கேரளாவின் ஒரே தேவாரத்தலம் திருவஞ்சிக்குளம் திருக்கோயில்!

மலைநாடு எனும் கேரள மாநிலத்தின் ஒரே தேவாரத்தலம்-சேரமான் பெருமான் ஆட்சியின் நிர்வாக நகரம்-வெள்ளை
கேரளாவின் ஒரே தேவாரத்தலம் திருவஞ்சிக்குளம் திருக்கோயில்!

மலைநாடு எனும் கேரள மாநிலத்தின் ஒரே தேவாரத்தலம்-சேரமான் பெருமான் ஆட்சியின் நிர்வாக நகரம்-வெள்ளை யானை மீது சுந்தரரையும், குதிரை மீது சேரமான் மன்னனையும் கயிலாயம் அனுப்பி வைத்த அரிய பூமி}கயிலை நாதன் சுயம்புவாக எழுந்தருளிய திருக்கோயில்}மலைநாட்டில் பள்ளியறை பூஜை நிகழும் ஒரே தலம், இந்தியத் தொல்லியல் துறை ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட திருத்தலம்,திருவஞ்சிக்குளம்.

தொன்மைச் சிறப்பு: பல்லாண்டுகளுக்கு முன்பு வரை புஞ்சை வயல்களுக்கடியில் மறைந்திருந்தது இத்திருக்கோயில்.ஒருசமயம்  வயலை உழுதபோது இங்கு உமாமகேஸ்வரன் விக்கிரகம் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ஆலயம் எழுப்பியதாக வரலாறு கூறுகின்றது.புஞ்சைக்களத்தில் இறைவன் கிடைத்ததால் இவ்வூர் புஞ்சைக்களமானது.இப்பெயர் மருவி அஞ்சிக்களமானது. தேவாரத்தில் அஞ்சைக்களம் என்று அழைக்கப்பட்டு இன்று திருவஞ்சிக்குளம் என அழைக்கப்படுகின்றது.

பழங்காலத்தில் கொச்சி மன்னர்களின் வழிபடு தெய்வமாக மற்றும் அரச பதவி ஏற்கும்  முன் வணங்கும் தெய்வமாக இருந்ததை வரலாறு கூறுகின்றது .பின்பு இவ் வழக்கம் மாறி விட்டது.கொச்சி மன்னரின் ஆளுகையில் இருந்த இக்கோயில் 1950}ஆம் ஆண்டில் கொச்சி தேவசம் போர்டிற்கு மாற்றப்பட்டது.கூடவே இதன் தொன்மை கருதி, இந்திய தொல்லியல்துறை பராமரிப்பிலும் இருந்து 
வருகின்றது.

ஆலய அமைப்பு: இத்திருக்கோயில் 2.17 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைந்துள்ளது.இக்கோயில் 28 துணை சந்நிதிகளைக் கொண்டு தனிச்சிறப்புடன்  விளங்குகின்றது.

மூலவர்  சுயம்புநாதராக சிறிய வடிவில் லிங்கத் திருமேனியாக  கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இறைவன் அருகில் தேவியின் வடிவமும் கிழக்கு முகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரச்சிற்பங்கள்: இங்கு கருவறைக் கூரையில் எண்ணற்ற சிற்பங்கள் மரவேலைப்பாடுகளால் செய்யப்பட்டுள்ளது.சப்த மாதர்கள்,வீரபத்திரர், கணபதி விக்கிரகங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

கருவறை: கருவறையின் கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.விமானத்தில் யோகநரசிம்மர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. . கீழ்ப்பகுதி தேரின் பாகங்களைக் கொண்டு யாளி வடிவங்கள் கொண்ட மரச்சிற்பங்கள் நிறைந்துள்ளன.கோஷ்ட தெய்வங்கள் காணப்படவில்லை. பள்ளியறை அருகே காணப்படும் நடராஜர் சிலையின் பீடத்தில் "திருவஞ்சைக் களத்துச் சபாபதி" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
தில்லை நடராஜருடன் தொடர்புள்ள ஆலயம் என்பதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்" என கேரள மக்களால் போற்றப்படுகின்றது.வீதியின் நடுவில் உள்ள  பெரிய மேடை"யானை வந்த மேடை" என வழங்கப்படுகின்றது. 

சேரமான்}சுந்தரர் சந்நிதி: கருவறையின் தென்புறத்தில் உள்ள நாலம்பலத்தில் சுந்தரர்,சேரமான் பெருமான் சந்நிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது.இவர்களை தொடக்கத்தில் சேரன்,சேரத்தி என பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.கொச்சி சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் இதனை ஆராய்ந்து அந்த வடிவம் சேரத்தி அல்ல சுந்தரர் என்ற உண்மையை உலகறிய செய்தார்.இவரது முயற்சியினால் ஆடி சுவாதி உற்சவமும் தொடங்கியது.

சேரமான் பெருமாள்}சுந்தரர்: மலைநாட்டில்,சேரமான் பறம்பு என்ற இடத்தை தலைமையிடமாகக்கொண்டு"சேரமன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.இவர்களில் ஒருவரே பெருமாக்கோதையார். இவர் அஞ்சைகளத்தப்பன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.அறுபத்து மூவரில் இவரே "கழறிற்றறிவார்" என போற்றப்படுகின்றார்.நாள்தோறும் சிவபூஜை நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் மன்னன் ,நடராஜப்பெருமானின் சிலம்பொலி கேட்ட பின்பே உணவருந்தும் வழக்கத்தினை கொண்டிருந்தார்.

ஒரு நாள் சிலம்பு ஒலிக்கவில்லை. மன்னன் தன்னிடம் குறையுள்ளதாகக் கருதி வாளால், தலையைக் கொய்ய முயல, இறைவன் தடுத்தாட்கொண்டார்.
"நீ பூஜை செய்யும் போது, சுந்தரர் பாட்டால் மெய் மறந்தேன்' என்றார்.

எனக்கே தெரியாமல் இப்படிப்பட்ட பக்தர் உள்ளாரா என்று வியந்த மன்னன்,உடனே அவரைக் காண தில்லைக்குச் சென்றார். சுந்தரரைக் கண்டு மகிழ்ந்தார்.இருவரும் உற்ற நண்பர்களாயினர்.சேரமான் அழைப்பின் பேரில், சுந்தரர் திருவஞ்சிக்களம் வந்தார்.இறைவனை தரிசித்து மகிழ்ந்தார்.பிறகு மீண்டும் ஒருமுறை வந்தபோது,சுந்தரரை இத்தலம் அளவுக்கதிகமாக ஈர்த்தது.பூவுலக வாழ்வைத் துறந்து,கயிலாய வாழ்வை தருமாறு மனமுறுகி இறைவனை வேண்டி நின்றார்."தலைக்குத்தலை மாலை" என்ற பதிகம் பாடினார்.

இறைவன் ஆணைப்படி,இந்திரன்,திருமால்,பிரமன் மற்றும் தேவர்கள் வெள்ளை யானையுடன் நேரில் வந்து சுந்தரரை வரவேற்றனர்.வெள்ளையானை  சுந்தரரை ஏற்றிக் கொண்டு கயிலாயம் சென்றது.
உடனே சுந்தரர் தன் உயிர் நண்பன் சேரமானை(கழறிற்றறிவார்) நினைக்க,அவரும் சுந்தரரின் நிலையை உணர்ந்தார்.  அங்கிருந்த குதிரை மீது ஏறினார். திருவஞ்சைகளத்திற்குச் சென்றார். அங்கே யானைமீது சுந்தரர் செல்வதை பார்த்தார். உடனே,தன் குதிரையின்  செவியில், "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை  ஓதினார். 

மன்னனோடு மேலே எழும்பிய குதிரை ,வானில் சென்ற வெள்ளையானையை அடைந்து, அதனை வலம்வந்து, சுந்தரருக்கு முன்பாகவே  கயிலாயம் சென்று சேர்ந்தது. கயிலை செல்லும்போது சுந்தரர் "தானெனை முன்படைத்தான்" பதிகத்தினை பாடியபடி கயிலை சென்றடைந்தார். இறைவன் ஆணைப்படி,இப்பதிகத்தினை, வருணன் திருவஞ்சிக்குளம் தலம் கொண்டு சேர்த்ததாக இத் தலவரலாறு கூறுகின்றது.

கொடுங்கோளூர்}அஞ்சைக்களம்: பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பெரியாற்றங்கரை மற்றும் மலபார் கடற்கரையில் முசிறி என்ற துறைமுகப்பட்டினம் புகழ்பெற்றதாகும்.இது சேரர்களின் முக்கிய துறைமுக நகரமாகவும்,கேரள பகுதியின் நிர்வாக நகரமாகவும்   விளங்கியது. கடற்கரையில் உள்ள இன்றைய  அழிகோடு கிராமமே பழங்கால  முசிறி என கருதப்படுகின்றது.திருவஞ்சிக்குளம் 
இங்கிருந்து பத்து கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. கண்ணகி நிறைவாக வந்து சேர்ந்த தலமாக கொடுங்கோளூர் அமைந்துள்ளது.கொடுங்கோளூர் பகவதி கேரளாவில் புகழ்மிக்க அம்மன் தலமாகும்.

விழாக்கள்: ஏகதச ருத்ரம்,சங்காபிஷேகம்,மிருத்யுஞ்சய ஆவாகனம்,முதலான விழாக்கள் நடந்து வருகின்றன.இருந்தாலும் மகாசிவராத்திரி விழாவே பிரமோற்சவமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.சிவராத்திரிக்கு எட்டு நாட்களுக்கு முன்பே கொடியேற்றம் நடத்தப்படும். திருவாதிரை விழா,மற்றும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரரும்,சேரமான் பெருமாள் இருவரும் கயிலாயம் சென்ற வரலாற்றினை போற்றும் வைபவம் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அமைவிடம்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கோளூருக்கு தெற்கே இரண்டு கி.மீ. திருச்சூரில் இருந்து 40கி.மீ. சென்னை}கொச்சி ரயில்பாதையில் இரிஞாலக்குடா ரயில் நிலையத்தில் இருந்து 8கி.மீ. ஆலுவா ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ.தொலைவில் தலம் அமைந்துள்ளது.

 - பனையபுரம் அதியமான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com