முன்னோர் ஆசி நல்கும் திருக்காஞ்சி!

சங்கராபரணி நதிக்கரையில் அமைந்த ஆன்மிகத் தலம் பற்றி...

Published On :

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகைச் சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற புண்ணிய தலம், புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் எல்லைக்குட்பட்ட திருக்காஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி, மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் திருக்கோயில்.

தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்கச் சென்ற பக்தர் ஒருவர், வழியில் இங்குள்ள சங்கராபரணி நதிக்கரையில் தங்கியிருந்தபோது, அஸ்தி கலசத்தில் இருந்த சாம்பல் மலர்களாக மாறியதாக ஒரு மரபுவழிச் செய்தி உண்டு.

கிழக்கே கடலை நோக்கிப் பயணிக்கும் சங்கராபரணி நதி, திருக்காஞ்சிப் பகுதியில் வடக்கு முகமாகத் திரும்பிப் பாய்வதால் ஆன்மிக மரபில் "உத்தரவாகினி' எனப் போற்றப்பட்டு கங்கைக்கு இணையான தீர்த்தப் புனிதத்தைப் பெறுகிறது.

மூலவர் கெங்கவராக நதீஸ்வரர், பதினாறு பட்டைகளுடன் கூடிய மிக அரிதான சோடச லிங்க வடிவில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் உள்ளார். மேற்கு நோக்கிய ஈசனைத் தரிசித்து வழிபடுவதன் மூலம் வாழ்க்கையின் இன்னல்களும் பிணிகளும் அகலும் என்பது நம்பிக்கை.இத்தலத்தில் காமாட்சி, மீனாட்சி என இரு அம்பிகைகளும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி ஒருசேர அருள்பாலிப்பது சிறப்பு. மேலும், ஆலய வளாகத்தில் துண்டி விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர், தனிச் சந்நிதி கொண்டுள்ள லட்சுமி வராகர், அகத்தியர் லோபமுத்திரை தம்பதியர், சிவகாமி சமேத நடராஜர், மாணிக்கவாசகர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் அமைந்துள்ளனர்.

நவகிரகங்கள், பொங்கு சனீஸ்வரர், சிறப்பு வழிபாட்டு மூர்த்திகளான ராகு } கேது, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், ஜேஷ்டா தேவி, மங்கள வாராஹி, சரபேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கை போன்ற தெய்வ வடிவங்களும் அருள்கின்றனர்.

தலபுராண மரபின்படி, தென்திசை நோக்கி யாத்திரை வந்த அகத்திய மாமுனிவர், இச்சோடச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அம்மையப்பனின் திருமணக் கோலக் காட்சியைக் கண்டருளியதாக நம்பப்படுகிறது.

இத்தலத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் வரலாற்றுத் தொன்மைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

இயற்கைச் சீற்றங்களாலும் வெள்ளப்பெருக்காலும் ஆலயம் பாதிக்கப்பட்ட காலங்களிலும், வழிபாட்டு நெறி தடைபடக் கூடாது என்ற ஆழ்ந்த பக்தி உணர்வில் அர்ச்சகர் ஒருவர் வெள்ளத்தில் நீந்திச் சென்று, சுவாமிக்கு பூஜை செய்த நெகிழ்ச்சியான நிகழ்வு தலவரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய பக்திப் பாரம்பரியமே காலந்தோறும் இத்தலத்தைப் புனரமைத்துப் பாதுகாக்கும் வலிமையை மக்களுக்கு அளித்துள்ளது.

சனிக்கிழமைகளில் மாலை வேளையில் சங்கராபரணி நதிக்கு நடத்தப்படும் மகா ஆரத்தி நிகழ்வு ஆன்மிகப் பரவசத்தை ஊட்டுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத் தீர்த்தவாரி விழாவில், நீத்தார் நினைவாக தர்ப்பணம் செய்வது இத்தலத்தின் முக்கிய வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். அந்த வழிபாட்டுத் தொடர்ச்சியாக, முன்னோர்களுக்குரிய வழிபாட்டில் தலையாயதாகக் கருதப்படும் மகாளய அமாவாசை திருநாளில் ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி நதிக்கரையில் திரண்டு பித்ரு தர்ப்பணம் செய்து பலன் பெறுகின்றனர். மகாளய அமாவாசை மற்றும் மாசிமக விசேஷ நாள்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சங்கராபரணி நதியின் தென்கரையில் அமைதியாகக் கொலுவிருக்கும் கெங்கவராக நதீஸ்வரரையும் இரு அம்பிகைகளையும் உளமார வணங்கி வழிபடுவோர், பித்ரு தோஷங்கள் நீங்கி முன்னோர்களின் ஆசியையும் நல்வாழ்வையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவிலும், வில்லியனூரிலிருந்து தெற்கே சுமார் 4.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

- முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.