திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. அத்தகைய மங்கல நிகழ்வின் தொடர்ச்சியாக கணவன், மனைவி இருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை வரமாகத் தரும் மகேசன் அருள்பாலிக்கும் தலம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ள கமுதி.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூர், குண்டாற்றின் கரையில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்கள் இங்கு நாகரிகமாக ஒற்றுமையாக விவசாயத் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த கி.பி. 14}ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தலத்தில் ஆலவாய் அண்ணலின் பெயராலேயே கிழக்குப் பார்த்த வண்ணம் கற்றளியாய் எழுப்பப்பட்ட கோயில்.
நாலாபுறமும் உயர்ந்த திருமதிலுடன் ஊரின் மையப்பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் இருவருக்கும் தனி வாசல்களும் தனி ராஜகோபுரங்களும் அமைந்துள்ளன. மதுரையைப் போல சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பாள் சந்நிதி உள்ளது.
சுவாமி சுந்தரேஸ்வரர் சந்நிதி வாசலில் வானளாவ உயர்ந்த நிலையில் கம்பீரமாக ஏழு நிலை ராஜகோபுரம் விளங்குகிறது. இதனைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், விரிந்து பரந்த உள்சுற்று காணப்படுகிறது.
கிழக்குச் சுற்றில் செப்புக்கவசம் போர்த்திய கொடிமரம், பலிபீடம், பிரதோஷ நந்திதேவர் பீடமும், இதனையடுத்து முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற கட்டமைப்பில் சுவாமி சந்நிதியும் எழிலாகக் காணப்படுகிறது.
மகாமண்டப தென்புறம் வாசல் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. கருவறையில் மூலவராக, சாந்நித்தியமிக்க தெய்வமாக அருள்மிகு சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம் நாகர வடிவில் அமைந்துள்ளது.
சுவாமி சந்நிதியில் நம்பிக்கையோடு நாளும் பல பக்தர்கள் உள்ளம் உருகி மனமொத்தத் தம்பதியராய் வாழவும், குடும்பப் பிரச்னைகள் தீரவும் வேண்டிச் செல்கின்றனர். அவ்வாறு அடியார்கள் வேண்டியது வேண்டிய வண்ணம் இல்லறம் நல்லறமாக நீடிப்பதற்கு இத்தல இறைவன் வரமளித்து அருள்வதாக பலனடைந்தவர் பலரும் பரவசத்தோடு சொல்கிறார்கள்.
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கை சந்நிதிகள் உள்ளன. தலவிருட்சம் வில்வம். தினமும் இருகால பூஜை நடைபெறுகிறது.
சுவாமி சந்நிதியைப் போலவே முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற கட்டமைப்பில் அழகிய கலைப்பாணியில் அம்பாள் சந்நிதியும் கட்டப்பட்டுள்ளது. அம்மன் சந்நிதி பிரதான வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது.
சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளும் சமகாலத்தில் கட்டப்பட்டவை. சுமார் 700 ஆண்டுகள் பழம்பெருமை மிக்கவை. அம்பாள் மீனாட்சி வலக்கையில் நீலோத்பவ மலர் தாங்கியும், இடக்கையைத் தொங்கவிட்டபடியும் கருணாம்பிகையாகக் காட்சியளிக்கிறாள்.
அம்பாள் விமானம் வேசர வடிவில் உள்ளது. உள்சுற்றில் கன்னிமூலை கணபதி, வள்ளி } தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர் ஆகிய பரிவார தேவதை சந்நிதியும், தீர்த்தக் கிணறும் உள்ளன.
சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அஷ்டமி வழிபாடும், ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி ஆகியவையும் சிறப்பாக நடைபெறும். கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு சுவாமி புறப்பாடாகி திருவீதி எழுந்தருள்வார். மார்கழி முழுவதும் திருப்பள்ளியெழுச்சியும், தைப்பூசத்தன்று தீர்த்தவாரியும் நடைபெறும்.
ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கும், பெüர்ணமி தோறும் துர்க்கைக்கும் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. சைவ அடியார்களால் மாதம் தோறும் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இங்கு கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் நவராத்திரி கொலு உற்சவம் முக்கியமானதாகும். ஒன்பது நாள் விழா கொண்டாட்டத்தில் மிக முக்கிய வைபவமான ஒன்பதாம் திருநாள் விஜயதசமி நிகழ்ச்சியை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சார்பாக இன்றைக்கும் அவரது சந்ததியினர் சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்களின் வாழ்க்கை சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும் என்பது உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை. எனவே, ஆண்டு முழுவதும் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தாரால் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வாழ்வின் சகல துயர்கள், பிரச்னைகள் நீங்கி, நிம்மதியான, நலமான, வளமான வாழ்வு வேண்டுபவர்கள் தரிசிக்கவேண்டிய தலம்.
காலை 6.30 மணிமுதல் பகல் 12 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் திறந்திருக்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அருப்புக்கோட்டை } முதுகுளத்தூர் நெடுஞ்சாலையில், 40 கி.மீ. தொலைவில் கமுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் அருகிலேயே கோயில் உள்ளது.
- வெ. கணேசன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளக்குறிச்சி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆடித் தவசு திருவிழா
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



