பக்தனுக்காக விரதமிருக்கும் மகாமாரி!
தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமைக் கோயிலாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கிறது.

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்
தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமைக் கோயிலாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கிறது. சமயபுரத்தில் நிலை பெற்றவளை "சாய்ந்தாள் சமயபுரம்; சாதித்தாள் கண்ணபுரம்' என பேச்சுவழக்கில் குறிக்கின்றனர் .
கண்ணபுரம், கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் தலத்தில் உள்ள இந்தக் கோயில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மூல கோயிலான ஆதி மாரியம்மன் கோயில் விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்டதாகும்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைணவிதேவி மட்டும் இருக்க, தனது சொந்த சகோதரிகள் உடனில்லாமல் உக்கிரமாக இருந்ததால் அரங்கன் அனுமதியோடு அப்போதைய ஜீயர், அத்திருமேனியை வடக்கே எடுத்துச் சென்று அரங்கனின் எல்லையில் நிறுவக் கூற அரங்கனுக்குச் சொந்தமான கண்ணனூர் என்னும் ஊரில் உள்ள அரண்மனையில் நிறுவினர்.
வழிப்போக்கர்கள், வணிகர்கள் வணங்கிச் செல்ல நற்பலன்களே கிடைக்க, "கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.
விஜயநகர பேரரசு ஆபத்திலிருந்தபோது, அம்மன் சிலையை தந்தப் பல்லக்கில் தூக்கி வந்தவர்கள் வேம்பு மரங்கள் வளர்ந்து அடர்வனப் பகுதியான சமயபுரத்தில் இறக்கி உணவு உண்டனர். பின்னர், பல்லக்கைத் தூக்க முடியாமல் கனத்துப் போனதால் சிலையுடன் அங்கேயே விட்டுச் சென்றனராம்.
கி.பி. 1706 முதல் 1732-ஆம் ஆண்டு வரை திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் அம்மனுக்கு தனிக் கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.
கண்ணனூரில் இருந்த வாணிபக் குழு சில முறைகளைப் பின்பற்றியது. அந்தக் குழுக்களை "சமயம்' என்று அழைப்பர். அந்த வாணிபக் குழு வாழ்ந்த ஊரை முன்வைத்து "சமயபுரம்' என்று அழைக்க, அதுவே நிலைத்துவிட்டது.
கருவறையில் குடிகொண்ட மாரியம்மன் மாதுளம்பூ நிறத்தவளாய், எட்டுக் கரத்திலும் கத்தி, உடுக்கை, தாமரைப்பூ, திரிசூலம், கபாலம், பாசம், காண்டீபம், மணி ஏந்தி, இடதுகால் பீடத்தில் மடித்திருக்க, கிழக்கு நோக்கி, தலை மாலை கழுத்தில் அணிந்து, சர்ப்பம் குடைபிடிக்க, அசுரர்களின் தலைகளைத் தன் வலக்காலால் மிதித்து, நாடிவரும் பக்தனுக்கு அன்பும் அருளும் துலங்கும் முகத்தோடு தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்து தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் தெய்வமாக அருளுகிறாள்.
சமயபுரத்தில் மூன்று சுற்றுகளை உடைய கோயில் தலமரம் வேப்ப மரம். கருப்பண்ணசாமி தெற்குப் பார்த்தும் அமர்ந்துள்ளார். கருவறையில் அம்மனைச் சுற்றி நீரைத் தேக்கிவைத்து, வெம்மை தணிக்கின்றனர்.
உக்கிர தேவதையாய் இருந்த வைணவி, இங்கு வேம்படியில் சக்திமிகு பல தீர்த்தங்களுக்கிடையில் அமர்ந்து அருளுகிறாள். வேப்பமரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகாமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம்பூவை நெற்றியில் உள்ள வைரத் திலகத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
காவிரியின் உபநதியான பெருவள வாய்க்காலில் நீராட பாவங்களும், நோய்களும், நீங்கி உள்ளம்}உடல் தூய்மை ஏற்படுகிறது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடுவர். ஆடிப்பூரத் தீர்த்தவாரியும், ஆடிப் பெருக்கு தீர்த்தவாரியும் இங்கு நடைபெறும். தை, சித்திரை மாதங்களிலும் திருவிழாக்கள் உண்டு.
நாயக்கர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட மகமாயி கோயில் தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகிய விமானத்துடன் அமைந்துள்ளது. அதிசய மகாமக தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், கங்கை தீர்த்தம் ஆகியன உள்ளன . விக்கிரமாதித்தன் தமது இஷ்டதேவதையான காளி தேவிக்கு நித்திய பூஜைகளைச் செய்ய கங்கா தேவியை இங்கு அழைக்க, கங்கை இங்கு பிரவாகித்தாள். திருமணத் தடைகள், தீராத நோய்கள், பில்லி சூனியம், ஏவல் போன்ற தடைகளை அகற்ற இத்தீர்த்தம் ஓர் அருமருந்தாகவும், சித்தப்பிரமை , குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்தும் அற்புத மருந்தாகவும் இந்தப் புனித தீர்த்தம் பக்தர்களுக்குப் பயன்பட்டு வருகிறது .
அம்மன் அருளால் குழந்தைப் பேறு பெற்றவர்களும், சுகப் பிரசவமானவர்களும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தோளில் தாங்கி கோயிலை வலம் வந்து செய்யும் பிரார்த்தனை, வெள்ளியாலான கண்மலர் முதலிய உருவாரங்களை உடல் நோய் நீங்க காணிக்கையாகச் செலுத்துதல், அம்மை வார்த்தவர்கள் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாமலிருத்தல், உபாதைகளில் இருந்து குணமடைய வேண்டி அம்மனுக்கு உப்பு, மிளகு காணிக்கையாகச் செலுத்துதல் போன்ற பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன .
ஆண்டுதோறும் மாசி கடை ஞாயிறு முதல் பங்குனி கடை ஞாயிறு வரை 28 நாள்களும் உண்ணாநோன்பு இருக்கும் அன்னைக்கு உப்பில்லா நீர்மோரும், கரும்பு பானகமும், இளநீர், குளிரூட்டும் கனிவகைகள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. பச்சைப் பட்டினி விரதம் தொடங்கும் நாளான மாசி மாதத்தின் கடைசி ஞாயிறுதான் "பூச்சொரிதல் விழா' நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...