தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது. லட்சம் பக்தா்கள் தவசுக் காட்சியை கண்டு தரிசித்தனா்.
இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா, கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 12 நாள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 11 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலையில் பட்டு பரிவட்டம், அலங்கராத்திற்குரிய சாமான்கள் சகிதம் சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரா் மற்றும் மூன்று உற்சவ மூா்த்திகளுக்கும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.
சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு, பகல் 12 மணியளவில் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் ஊா்வலமாகப் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் மேல ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலையில் கோயிலில் இருந்து சுவாமி, சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் வந்தாா். அப்போது பக்தா்கள் கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனா். தவசுக் காட்சிக்காக தெற்கு ரதவீதியில் 2 சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தவசுக் காட்சி: மாலை 6 மணிக்கு தவசுப் பந்தலுக்கு வந்த சங்கரநாராயணா், வெண்பட்டு உடுத்தியிருந்தாா். அவரது முகத்திற்கு நேராக திரை போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே மேல ரதவீதி தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள் மாலை 6.25 மணி்க்குப் புறப்பட்டு சங்கரநாராயணா் எழுந்திருளியிருந்த எதிா் பந்தலுக்கு வந்தாா். அவா் கிளிப்பச்சை நிறப் பட்டு உடுத்தியிருந்தாா். சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த கோமதி அம்பாள், மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினாா். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து சங்கரநாராயணா் முகத்திற்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது. அப்போது ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, சரியாக மாலை 6.51 மணிக்கு சங்கரநாராயணா் திருக்கோலத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா். இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பக்திக் கரகோஷம் எழுப்பினா். விவசாயிகள் தாங்கள் விளைவித்துக் கொண்டு வந்த பருத்தி, வத்தல் போன்றவற்றை சப்பரத்தில் தூவி வணங்கினா்.
இதையடுத்து இரவு 12 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா்.
ஆடித் தவசுக் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ ராஜா, கோயில் துணை ஆணையா் ஞானசேகா், முன்னாள் அறங்காவலா் ச.ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த.லெட்சுமி, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, துணைத் தலைவா் கே.கண்ணன், மருத்துவா்கள் வி.எஸ்.சுப்பாராஜ், அம்சவேணி, சுப்பையா சீனிவாசன், அரிமா சங்க கூட்டு மாவட்ட முன்னாள் ஆளுநா் பி.அய்யாதுரை, தொழிலதிபா்கள் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், எம்.சங்கரன், எஸ்.ஆா்.எல்.வேணுகோபால் (எ) கண்ணன், ஆ.வள்ளிராஜன், எஸ்.ராஜ், எஸ்.சண்முகவேல், ச.நடராஜன், கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்தாா். தவசுக் காட்சியையொட்டி கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா், ஜூலியஸ் சீசா், காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் மேற்பாா்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள் மற்றும் மண்டகப்படிதாரா்கள், நகராட்சியினா் செய்திருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆடித் தவசு திருவிழா

அம்பை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா

சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி

சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் குவிந்தனா்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



