ஆப்கனில் ஷியாக்கள் மீது தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் பலி- ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஷியா பிரிவினரைக் குறி வைத்து வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கனின் காபூல் நகர ஷியா பிரிவு கலாசார மையத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வெடித்த குண்டுகளிலிருந்து தப்ப பாதுகாப்பான இடம் நோக்கி ஓடி வரும் நபர்.
ஆப்கனின் காபூல் நகர ஷியா பிரிவு கலாசார மையத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வெடித்த குண்டுகளிலிருந்து தப்ப பாதுகாப்பான இடம் நோக்கி ஓடி வரும் நபர்.
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஷியா பிரிவினரைக் குறி வைத்து வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
காபூலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாபயான் கலாசார மையத்தில் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
அந்த மையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக துணைச் செய்தியாளர் நஸ்ரத் ரஹீமி கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ராணுவம் படையெடுத்ததன் 38-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி, ஷியா பிரிவினரின் தாபயான் கலாசார மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, உடலில் வெடிகுண்டை மறைத்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயங்கரவாதி ஒருவர், கூட்டத்தினரிடையே அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
மிகவும் சக்தி வாய்ந்த அந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அந்தப் பகுதியிலிருந்து அலறியடித்தபடி தப்பியோட முயன்றபோது மீண்டும் சிறிய அளவிலான குண்டுகள் வெடித்தன.
இந்தத் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர் என்றார் அவர்.
ஷியா பிரிவினருக்கான மசூதியில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதற்குப் பிறகு, அந்தப் பிரிவினருக்கு எதிரான மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
ஆப்கனிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை அண்மையில் தீவிரப்படுத்தியுள்ளதால், தலைநகர் காபூலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளும் தங்களது செல்வாக்கை அதிகரித்து வருகின்றனர்.
அந்த நாட்டில் அண்மைக் காலமாக நடத்தப்பட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவர்கள் பொறுபேற்றனர்.
சன்னி பிரிவைச் சேர்ந்த தலிபான்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஷியா பிரிவினரைக் குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
காபூலில் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் கடந்த மே மாதம் நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த லாரி குண்டு தாக்குகலில் 150 பேர் உயிரிழந்தனர். 
இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காக அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நகரில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com