சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சிறுவனுக்கு ஆயுள் ஈந்த சேவகப் பெருமான்!

திருக்கைலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமானதும், சைவக்குரவர்கள்..

News image
Updated On :25 மார்ச் 2022, 9:44 am

தினமணி

திருக்கைலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமானதும், சைவக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், காவிரி தென்கரைத் தலங்களில் 47-ஆவது தலமாக சிவத்தலங்களுள் பிரசித்தி பெற்று விளங்குகிறது திருக்கடையூர் அருள்மிகு அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோயில். இத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகவும்,  51 சக்தி பீடங்களில் கால சக்தி பீடமாகவும் திகழ்கிறது.

தலபெருமை: திருக்கடையூருக்கு கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் (பிஞ்சில மரம் "சாதி மல்லிப்பூ மரம்' தலவிருட்சம்) என்பது உள்பட பல புராதனப் பெயர்கள் உண்டு. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. மகாவிஷ்ணு,  பிரம்மா, மார்க்கண்டேயர், அகத்தியர், காலன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இனி புராணங்கள் கூறும் சிறப்பினைப் பார்ப்போம்.

ஆபரண ஒளியில் தோன்றிய ஆரணங்கு: சாவா, "மூவா' வரம் வேண்டி முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைய, தன்வந்திரி பகவான் தன் திருக்கரங்களில் அமிர்தத்துடன் தோன்றினார். அவரிடமிருந்த அமிர்த கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடினர் அசுரர்கள். அப்போது மகாவிஷ்ணு எல்லோரும் மோகிக்கும்படியாக அழகிய பெண்ணாக அங்கு தோன்ற, அந்த மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் தங்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிக்க மோகினியைக் கேட்டுக் கொண்டனர்.
மோகினியும் அதற்கு சம்மதிக்க, அவளிடம் அமிர்த கலசத்தைத் தந்துவிட்டு எல்லோரும் நீராடச் சென்றனர். அமிர்தத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கு முன் சிவபூஜை செய்ய விரும்பிய மகாவிஷ்ணு, தன் ஆபரணங்களையெல்லாம் களைந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு பூஜையில் ஈடுபட்டார். அந்த ஆபரணங்களின் ஒளி வெள்ளத்திலிருந்து கண்கண்ட தெய்வம், அழகுக்கொருவரும் ஒவ்வாத செல்வி, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகியான அபிராமி அம்பிகை, அதி ரூபவதியாக பல்வேறு வைர வைடூர்ய ஆபரணங்களை அணிந்து கொண்டு பேரழகுடன் தோன்றினாள். 

பிரும்மா, விஷ்ணு, சிவன், இந்திராதி தேவர்கள் எல்லோரும் தொழுதனர்.அமிர்த கடேஸ்வரர் சிறப்பு: அம்பிகையின் அருளுடன், மகாவிஷ்ணு, மீண்டும் மோஹினியாக உருக்கொண்டு, தேவர்களுக்கு அமுதம் பரிமாற முற்பட்டபோது, முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் தன்னை வழிபடாத காரணத்தால் சினம் கொண்டு, அமிர்த குடத்தை ஒளித்து வைத்துவிட்டார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) "அமிர்தகடேஸ்வரர்' (அமிர்தம்+கடம்) என்று பெயர் பெற்றார். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் "கள்ளவிநாயகர்' என்று தனி சந்நிதி பெற்று அருள்பாலிக்கிறார். பின்னர் மகாவிஷ்ணு விநாயகரைத் துதிக்க, அவரும் சினம் நீங்கி, அமிர்தத்தை மீண்டும் கொடுக்க, மகாவிஷ்ணு அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் பகிர்ந்தளித்தார் என்கிறது புராணம்.

காலனைக் காலால் கடிந்த கடவுள்: 
மிருகண்டு மகரிஷியின் புத்திரரான மார்கண்டேயர் தனக்கு 16 வயதுடன் ஆயுள் முடிகிறது என்பதை அறிந்து பல்வேறு தலங்களைத் தரிசித்துக் கொண்டு இறுதியாக இத்தல பெருமானை சரணடைய, மார்கண்டேயரின் ஆயுள் முடிந்ததும் அவரது உயிரைக் கவர்ந்து செல்ல வந்த காலனை சம்ஹரித்தது மட்டுமல்லாமல் மார்கண்டேயரை என்றும் பதினாறு வயதுடனேயே இருக்க அருள் புரிந்தார் இத்தல ஈஸ்வரன். அவர் காலசம்ஹார மூர்த்தியாக பாலாம்பிகையுடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் அருளால் இறைவனின் அனுக்ரகம் பெற்ற தர்மராஜாவின் திருவுருவத்தை, இம் மூர்த்தியின் எதிரில் தனி சந்நிதியில் தரிசிக்கலாம்.

திருக்கடையூர் ரகசியம்: சிதம்பரம் ரகசியம் போல திருக்கடையூரிலும் ரகசியம் ஒன்று உண்டு. கால சம்ஹார மூர்த்தி சந்நிதிக்குள் ஸ்வாமிக்கு வலப்புறத்தில் மதிலில் ஒரு எந்திர தகடு உள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்பர். இதனை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பர்.             
   
கிணற்றில் பிரவகித்த கங்கை: ஒரு பிரம்ம கர்ப்பத்தின் முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடம் தற்போது திருக்கடவூர் மயானம் என்றழைக்கப்படுகிறது. பின்னர் தேவர்கள் வேண்ட, பிரம்மாவை உயிர்ப்பித்து  அவருக்கு சிவஞானத்தை போதித்து, படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். 
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த இடம் திருக்கடவூர் மயானம், திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் கங்கையானது, இங்கு வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் "அஸ்வினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது. அமிர்தகடேஸ்வரருடைய அபிஷேகத்திற்கு மட்டுமே இத்தீர்த்தம் உபயோகப்படுத்தப்படுவது ஒரு சிறப்பு. 

அடியார்களுக்கு அருளியது: குங்கிலிய கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் வாழ்ந்து சிவத் தொண்டாற்றி முக்தியடைந்த தலம். இத்தலத்தில் அருளாட்சி புரிந்துவரும் அன்னை அபிராமியிடம் பக்தி பூண்ட அபிராமி பட்டர், "இன்று என்ன திதி' என்று கேட்ட தஞ்சை அரசனிடம், அமாவாசை நாளில் "பெüர்ணமி' என்று கூறியபின், தன் தவறுணர்ந்து, அம்பிகையை வேண்டி, அபிராமி அந்தாதி நூல் பாடிய அளவில், அடியவர் வாய் மொழியைக் காக்க வேண்டி, அம்பிகை தன் காதணியை கழற்றி வான் வெளியில் வீசி ஒரு முழு நிலவொளி தோன்றச் செய்த அற்புத நிகழ்ச்சி, இத்தலத்தில் ஒரு தை அமாவாசை நாளில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மன்னரும் அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அடியாருக்கு பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார்.

"அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு' என்று அபிராமி பட்டர் தன் அந்தாதியில் அம்பிகையின் கடைக் கண் பார்வை பட்டால் எமனையும் வெல்லலாம் என்று போற்றுவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எம பயம் போக்கும் தலமாக இறைவனும் இறைவியும் சேர்ந்து அருளுவது இத்தலத்தின் சிறப்பாகும். சந்நிதிகள் சிறப்பு: விநாயகரின் அறுபடை தலங்களில் இது மூன்றாவது தலம் ஆகும். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய காட்சியாகும். 

இதைத் தவிர வள்ளி தேவசேனாவுடன், சுப்பிரமணியருக்கு சந்நிதியும் உண்டு. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களால் இத்தல முருகனைப் போற்றியுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. எம பயம் போக்கும் இத்தலத்து இறைவனே இங்கு முதன்மையாக இருப்பதால் இத்தலத்தில் தனியாக நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நிதி இல்லை.

கல்வெட்டுச் சான்றுகள்:  சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. 
உற்சவங்கள்:  இத்தலத்தில் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதில் 6}ஆம் நாளன்று கால சம்ஹார மூர்த்தி வீதியுலாவிற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை மாதம் சோமவார விழாவில் நடக்கும் 1008 சங்கா பிஷேகம் மிகவும் விசேஷமானது. 

வழிபாட்டு பலன்கள்:  காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள்பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். நோய் நொடிகள் விலகும். எமபயம் அண்டாது. துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்புடன் திகழும் இத்தலத்தில் பக்தர்கள் ஆயுஷ்ஹோமம், மணிவிழா (60), பீமரதசாந்தி (70), சதாபிஷேகம் (80), கனகாபிஷேகம் (90), பூர்ணபிஷேகம் (100}ஆவது வயது)  போன்ற வைபவங்களை நடத்தி பலன் அடைகிறார்கள். 

மேலும் வியாதிகள் குணமாக சங்காபிஷேகமும், புத்திர பாக்யம் வேண்டுவோர் ருத்ராபிஷேகமும், இதய நோய் உள்ளவர்கள் சப்த திரவிய மிருத்யுஞ்ஜய ஹோமமும் இங்கு பரிகார நிவர்த்தி வேண்டி செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகச் சிறப்பு: தருமையாதீனம் 27}ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு சைவ ஆதீனங்கள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க, ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மார்ச் 27}ஆம் தேதி (பங்குனி 13 -ஞாயிறு) காலை 10 மணிக்குமேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 21ம் தேதி திருக்கடவூர் நான்கு வீதிகளிலும் உள்ள விநாயகர்கோயில்,  ஸ்ரீ பிடாரி அம்மன்கோயில் ,
ஸ்ரீ எதிர்காலேஸ்வரர் திருக்கோயில்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தேறியது.  

27-ஆம் தேதி நடைபெறும் ஆலய மகாகும்பாபிஷேகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு ஸ்ரீ அபிராமி அம்பிகை மற்றும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரின் அருளுக்கு பாத்திரமாவோமாக! 
தகவல்களுக்கு:  கோவிந்தராஜன் 9443850541 மற்றும்  செல்வநாயகம்  8825807031

-அபிராமி மைந்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.