லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தேவர்களைக் காத்த நாயகன்!

விநாயகரின் முப்பத்திரண்டு தோற்றங்களில் எட்டாவது வடிவமான உச்சிஷ்ட கணபதி..

Published On :

விநாயகரின் முப்பத்திரண்டு தோற்றங்களில் எட்டாவது வடிவமான உச்சிஷ்ட கணபதி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ளது.

எண்ணூறுஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோயிலில் மூலவரான விநாயகர் நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தியபடி காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன், பிரம்மாவை நினைத்துக் கடுந்தவம் புரிந்தான். காட்சி அளித்த பிரம்மாவிடம் வித்யாகரன், ""என்னை போரில் வெல்லக் கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ, அகோரமானவனாகவோ இருக்கக்கூடாது. தேவ, அசுர சபைகளின் முன் யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்தவேளையில் அவன் தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்கவேண்டும்'' என்ற அரிய வரத்தைக் கேட்டான்.

பிரம்மாவும் வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்டோர் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரணடைந்தனர்.

மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை மனதில் நினைத்து யாகத்தை நடத்தினர். யாகத் தீயில் இருந்து அஷ்டமி திதியில் விநாயகர் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதிலிருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதியை திருமணம் செய்து வைத்தனர்.

மும்மூர்த்திகளும் இந்திரனிடம் வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் போரிட கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி தனது மனைவியான

நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமரச் செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து, அதே கோலத்துடன் வில்லும் அம்பும் ஏந்தியபடி காட்சிதந்தார். அப்பொழுது விநாயகர் ஒரு கோடி சூரியன்களின் ஒளியாய் பிரகாசித்தார்.

விநாயகரைப் பார்த்த வித்யாகரன் அவருடைய ஒளிக் கதிர்வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்தான்.

அப்போது முனிவர்கள் மகிழ்ந்து விநாயகரிடம், ""நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே

வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும்'' என்று வேண்டினர்.

இதற்கு இசைந்து விநாயகரும் சூரிய பகவானின் தேரில் ஏறி மணிமூர்த்தீஸ்வரத்தில் காட்சியளித்தார்.

கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச் சுவருடன் கம்பீரமாக அமைந்துள்ளது. கோயில் கோபுரத்தின் முன்புறமும் பின்புறமும் பதினாறு விதமான விநாயகர் உருவங்கள் அமர்ந்த, நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக உள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், உயர்ந்த கொடிமரம், பலிபீடத்துடன் அமைந்துள்ளன.

கொடிமண்டபத்துக்கு வடக்குப் பக்கம் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ரிஷி தீர்த்தம், ருத்ர பாதத் தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. பனைமரம், வன்னி மரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

உள்பிரகாரத்தில் வல்லப கணபதி, சக்தி கணபதி, ருண

ஹரண கணபதி உள்ளிட்ட 16 கணபதி மூர்த்தங்கள் உள்ளன. இருதேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி புத்தி கணபதி சிலைகள் கோயிலில் அமைந்தது சிறப்பாகும்.

விநாயகர் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் அவரை வழிபட கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண வரம் கைகூடும். குறிப்பாக, தேங்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடைகள் அகன்று, விரைவில் திருமணம் கைகூடும், வாழ்வில் சகல உயர்வுகளும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்துக்கு சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீருவதற்கு கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

பெரிய விழாவாக விநாயகர் சதுர்த்தி கொடியேற்றத்துடன் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வழிபாடு, திருவீதி உலாவும் நடக்கின்றன. எட்டாம் திருநாளன்று மூலஸ்தான உச்சிஷ்ட கணபதிக்கு 1008 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி போன்ற முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சித்திரையின் முதல் மூன்று நாள்கள் சூரியன் தன் பொற்கிரணங்களால் விநாயகரை வணங்குவதான வகையில் சூரிய ஒளி கருவறை விநாயகர் திருமேனியில் பரவுகின்ற அற்புத காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

தரிசனத்துக்காக காலை 8 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 6 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் திறந்திருக்கும் உச்சிஷ்ட கணபதி கோயில், திருநெல்வேலி நகரில், மணிமூர்த்தீஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

-ஆர்.ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.