அஸ்தி பூவாக மாறிய அதிசயம்! காசிக்கு நிகரான சிவத்தலம்!
முன்னோர்களின் சாபம் நீக்கும் அற்புதத் திருத்தலம் பற்றி..

அருள்மிகு ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம்
புதுச்சேரியின் திருக்காஞ்சியில் அருள்பாலிக்கும் அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரர் கோயிலின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
காசியில் உள்ள சிவாலயம் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதேபோன்று புதுச்சேரி திருக்காஞ்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு.

இந்த கோயில் சங்கராபரணி நதிக்கரையில் அமைந்துள்ளபோதும், இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்பதை அறிந்துகொள்ளலாம் .
இந்த கோயிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு பூர்வ ஜென்ம பாவ தோஷங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்றும் நம்பப்படுகிறது. இத்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்குப் பின் புராண வரலாறு ஒன்றும் உள்ளது.

புராண வரலாறு
ஒரு சமயம் அந்தனர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்கப் புறப்பட்டுச் சென்றுள்ளார். புதுச்சேரியின் திருக்காஞ்சியில் வந்தபோது அவரது மாலை நேரக் கடமையைச் செய்யும்பொருட்டு, அஸ்தியை அவனது சீடனிடம் தந்துவிட்டுச் செல்ல, ஆர்வத்தின் மிகுதியால் சீடன் அதைத் திறந்துபார்க்க அனைத்தும் வாசனை மலராக மாறியிருந்தது.
இருவரும் கங்கைக்குச் சென்று, நீராடி அஸ்தியை கரைப்பதற்கு பிரித்தபோது அஸ்தி இருந்தது. அதைப் பார்த்த சீடனுக்கு பெரும் அதிர்ச்சி. உடனே திருக்காஞ்சியில் பார்த்தபோது பூக்களாக இருந்தது என்று குருநாதரிடம் கூறினார். இதைப் பரிசோதித்துப் பார்க்க அஸ்தியைக் கரைக்காமல், மீண்டும் திருக்காஞ்சி சென்றனர். அங்குப் பிரித்துப் பார்க்கும்போது மீண்டும் வாசனை மலராக மாறியிருந்தது.

அஸ்தி பூவாக மாறிய அதிசயம்
அஸ்தியைப் பூக்களாக மாற்றும் சக்தி இந்த தலத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற தலம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். அந்த சமயம் அவருக்கு, காசியில் செய்யவேண்டிய பிதுர் கர்த்தாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.
அந்த அஸ்தி பூவாக மாறிய அற்புதமான நாள், மாசி மாதம் மகம் நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாள். எனவே, மாசி மாத பெருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் புதுச்சேரி மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தும் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். காமாட்சி, மீனாட்சி என இரு பெரும் தேவியர் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோயிலின் கருவறையைப் போன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வராகி அம்மன்
இக்கோயிலில் வராகி அம்மனுக்கென்று தனி சன்னதி உள்ளது. தேய்பிறை பஞ்சமி தினத்தன்று நடைபெற்றுச் சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டால் சகல வெற்றிகளும் கிடைக்கும்.
கங்கா ஆரத்தி
திருக்காஞ்சியில் மேலும் சிறப்பாகக் கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் கங்கா ஆரத்தி என்ற நிகழ்வு இவ்வாலயத்தில் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு மேல் கோயிலையொட்டியுள்ள சங்கராபரணி ஆற்றில் நடைபெறுகிறது.

இந்த மகா ஆரத்தியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், திருக்காஞ்சி கங்காவராக நதீஸ்வரர் ஆலய சங்கராபரணி ஆற்றில் தங்களது வேண்டுதலையும் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள் பல இருப்பதாக சில குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.
எப்படிச் செல்லலாம்?
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வில்லியனூரில் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. வில்லியனூர் பேருந்து நிறுத்தம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
பழமையும் காசிக்கு நிகரான பெருமையும் கொண்ட அருள்மிகு திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரரை வழிபட்டு, முன்னோர்களின் சபங்களில் இருந்து விடுபடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

