ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் அதிபர், நீதிபதிகள் மீது மாலத்தீவு அரசு புகார்

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் அதிபர், நீதிபதிகள் மீது மாலத்தீவு அரசு புகார்
Updated on
1 min read

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிபர் யாமீன் அப்துல் கயூம் தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கான சதிச் செயலில் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் ஈடுபட்டார்.
இதற்காக, அரசுக்கு எதிரான கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு அவர் ஏராளமான தொகையை லஞ்சமாக அளித்தார்.
இதன் காரணமாக, ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டனர். நெருக்கடி நிலை அறிவிப்புக்குப் பின் நடத்தப்பட்ட சோதனைகளில், சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 லட்சம் 
டாலர் (சுமார் ரூ.1.3 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், தனது பதவிக் காலத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகமதுவைக் கைது செய்ய உத்தரவிட்டதற்காக, அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, அரசியலில் அப்துல்லா யாமீனுக்கு எதிராகச் செயல்பட்ட பலருக்கும் எதிராக, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தலில் எதிர்ப்புகளே இல்லாமல் வெற்றி பெற்று யாமீன் அப்துல் கயூம் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்துடன் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
மேலும், ஆளுங்கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இதையடுத்து, அந்த 12 பேருக்கும் மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டிய சூழல் நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டது. 
அந்த 12 பேருக்கும் எம்.பி. பதவி வழங்கப்பட்டால், அவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் பெற முடியும் எனவும், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கருதப்பட்டது.
இத்தகையச் சூழலில், நாடாளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு சனிக்கிழமை அறிவித்தது. மேலும், மாலத்தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலையை அதிபர் யாமீன் கயூம் கடந்த வாரம் பிரகடனப்படுத்தினார். 
அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரையும், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூமையும் 
பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com