நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வட்டிலால் வழிபடுத்தியவர்!

ஆழ்வார்களில்  ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடியவர்  "விப்ர நாராயணன்'  என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப்பொடி  ஆழ்வார். 

News image
Updated On :16 டிசம்பர் 2022, 12:41 pm

இரா. இரகுநாதன்

ஆழ்வார்களில்  ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடியவர்  "விப்ர நாராயணன்'  என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப்பொடி  ஆழ்வார். 

சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு பராபவ ஆண்டு மார்கழி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீ வனமாலையின் அம்சமாய் முன்குடுமிச் சோழியர்  என்ற வைணவ சோழியருக்கு மகனாக அவதரித்தார்.  

விப்ர நாராயணருக்கு  திருமணத்தில் விருப்பமில்லை.  ஸ்ரீரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்கு அரங்கநாதனைச் சேவித்து, நந்தவனத்தை அமைத்து, இறைவனுக்கு மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டு வந்தார். வடக்கே  உத்தமர் கோயிலில் தேவதாசி குலத்தில் பிறந்த "தேவதேவி' என்ற நடனமாது வசித்து வந்தாள்.  ஒருநாள் உறையூருக்குச் சென்றாள். விப்ரநாராயணரது நந்தவனத்தின் அழகில் ஈடுபட்டு, அவரை தன்வயப்படுத்திக் கொள்ள  எண்ணினாள். அவளது தமக்கையோ , "விப்ர நாராயணர் இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளவர். அவரை உன் வயப்படுத்துதல் எனும் செயல் நடக்காது' என்றுரைத்தாள். ஆனால்,  தேவதேவி  "அவரை என் வயப்படுத்தாவிடின் உனக்கு ஆறு மாத காலம் அடியவளாவேன்' என உறுதி கூறினாள்.

பின்னர், தேவதேவி தனியே மெல்லியதொரு செங்காவிச் சேலையுடுத்தி, விப்ர நாராயணர்  திருவடிகளில் விழுந்து வணங்கி,  "நான்  தாசி குலத்தில் பிறந்தவள். அத்தொழிலில்  உடன்பாடு இல்லை. உங்கள்  திருவடிச் சரண் புகுந்து உய்ய  வந்துள்ளேன். உங்கள் நந்தவனப் பணிகள் எதையும்  செய்யக் காத்திருக்கிறேன்' என்றாள். விப்ரநாராயணரும் அவள் கள்ளம்  உணராமல்  தாம் அமுது செய்யும்  உணவைக் கொடுப்பார். அவளும் நல்லவளாய் நடித்து வந்தாள்.

பெருமழை பொழிந்து கொண்டிருந்த ஒருநாள் அவள் நனைந்தபடி திருநந்தவனத்தில் நிற்பதைக் கண்டு, உள்ளே வந்து நிற்கும்படி கூறினார். அவளும் அருகில் வந்து, மென்மொழிகளினாலும், அவரது மனத்தைக் கவர்ந்து, தன் வயமாக்கி சில காலம் அவருடனிருந்து,  பொருளற்ற  அவரைப் பிரிந்து சென்று தன் போட்டியில் வென்று சென்றாள். சில நாள்களில் பிரிவு  ஆற்றாமல் அவளது வீட்டு வாயிலில் சென்று நின்றார்.

வைகுண்டத்தில்  திருமகளோ திருமாலிடம் மீண்டும்  விப்ர நாராயணனை ஆட்கொண்டு அந்தரங்க பக்தனாக்கி அருள வேண்டும் என்று வேண்டினாள். மனித வடிவம் கொண்ட திருமால் , கோயில்  பொன்வட்டில் ஒன்றை எடுத்துச்சென்று விப்ரநாராயணருக்குத் தெரியாமல்  தேவதேவியிடம் தந்து, தன்னை "அழகிய மணவாளதாசன்' என்றும் , "விப்ரநாராயணன் அனுப்பிட வந்தேன்'  என்று முகமன் செய்து கொண்டார். தேவதேவியும்  உள்ளே வரச் சொல்ல, தன் பக்தனுக்காக   விப்ரநாராயணரிடம் வந்து தேவதேவி உள்ளே வரச் சொன்னாள் என்று சொல்ல, உள்ளம்குளிர்ந்து உடல் பூரித்து உள்ளே சென்று  சேர்ந்தார் அவ்விரவும் கழிந்தது .

விடிந்தும்  அரங்கன்  பொன் வட்டில் களவு போயிருப்பதை  அரசனுக்கு அறிவிக்க, அரசனும் அர்ச்சகர், பரிசாரகர் முதலானவர்களைத் தண்டித்து வருத்தினான்.  ஒற்றர் மூலம் தேவதேவியின் வீட்டில்  பொன் வட்டி இருப்பதை அறிந்து, வினவ, "விப்ரநாராயணரின் ஏவலன் அழகிய மணவாளதாசன் மூலம் இதனை அனுப்பினார்' என்றாள். விப்ர நாராயணர், "நான் ஒன்றும் அறியேன்' என "எனக்கு ஏவலாளனும்  இல்லை'எனக் கூறியும்,  அரசன் , பொன் வட்டிலை தேவதேவியிடமிருந்து பெற்றுப் பெருமாளுக்களித்து,  விப்ரநாராயணரைச் சிறையில் இட்டான்.

அரங்கநாயகி அரங்கநாதனை பக்தனுக்கருள வேண்டினாள். பெருமாளும் மன்னன்  கனவில்  எழுந்தருளி, "தாசியிடத்துக் காதல் கொண்டவனின் கர்மாவை  கழித்ததற்காக தானே  பொன்வட்டிலைக் கொண்டு தந்து இவனைத் தண்டிக்கச் செய்தோம். இவன் கள்வனல்லன்' என்று தெரிவிக்க,  அப்பொழுதே விப்பிரரை விடுவித்து உபசரித்து அனுப்பிவிட்டான்.

இவ்வுலகின்  பொய்ம்மை மயக்கத்தில் ஆழ்ந்ததற்கு வருந்தி, பெரியோர்களைச் சார்ந்து, பிராயச்சித்தம் வேண்டினார். பல நூற்பொருள்களை ஆராய்ந்து, "பாவங்கள்  நீங்குதற்கு  பிராயச்சித்தம் பாகவதர்களுடைய திருவடித்  தீர்த்தத்தை கொள்வதே' என்று  கூற,   அதனைப் பெற்றுப் பருகித் தூயவரானார்.

வைணவனுடைய  திருவடித் தூளியாய்  கீழ்ப்படிந்து  ஒழுகி, அதனால் தன்னை தொண்டரடிப் பொடியாகக் கருதி பணி செய்து அதனையே திருநாமம் பெற்று வாழ்ந்தார்.

திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற திவ்வியப் பிரபந்தங்களை அருளிச்செய்தார்.   105 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரை குறிப்பிடுகிறது. இறுதிக்காலத்தில் திருமண்டங்குடியில் அரங்கன் ஆலயம் அமைத்து தொழுதார் எனப்படுகிறது.

வரும் டிச. 22}ஆம் தேதி அவரது அவதார தினத்தில் காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருமாலை சாற்று முறையும், 9 மணிக்கு ஆழ்வார் மங்களாசாசன உத்ஸவம் விசேஷ 
திருமஞ்சனம், வேதபாராயணம், பிரபந்த சேவை, சாற்றுமுறை, தீர்த்த விநியோகம் நடைபெறுகின்றன. 

விவரங்களுக்கு 9715190345, 8778350511.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.