லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

விநாயகரின் 32 திருக்கோலங்களும், ரகசியங்களும்!

விநாயகப் பெருமானின் திருக்கோலங்கள் பற்றி..

 Lord Vinayaka

விநாயகர் - கோப்புப்படம்

Published On :

2026-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. விநாயகர் என்று நாம் அழைக்கும் பிள்ளையார் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளுகிறார்.

எந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினாலும் விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் ஆரம்பிக்க முடியாது. விக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை நினைத்துக்கொண்டு, விளையாட்டில்கூட முதல் ஆட்டத்தை, பிள்ளையார் ஆட்டம் என்று ஆடி விட்டு, கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்துக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி வணங்குவார்கள். இதனை பெரிய விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடுவார்கள். இந்த விநாயகச் சதுர்த்தி தினத்தில் பலரின் இஷ்ட தெய்வமான பிள்ளையாரைப் பற்றிய சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

பிள்ளையாரின் பல வகைகளைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு வகை பிள்ளையாருக்கும் ஒரு பெயர் கூறப்படுவதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் எந்த மாதிரி அமைப்புள்ள பிள்ளையார், என்ன பெயரில் போற்றப்படுகிறார் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கணேச புராணத்தில், விநாயகர் வகைகள் முப்பத்து இரண்டாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.

யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகப்பெருமான், ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு சிறப்பு பெயர் பெற்று பக்தர்களுக்கு அருளிபாலித்து வருகின்றார். அந்தவகையில் விநாயகப் பெருமான் 32 திருக்கோலங்களை பற்றி பார்ப்போம்.

1. பால கணபதி

குழந்தையைப் போன்ற திருமேனியை உடையவர். செங்கதிரைப் போன்ற நிறத்தினை உடையவர். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கிய நான்கு திருக்கரங்களை உடையவர்.

2. தருண கணபதி

நல்ல சிவந்த திருமேனியைக் கொண்டவர். பாசம், அங்குசம், ஒடிந்த கொம்பு, கரும்புத்துண்டு, நெற்கதிர், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவைகளை அஷ்ட திருக்கரங்களில் ஏந்தியவர்.

3. பக்தி கணபதி

வெண்மையான நிறத்தினை உடையவர். நான்கு திருக்கரங்களிலும், பாயஸக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் இவற்றைத் தாங்கியவர்.

5. சத்தி கணபதி

அந்தி வானம் போன்ற நிறத்தை உடையவர், பச்சை நிறத்திலான தேவியை, இடுப்பில் ஒரு கை கொடுத்து தழுவுவது போல காட்சி கொடுக்கிறார். அபயஹஸ்தம், பாசம், பூமாலையைத் தாங்கியவர்.

6. துவிஜ கணபதி

வெண்மையான நிறத்தினைக் கொண்ட இவருக்கு, நான்கு முகங்கள் உண்டு. புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.

7. சித்தி கணபதி

பொன் நிறமும், பசுமை நிறமும் கலந்த நிறமுடைய இவர், தன் நான்கு திருக்கரங்களில், பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றுடன் துதிக்கையில் மோதகத்தையும் தாங்கியவர்.

8. உச்சிஷ்ட கணபதி

நீல நிறத்தில் காட்சியளிக்கும் இவர், ஆறு திருக்கரங்களில், இரண்டில், நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதிர், அட்சமாலை, வீணை ஆகியவற்றை ஏந்தியவர்.

இன்னொரு வகையில், காம மோகிதராக, பெண்ணின் மேனியில் துதிக்கையை வைத்தவராகக் காணப்படுகிறார்.

9. விக்ன கணபதி

ஸ்வர்ண நிறத்தைக்கொண்ட இவர், பத்து திருக்கரங்களில், சங்கு, சக்கரம், கோடரி, ஒடிந்த கொம்பு, கரும்பு வில், பாணம், புஷ்ப பாணம், பூங்கொத்து, பாசம், மாலை ஆகியவற்றோடு காணப்படுகிறார்.

10. ஷிப்ர கணபதி

செந்நிறத்தை உடையவர். ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், ரத்ன கும்பத்தை துதிக்கையிலும் கொண்டவர்.

11. ஹேரம்ப கணபதி

இவர் ஐந்து முகங்களை உடையவர். பத்து திருக்கரங்களில், இரண்டு அபய, வரத முத்திரைகளைத் தாங்குவதோடு, இதர கரங்களில், பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை, மோதகம், பழம் இவர்களைத் தாக்கியுள்ளார்.

12. லட்சுமி கணபதி

வெண்மையான நிறத்தினை உடையவர். நீல நிறத்தில் தாமரைப்பூவை ஏந்திய இரு தேவிமாருடன் காணப்படுபவர். அஷ்ட திருக்கரங்களிலும், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம், வரதம், கிளி மாதுளம் பழம் ஆகியவைகளோடு திகழ்பவர்.

13. மகா கணபதி

செம்மையான நிறத்தினையும், பத்து திருக்கரங்களையும், மூன்று கண்களையும், முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவியை இடது துடையில் இருத்தி, ஒரு கையால் அணைத்தும், இதர கரங்களில், கதை, கரும்பு, வில், சக்கரம், பாசம், தந்தம், ரத்ன கலசம், நெற்கதிர், நீலோத்பலம், மாதுளம் பழம் ஆகியவற்றைத் தாங்கியவர்.

14. விஜய கணபதி

பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவராகக் காணப்படும் இவர், செந்நிறத்தவர். பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.

15. நிருத்த கணபதி

பொன் போன்ற மேனியை உடையவர். ஆறு திருக்கரங்களை உடையவர். மோதிரங்கள் அணிந்த கரங்களில், பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் ஆகியவற்றைத் தாங்கி, கற்பக விருட்சத்தின் கீழ் எழுந்தருளி இருப்பவர். இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் கூறுவதுண்டு.

16. ஊர்த்துவ கணபதி

தங்க நிறத்தில் காணப்படும் இவருக்கு ஆறு திருக்கரங்கள் உண்டு. தாமரை மலரை தாங்கிய கரத்தால், பச்சை நிற மேனியளான தேவியை அணைத்தவண்ணம், தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏனைய கரங்களில் கொண்டவர்.

17. ஏகாட்சர கணபதி

செந்நிறத்தை உடையவரும், செந்நிற ஆடையை தரித்தவரும், செம்மலர் மாலையை அணிந்தவருமான இவர், பத்மாசனத்தில் காணப்படுகிறார். பெருச்சாளி வாகனத்தில் ஏறிய இவருக்கு மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனும் உண்டு.

18. வர கணபதி

சிவந்த நிறத்தை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார். பிறை முடியராக இருக்கும் இவருக்கு மூன்று நேத்திரங்களுண்டு.

19. திரயாக்ஷர கணபதி

பொன்னிற மேனியனான இவர், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.

20. க்ஷிப்ரபிரசாத கணபதி

பேழை வயிற்றினைக் கொண்டு, ஆபரணங்கள் சூடி ஆறு திருக்கரங்களோடு காணப்படுகிறார். பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை, ஆகியவற்றையும் ஒரு கரம் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.

21.ஹரித்ரா கணபதி

மஞ்சள் நிறம் கொண்ட இவர், பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக விளங்குகிறார்.

22. ஏகதந்தி கணபதி

நீல மேனியரான இவருக்கு, பேழை வயிறு காணப்படுகிறது. கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு இவைகளை, நான்கு திருக்கரங்களில் தாங்கியவராகக் காணப்படுகிறார்.

23. சிருஷ்டி கணபதி

சிவந்த மேனியை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் தாங்கியவர். பெருச்சாளி வாகனத்தில் ஏறியவராகக் காட்சி கொடுக்கிறார்.

24. உத்தண்ட கணபதி

பத்து திருக்கரங்களில், பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை ஏந்தியவர். இவரின் இடது துடையில், பச்சை நிற மேனியளான தேவியை ஏற்றிருப்பவர்.

25. ரணமோசன கணபதி

வெண்பளிங்கு போன்ற மேனியை உடையவராய், செந்நிறப் பட்டாடை உடுத்தியவராய் தோற்றமளிக்கும் இவர், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராகக் காணப்படுகிறார்.

26. துண்டி கணபதி

நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

27. துவிமுக கணபதி

இவருக்கு இரு முகங்கள் உண்டு. பசுமையான நீலநிறத்தவர். செம்பட்டாடை உடுத்தியவராய், தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.

28. மும்முக கணபதி

பொற்றாமரை ஆசனத்தில் மூன்று முகங்களோடு காணப்படுபவர். சிவந்த மேனியை உடையவர். பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார்.

29. சிங்க கணபதி

வெண்மையான நிறத்தினை உடையவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளி இருப்பவர்.இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும், ஆறு திருக்கரங்களில், வீணை, கற்பகக் கொடி, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தைத் தாங்கியவர்.

30. யோக கணபதி

இளஞ்சூரியன் நிறத்தில், இந்திரநீல நிற ஆடையை தரித்தவரான இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கி, யோக நிலையில் இருப்பவராகத் தோற்றமளிக்கிறார்.

31. துர்க்கா கணபதி

பசும் பொன் நிறத்தவரான இவருக்கு எட்டு திருக்கரங்கள் உண்டு. அவைகளில், அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கிய பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.

32. சங்கட ஹர கணபதி

இளஞ்சூரியன் நிறத்தில், இடப்பாகத் துடையில், நீல நிற பூவை ஏந்திய தேவியை ஏந்தியவர். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரைப் பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பவர். வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.