மாலத்தீவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய நாடாளுமன்றம் வழங்கிய ஒப்புதலை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதற்கு தனது ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
மாலத்தீவில் ஒரு மாதத்துக்கு நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் அப்துல்லா யாமீன் கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முன்னாள்அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், அந்த நெருக்கடி நிலை காலம் நிறைவடையவிருந்த நிலையில், மேலும் அதனை 30 நாள்களுக்கு நீட்டிக்க அப்துல்லா யாமீன் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், நெருக்கடி நிலையை நீட்டிக்க உச்ச நீதிமன்றமும் தனது ஒப்புதலை கடந்த புதன்கிழமை வழங்கியது.
முன்னதாக, நெருக்கடி நிலையை நீட்டிப்பதற்கு மாலத்தீவு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது அந்நாட்டு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்தது.
மாலத்தீவில் நடைபெறும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காண இந்தியா அப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான நஷீத் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'ஐ.நா. சபை தலையீடு வேண்டாம்': மாலத்தீவில் நிலவிவரும் அரசியல் குழப்பத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என்று ஐ.நா. சபை விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அதிபர் யாமீன் வியாழக்கிழமை நிராகரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.