காலம் வரையறுக்க முடியாத திருத்தலம்!

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் காலம் வரையறுக்க முடியாத தொன்மையான திருத்தலம்.
காலம் வரையறுக்க முடியாத திருத்தலம்!
Published on
Updated on
2 min read

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் காலம் வரையறுக்க முடியாத தொன்மையான திருத்தலம். பல ரகசியங்கள், விநோதங்கள் நிறைந்த இத்தலத்தை அடிப்படையாகக் கொண்டு,  ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

திருவாரூர் கோயிலின் வரலாற்றை கூற இயலாது என திருநாவுக்கரசர் வியந்து, இத்தலத்தின் தொன்மை, சிறப்பை தனது பதிகத்தில் பாடியுள்ளார். தேவாரம், 12 திருமுறைகளில் பாடல் பெற்ற ஒரே தலமாகவும் திகழ்கிறது.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் கோயிலில் ராஜாவாக வீற்றிருக்கும் தியாகராஜ சுவாமி, புற்றிடங்கொண்டான். புற்றிலிருந்து புறப்பட்டவர். சுயம்புவானவர்.  கோயிலில் இரண்டு மூலவர்கள். ஒன்று புற்றிடங்கொண்டான் (வன்மீகர்),  மற்றொன்று ஸ்ரீ தியாகராஜசுவாமி. ஆரூரில் பிறந்தவர்களுக்கெல்லாம் அடியேன் என பாடிய எம்பெருமான் தோழர் சுந்தருக்காக தேரோடும் வீதிகளில் எம்பெருமான் நடந்த தலம். 

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் அரசர் என்று பொருள். 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100}க்கும் மேற்பட்ட சந்நிதிகள், 86 விநாயகர் சிலைகள், 24}க்கும் மேற்பட்ட உள்கோயில்கள் என இந்தியாவில் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

திருவாரூர் கோயிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் 1,000 கல்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கோயில் ஐந்து வேலி, மேல கோபுரம் எதிரே அமைந்துள்ள கமலாலயம் குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற சிறப்பு கொண்டது இந்தத் தலம்.

பலன்கள்: அனைத்து பிரச்னைகள் நீங்கி செல்வச் செழிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.  மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால்  பாவங்கள் நீங்கும், ஆணவம் மறைந்து எண்ணற்ற வரங்களும், செல்வச் செழிப்பும் கிடைக்கும்.

கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலக ருணவிமோசனரை வழிபடலாம். பதவி உயர்வு,  பணிமாற்றத்துக்கு ராகு கால துர்கையை வழிபடலாம்.  குழந்தை வரத்துக்கு நீலோத்பலாம்பாளுக்கு அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து வழிபட்டு பால் சாப்பிட வேண்டும்.

கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர். ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகு ரசம் படைத்து வழிபட வேண்டும்.

விநோதங்கள்: மாலை 6 மணிக்கு நடைபெறும் பூஜை தொடங்குகையில், பக்தர்கள் மட்டுமின்றி ஈரேழு உலகத்தில் உள்ள தேவர்கள், தேவதைகள் அனைவரும் அந்த இடத்துக்கு வந்துவிடுவர் என்பது ஐதீகம். தியாகராஜர் அரசர் என்பதால், அரசருக்கான அனைத்து மரியாதைகள் செய்யப்படும்.

தியாகராஜரை முழுமையாகத் தரிசிக்க முடியாது. அவரது திருமேனி ரகசியத்தை அறிந்துகொள்ள  யோக மார்க்கத்தில் பயிற்சி செய்து, ஹம்ச மந்திரத்தை உபதேசமாக பெறுபவர்களுக்கு ரகசியம் தானாக புலப்படும். தியாகராஜரை தூக்கிவர பயன்படுத்தப்படும் தண்டை கட்டும்போது, வைக்கப்படும் பொருள், சொல்லப்படும் மந்திரம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்படுகிறது.

ஆழித்தேரோட்டம் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வு உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ஆழித்தேரோட்டம்.  இத்தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டதாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும்.

ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் ஆகிய 63 நாயன்மார்களின் புராண சிற்பங்கள், பெரியபுராணம், சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள் மரத்தில் புடைப்பு சிற்பங்களாக தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாகத்தில் அழகியக் கலை நயத்துடன் வடிக்கப்பட்ட 200}க்கும் மேற்பட்ட புராணக் கதைகளை எடுத்துக்கூறும் மரச்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆழித்தேரில் அமைக்கப்படும் குதிரைகள், துவாரபாலகர், பாம்புயாளம் ஆகியவற்றில் குதிரை பொம்மையே மிகப் பெரியதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும். தேருக்கு தேவையான 4 பெரிய குதிரைகள் 32 அடி நீளம், 11 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.

4 குதிரைகளை தேரில் பூட்டி லகானை இடதுகையில் இழுத்துப் பிடித்து கொண்டு வலது கையில் ஓங்கிய சாட்டை யுடன் பெரிய அளவிலான நான்முகனின் உருவமுள்ளது. தவிர சுப்பிரமணியர், விநாயகர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரை தேரில் வைக்க 4 குதிரைகள் உள்ளன. இந்தக் கோயிலின் தேரோட்டம் வரும் ஏப். 1}இல் நடைபெறவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com