வருமாறு அழைத்தார். 

உலகுய்யவேண்டி, யாகத்திற்கு வர இசைவு தெரிவித்த சரஸ்வதி தேவி, பிரம்மனுடன் பாலாற்றின் வடகரையை வந்தடைந்தாள். அங்கு ஓரிடத்தில் தங்கி, அறச்சாலை நிறுவி 32 வகையான தான தர்மங்கள் செய்து, கணவரது யாகம் நிறைவேறவும், தனக்கு சாப நிவர்த்தி கிடைக்கவும் இறைவனை நறுமலர் கொண்டு பூஜித்து, தனது விருந்தை ஏற்குமாறு வேண்டினாள். 

இறைவன் வேதியராகவும், இறைவி அவர்தம் மனைவியாகவும் விருந்தினராக வந்து, வாணி அளித்த விருந்தை உண்டு மகிழ்ந்தனர். வாணியின் தவத்தை மெச்சி விருந்தின் மகிழ்ச்சியில் இருந்த தருணத்தில் வாணியிடம், "வாணி நீ பாடுக!' என இறைவனும், இறைவியும் ஒரு சேர திருவாய் மலர்ந்தனர். 

அந்த நொடியிலேயே தன் ஊமைத்தன்மை நீங்கப்பெற்று, வாக்கு வளம் பெற்று உரக்கப்பாடிய வாணி உவகை வெள்ளத்தில் திளைத்தாள்; உமாமகேஸ்வரனைத் துதித்தாள். வேதிய தம்பதியர் வேடத்தில் வந்த இறைவனும், இறைவியும் பிரம்மாவிற்கும், சரஸ்வதிக்கும் நந்தி மீது அமர்ந்து கைலாயக் காட்சி நல்கி, இனி இந்த இடம் வாணியின் பெயராலேயே விளங்கும் என்றும், படைப்பின் தன்மையையும், கலைஞானத்தையும் உலக உயிர்களுக்கு நல்குமாறும் அருளி கைலாயம் ஏகினர். 

ஈசனையும், ஈஸ்வரியையும் நோக்கி வாணி பாடியதால் இத்தலம் "வாணியம்மை பாடி' என்ற புராணப் பெயருடன் திகழ்ந்தது. 

நாளடைவில் மருவி "வாணியம்பாடி' எனவாயிற்று. 

அதிசய சுயம்பு: மூலவர் சுயம்பு மூர்த்தி மேற்கு நோக்கிய சந்நிதியில், திருக்கயிலாயம் போலவே இறைவனும், இறைவியும் ஓருருவில் இரண்டாய் இருப்பதைக் காணலாம். வித்தியாசம் தெரியும் பொருட்டு, ஒரு லிங்க பாணத்திலேயே இரண்டு சந்தன, குங்குமப் பொட்டுகள் இடப்பட்டிருக்கின்றன. இதைத்தவிர அம்பாள் பெரிய நாயகிக்கு தனி சந்நிதியும் உண்டு. 

வாணிக்கு அருள்புரியும் பொருட்டு இறைவன் அதிதியாக (விருந்தாளியாக) வந்ததால் "அதிதீசுவரர்' என்று சுவாமிக்கு திருநாமம் உண்டாயிற்று. மூன்று சக்திகளான இச்சை, கிரியை, ஞானம் - இதனை இறைவன் ஒரு வடிவில் வாணிக்கு இத்தலத்தில் அளித்ததாக ஐதீகம். 

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, சரஸ்வதி தேவிக்கென்று அமைந்துள்ள தனிப்பெரும் சந்நிதியாகும். கிழக்கு முகமாகப் பார்த்த சந்நிதி. சுமார் 4 அடி உயரத்தில், தாமரை பீடத்தின் மீது வலது காலை கீழே தொங்கவிட்டுக்கொண்டும், இடது காலை மடக்கி வைத்துக் கொண்டும் அமர்ந்த கோலம். தலையில் கிரீடத்துடன், இடது கரத்தில் ஞானத்தைத் தெரிவிக்கும் விதமாக ஏட்டுச் சுவடியுடனும், கீழ் இருகரங்களில் வீணையை மீட்டும் கோலத்தில், அருட்பார்வையுடன் கூடிய அதியற்புதத் திருமேனி. 

இங்கு நவராத்திரி விழா 10 நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். விழா நாட்களில் சரஸ்வதிக்கு அபிஷேக, அலங்காரங்களும், ஊஞ்சல் சேவையும், தேவி சகஸ்ரநாம பாராயணங்களும் நடைபெறும். விஜய தசமியன்று குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சியும் இச்சந்நிதியில் விசேஷமாக நடைபெறுகிறது. 

அமைவிடம்: வேலூருக்கு தென்மேற்கே 67 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது வாணியம்பாடி. இவ்வூர் ரயில் நிலையம் அருகிலேயே பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத அதிதீசுவரர் ஆலயம். 
தொடர்புக்கு: எஸ். கஜேந்திர
குருக்கள் - 9994107395 / 93600 55022.

புனர்பூச நட்சத்திரத்தில்...

இத்தலத்தில் சிவபெருமான் சரஸ்வதிக்கு சாப நிவர்த்தி அளித்தது ஒரு புனர்பூச நன்னாளிலாகும். ஆதலால் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய பரிகாரத்தலமாகக் கருதப்படுகிறது. 
அந்நட்சத்திரக்காரர்கள் இத்தலத்திற்கு வந்து தங்கள் வயதின் எண்ணிக்கைக்கு சமமாக நெய்தீபங்கள் ஏற்றி, அர்ச்சனை வழிபாடு செய்தால், அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளின் திக்குவாய் குறை, படிப்பில் மந்த நிலை போன்றவைகளுக்கு தேனும், பாலும் சம அளவில் கொணர்ந்து, சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தினமும் பருகி வர நற்பலன் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் இத்தலத்திற்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்தால், பிள்ளைகளின் கல்வித்திறன் மேம்படும்.
இவ்வாலயத்தில் ஒரு சிவாலயத்திற்குரிய நித்ய, பட்ச, மாதாந்திர, வருடாந்திர வழிபாடுகள், விசேஷ தினங்கள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. சித்திரையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகளுடன், அன்ன வாகனத்தில் உற்சவர் சரஸ்வதி தேவியும் வீதிவுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com