காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்று, திருவையாறு. பூலோக கயிலாயம், பஞ்சநதம், ஜீவன் முக்திபுரம், காவிரிக்கோட்டம், தென் கயிலாயம் எனப் பல்வேறு பெயர்கள் இதற்குண்டு. இப்பகுதியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகள் உள்ளதால் இவ்வூரை திருவையாறு என்கிறார்கள்.
இங்குள்ள கோயிலை அருள்மிகு பஞ்சநதீஸ்வர சுவாமி திருக்கோயில் அல்லது ஐயாறப்பர் கோயில் என்று அழைக்கிறார்கள்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். வில்வத்தை தலவிருட்சமாகக் கொண்ட இந்தத் தலத்தை அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், வடலூர் ராமலிங்க அடிகளார், சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் போன்றவர்கள் பாடல் இயற்றிப் பாடியுள்ளனர்.
கிழக்கு நோக்கிய சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகள் தனித்தனியே ராஜகோபுரத்துடன் காணப்படுகின்றன. இக்கோயிலுக்குள்ளே ஐயாறப்பர், அம்மன் கோயில், உத்திர கயிலாயம் எனப்படும் ஒலோகமாதேவீச்சரம், பஞ்சவன்மாதேவீச்சரம் எனப்படும் தென்கயிலாயம், தண்டபாணிக் கோயில் என ஐந்து கோயில்கள் உள்ளன.
இங்குள்ள லிங்கம் பிருத்வி (மண்) லிங்கமாகும். ஆகையால், லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாற்றுவது வழக்கம். இறைவனுக்கு ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர், செம்பொற்சோதியார், கயிலாயநாதர், பிரணதார்திஹர் எனப் பல திருநாமங்கள் உண்டு.
இத்தல இறைவனும் இறைவியும் நந்திதேவரை தமது தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டமையால், நந்திக்கு சம்பிரதாய முறைப்படி திருமழப்பாடிக்கு நந்தியுடன் சென்று ஆண்டுதோறும் பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில், நந்திதேவருக்கும் சுயம்பிரகாசம்மையாருக்கும் திருமணம் செய்து வைத்து, புதுமணத் தம்பதிகளை திருவையாறு அழைத்து வரும் ஐதிக நிகழ்வுகள் நடக்கின்றன.
இக்கோயிலில் உள்ள இறைவி அறம் வளர்த்த நாயகி, திரிபுரசுந்தரி, தர்மசம்வர்த்தினி, தருமாம்பிகை, திருக்காமகோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்னும் திருநாமங்களுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடமாகும். ஆடிப்பூர பெருவிழாவில் அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பது தனிச்சிறப்பாகும்.
சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான் கயிலாயநாதரை தரிசிக்க விரும்பினார். மலைப்பாதையில் தட்டுத்தடுமாறி அப்பர் பெருமான் சென்றபோது, வழியில் சிவபெருமான் மாறு வேடத்தில் அப்பர் முன்பாகத் தோன்றி, இந்த வயதில் தங்களால் கயிலாயம் செல்ல இயலாது. எனவே, திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறினார்.
அப்பர், "கயிலாய நாதரை தரிசிக்காமல் திரும்ப மாட்டேன்' என்று உறுதியாகக் கூறியதால், இறைவன் அருகில் உள்ள பொய்கையில் அப்பரை மூழ்குமாறு கூறினார். அப்பர் அக்குளத்தில் மூழ்கி, தெய்வச் செயலால் திருவையாறு குளத்தில் எழுந்தார். சிவன் அவருக்கு தரிசனம் தந்தார். குளத்தில் இருந்து எழுந்து கயிலாய தரிசனம் பெற்ற அப்பர் சுவாமிகள்,
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
எனப் பதிகம் பாடி இறைவனைப் போற்றினார்.
இது நிகழ்ந்தது ஓர் ஆடி அமாவாசையன்றுதான். அப்பர் சிவனிடம் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தாங்கள் எனக்குக் காட்சியளித்த கயிலாயக் காட்சியை இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரவேண்டும் என பிரார்த்தனை செய்தார்.
இதன் காரணமாக ஆண்டுதோறும் இத்தலத்தில் திருக்கயிலாயக் காட்சி ஐதிகப் பெருவிழா நடக்கிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் வருகை தருவர்.
வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை அன்று காலை 10 மணிக்கு திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரிக்கரையில் தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு மேல் திருமுறை இசைத்தமிழ் சேர்ந்திசை வழிபாடும், இரவு 9 மணிக்கு அப்பர் சுவாமிகள் கண்ட திருக்கயிலாயக் காட்சியும் விமரிசையாக நடக்கஇருக்கிறது.
காலை 6 முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 8.30 வரையும் திறந்திருக்கும் திருவையாறு ஐயாறப்பர் கோயில், தஞ்சையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
- தஞ்சாவூர் இரா.சுரேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசை எப்போது?

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

தெய்வ தரிசனம்... குரு தோஷம் நீங்கும் ஐயாறப்பர் கோயில் - திருவையாறு (பகுதி 2)
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



