புதியதாக தொழில், வியாபாரம் துவங்குபவர்கள், ஏற்கெனவே தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் ஏற்பட்டு வருந்துபவர்கள், அதில் பெரிய அளவில் லாபம் காண இயலாமல் தவிப்பவர்கள் எனப் பலருக்கும் நற்பலன் தரும் வகையில் ஆகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட 32 அய்யம்பேட்டை எனப்படும் ஐயன்பேட்டை செட்டியப்பர் கோயில்.
புராண சிறப்புடைய திருவீழிமிழலை தலத்தில் நிகழ்த்தப்பட்ட தெய்வீகத் திருமணம் மிகுந்த விசேஷமானது. இந்தப் புராண நிகழ்வுடன் தொடர்புடைய ஏராளமான ஊர்கள் திருவீழிமிழலையைச் சுற்றி அமைந்துள்ளது. அவற்றுள் ஒன்றுதான் ஐயன்பேட்டை.
முற்காலத்தில் திருவீழிமிழலைக்குரிய ஆவண வீதியாக, அதாவது அங்காடித் தெருவாக அமைந்திருந்த பகுதி இது. பின்னர் தனித்த ஊராகி விட்டது. இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயம்தான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
இத்தலமானது திருவீழிமிழலையுடன் கொண்டுள்ள தொடர்பைப் பற்றி அறிய வேண்டுமெனில், நாம் சற்று தேவார காலத்துக்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
முன்னொரு சமயம், திருவீழிமிழலையில் தங்கியிருந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகிய இருவரும் இறையருளால் தினந்தோறும் படிக்காசு பெற்று, மக்களின் உணவுப்பஞ்சம் தீர்த்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான்.
மக்களின் பசியைப் போக்கிடுவதற்கான உணவுத் தயாரிக்கும் பணிக்குத் தேவையான மளிகைப்பொருள்களை தினசரி படிக்காசுகளை அளித்து எங்கு வாங்குவது என்கிற ஐயம் ஏற்பட்டது.
அப்பொழுது, "ஐயன் பேட்டையில் பொருள்களை வாங்கி, ஆண்டார்பந்தியில் உணவு படைத்திடுக!' என அசரீரியாக இறையின் திருவாக்கு ஒலித்தது.
மடத்துப் பணியாளர்கள் கொண்டு வந்த பொற்காசைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருள்களை அளிப்பதற்காக இத்தலத்து அம்மையப்பரே வணிகத் தம்பதியராக உருவெடுத்து வந்த கதை அதிசயமானது.
ஆம். இத்தலத்து மீனாட்சி அம்மை கையில் படியுடன் வந்து தானியங்களை அளந்தமையால், "படியளந்தநாயகி' எனப்படுகிறாள். அதேபோல் கையில் தராசுடன் பொருள்களை நிறுத்துக் கொடுத்து வியாபாரம் செய்த இத்தலத்து சுந்தரேஸ்வர சுவாமி "செட்டியப்பர்' என வழங்கப்படுகிறார். பிற்பாடு இத்திருக்கோலத்துடனேயே அம்மையப்பர் இத்தலத்தில் நிலைத்து நின்றுவிட்டனர் என்கிறது தலபுராணம்.
கிழக்கு நோக்கிய அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே விஸ்தாரமான நந்தி மண்டபம். மூலஸ்தானத்தில் சிறிய திருவினராகக் காட்சி தருகிறார் ஸ்ரீ சுந்தரேஸ்வரர். அவருக்கு இடது பாகத்தில் மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியவளாய் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி.
மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் படியளந்தநாயகி, செட்டியப்பர் திருவுருவங்களை சுதாமூர்த்தமாக எழுந்தருளச் செய்துள்ளனர். இவர்களுக்கும் ஆராதனை செய்யப்படுகிறது. இதே அமைப்புடைய உலோகத் திருமேனியரை உற்சவ காலங்களில் மட்டும் தரிசிக்க இயலும். சிவாலயத்துக்குரிய பரிவாரங்களான கன்னி மூலை கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்கை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர்ஆகியோர் அவரவர்களுக்குரிய சந்நிதிகளில் முறையே நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியுள்ள அமர்ந்த நிலை மகாலட்சுமி அழகிய திருவினள். வித்தியாசமான அருட்கோலமுடைய பைரவர் இத்தலத்துக்குரிய மற்றொரு சிறப்பு.
விஷக்கடிகளால் பாதிப்பு அடைந்தவர்கள் இந்த பைரவரை வழிபட்ட பிறகு அருகில் தனித்த கோயிலில் அருளுகின்ற சீதளை எனப்படும் முத்துமாரியம்மனை வழிபட பூரண நிவாரணம் கிடைப்பது இன்றளவும் கண்கூடு. இத்தலத்து சிவபெருமானின் ஆக்ஞைபடி விஷ பாதிப்புகளை அகற்றியருளுகிறாள் அன்னை முத்துமாரி என்கிற சம்பிரதாயம் நிலவுகிறது.
இத்தலத்துக்கு ஆண்டு முழுவதுமே வணிகர்கள் வந்து வணங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக மாதாந்திர பரணி நட்சத்திர தினங்களில் இங்கு செய்யப்படும் ஆராதனைகள் சிறப்பானவை. அதேபோன்று வருடாந்திர சித்திரை } பரணி வணிகத் திருவிழா திருவாரூர் மாவட்டத்துக்குரிய பிரபலமான திருவிழாக்களுள் ஒன்று. இந்த வருடத்துக்குரிய திருவிழாவானது ஏப்ரல் 18}ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தொழில், வியாபாரத்தைப் போற்றிடும் இந்த தனித்துவமான விழாவில் வணிகர்கள் தரிசனம் செய்வார்கள். அந்த சமயத்தில் குங்குமம், மஞ்சள், உப்பு, தானியங்கள் போன்றவற்றை பிரசாதமாக அளிப்பது கோயில் வழக்கம். இவற்றைப் பெற்றுச் செல்பவர்கள் தங்கள் வீடுகளில் பூஜை ஸ்தானங்களில் அவற்றை வைத்து வணங்குகின்றனர். உற்சவ மூர்த்தங்களான அம்மையப்பர் இருவரும் கையில் வெள்ளியாலான தராசு மற்றும் படி ஆகியவற்றுடன் விசேஷ காலங்களில் பவனி வருவது சிறப்புக்குரியது. தலவிருட்சம் வில்வம். பொற்றாமரைக் குளமும், அரசலாறும் தீர்த்தமாக விளங்குகின்றன.
பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை } திருவாரூர் வழித்தடத்தில், பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள மருதுவாஞ்சேரி எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஐயன் பேட்டை செட்டியப்பர் கோயில் அமைந்துள்ளது.
- சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


