கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

முகக் கவசமே முழுக் கடவுள்!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சாலியமங்கலம் கிராமத்தில் 378}ஆவது ஆண்டு பாகவத மேளா நாட்டிய நாடக விழா மே 4}இல் தொடங்குகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 12:28 pm

எஸ். வெட்கட்ராமன்

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சாலியமங்கலம் கிராமத்தில் 378}ஆவது ஆண்டு பாகவத மேளா நாட்டிய நாடக விழா மே 4}இல் தொடங்குகிறது.

இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த உத்ஸவத்தையொட்டி,  பக்தி ரஸ நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. 

தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்க மன்னர் காலம் முதல் (கி. பி. 1645) இடைவெளியின்றி நடைபெற்றுவருகிறது. இந்தத் தெய்வீகக் கலையம்சம் பொருந்திய நாடகங்களின் வசனங்கள், கீர்த்தனைப் பாடல்கள் ஆகியன தெலுங்கு மொழியில் அமைந்தாலும் தெரிந்த புராணம் என்பதால் புரியும்படியாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன.  பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்று நடிப்பது சிறப்பு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் இந்த நாடகங்களில் முக்கியமானது "பிரகலாத சரித்திரம்'.  

நரசிம்ம ஜெயந்தியன்று நடைபெறும் இந்தப் பாகவத மேளா நாட்டிய நாடகத்தில் அசுரவேந்தனான ஹிரண்யகசிபுவின் ஆக்ரோஷத்தையும், ராணி லீலாவதியின் புத்திர பாசத்தையும்,  பிரகலாதனின் ஆழ்ந்த பக்தி பாவத்தையும்  ரசிக்கலாம். 

நிறைவாக அக்ரகார வீதியில் விடியற்காலையில் (இரவும், பகலும் கூடும் நேரம்)  நடைபெறும் தத்ரூபமான நரசிம்ம அவதாரக் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். இந்த நிகழ்வை சாலியமங்கலத்தில் மட்டுமே காண முடியும்.  இதற்கென்றே பிரத்யேகமாகப் பூஜிக்கப்பட்டு வரும் நரசிம்ம முகக் கவசத்தை (முகமூடி) தரித்துக் கொண்டுஅவதாரக் காட்சி நடத்தப்படுகிறது. 

இந்த முகக் கவசம் அத்திமரத்தில் செதுக்கப்பட்டது. மிகவும் சான்னித்தியம் வாய்ந்தது.  பிரத்யேகமாக ஒரு பாகவதர் வீட்டில் வைத்து நித்ய ஆராதனையும், விசேஷ காலங்களில் வழிபாடும் செய்யப்படுகிறது.  இத்துடன் ஸ்வேத விநாயகர் முகக் கவசமும் ஸ்ரீராமர்,  சீதை,  லட்சுமணன்,  அனுமன் 
விக்ரகங்களும் ஆராதிகப்படுகின்றன.

நரசிம்ம ஜெயந்தியன்று மாலைஅக்ரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு ஜல ஆவாஹணம்ù சய்து, திருமஞ்சனம் செய்வது போல் சுத்தம் செய்து, வர்ண கலாபம் தீட்டி கண் திறக்கப்பட்டு மீண்டும் பூஜைக்கு உரியதாக ஆக்குவதற்கு  ஜலஅவரோகணம்  செய்யப்படுகிறது.  

பின்னர், சகஸ்ரநாம பாராயணம், வேத மந்திரங்கள், பிரபந்தங்கள், பாராயணத்துக்குப் பிறகு, சர்க்கரைப் பொங்கல், பழங்கள்,  பானகம் நிவேதனம் செய்யப்பட்டு, கற்பூரஆர்த்தி காண்பிக்கப்படும்.  பெருமாள் கண் திறக்கும் இந்த வைபவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

விடியற்காலை நரசிம்ம அவதாரக் காட்சிக்குப் பிறகு,  பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படும்.  பிரகலாதன், ஸ்ரீலஷ்மி தேவி புடை சூழ ஸ்ரீ
நரசிம்ம மூர்த்தியாக தெருவில் நடந்து வரும்போது அனைத்து வீடுகளிலும் ஆரத்தி எடுப்பார்கள்.  வேண்டிக் கொண்டவர்கள் அங்க பிரதட்சணம்  செய்து, வீதியில்  நரசிம்மர் முன் புரண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  

இந்த நரசிம்ம அவதாரக் காட்சியை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன்னுடைய சீடர் ஸித்தேந்திர யோகியுடன் வந்திருந்துள்ளார். இதற்கான முத்திரை அவதாரப் பாடல்கள் ஒன்றில் காணப்படுகிறது.

இந்த முகக் கவசமே முழு நரசிம்மத் தெய்வ உருவில் இந்தக் கிராமத்தில் வழிபடப்படுகிறது.   தங்கள் வீடுகளில் நடக்கும் சுபகாரியங்களை இவரை வழிபட்ட பின்னரே தொடங்குகிறார்கள். 

இந்த ஆண்டு நிகழ்ச்சிகள்: மே 4 இரவு 10 மணி- ஸ்ரீபிரஹலாத சரித்திரம் (நாடகம்),

மே 5 அதிகாலை 4.30-ஸ்ரீநரசிம்ம அவதாரம். 

இரவு 10 மணி- ஸ்ரீருக்மணிபரிணயம் (நாடகம்).

தொடர்புக்கு- 9444071220, 9443674366. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.