பாகிஸ்தான்: புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க இன்று நாடாளுமன்றக் கூட்டம்

பாகிஸ்தான்: புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க இன்று நாடாளுமன்றக் கூட்டம்

பாகிஸ்தானின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை (ஆக. 17) கூடுகிறது.
Published on


பாகிஸ்தானின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை (ஆக. 17) கூடுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்  இந்தக் கூட்டத்தில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றின.
இந்தச் சூழலில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், நியமன எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் இறங்கினார். அவரது கட்சிக்கு பெண்கள் உறுப்பினருக்கான 28 இடங்களும், சிறுபான்மையினருக்கான 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், 9 சுயேச்சை உறுப்பினர்களும் இம்ரான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சியின் பலம் 158ஆக உள்ளது. 
மேலும், 7 எம்.பி.க்களைக் கொண்ட முத்தாஹிடா குவாமி இயக்கம், 5 இடங்களைக் கொண்ட அவாமி கட்சி, 4 உறுப்பினர்களைக் கொண்ட பலூசிஸ்தான் தேசியக் கட்சி, 3 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக், 3 இடங்களைக் கொண்ட ஜனநாயக மகாக் கூட்டணி, தலா ஒரு எம்.பி.க்களைக் கொண்ட அவாமி முஸ்லிம் லீக், ஜமோரி வதன் கட்சி ஆகியவை இம்ரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இம்ரானுக்கு எதிராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்என்-எல்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இவருக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரதமர் பதவி வேட்பாளர் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிபிபி விடுத்த கோரிக்கையை பிடிஐ ஏற்கவில்லை. இதன் காரணமாக, இம்ரானுக்கு எதிரான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், எதிரணியைவிட 30 முதல் 35 வாக்குகள் அதிகம் பெற்று இம்ரான் வெற்றி பெறலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
அந்த நாட்டு வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்